search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament bill"

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. #indianparliament
    புதுடெல்லி:

    சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை உள்பட கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சிறுமிகளை கற்பழித்து கொலை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த அவசர சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.

    அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தாலும் அது 6 மாத காலத்துக்குத்தான் செல்லுபடியாகும். அதற்குள் இது தொடர்பான மசோதாவை இயற்றி பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

    இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் சிறுமிகள் கற்பழிப்பு தொடர்பான கிரிமினல் சட்டம் (திருத்தம்) பற்றி புதிய மசோதாவை தயாரித்துள்ளது. அவசர சட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து சாராம்சங்களும் அந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்த கிரிமினல் சட்ட மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் இந்த சட்ட மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் பெறப்பட உள்ளது.

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த வாரம் புதன்கிழமை (18-ந்தேதி) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் கிரிமினல் சட்டம் (திருத்தம்) மசோதா 2018 தாக்கல் செய்யப்படும். இந்த சட்டத்துக்கு ஏற்கனவே அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதால் இந்த மசோதா எந்த இடையூறும் இல்லாமல் எளிதாக நிறை வேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரங்களை மிகவும் கட்டுப்படுத்தும் வகையில் அந்த மசோதாவில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால், குற்றவாளிக்கு உடனே தூக்கு தண்டனை வழங்க அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல பெண்களை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனையின் கால அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



    தற்போது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்படுகிறது. இதை 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்னையாக அதிகரிக்க தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவில் கூறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க புதிய மசோதாவில் உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறையின் இந்த வரைவு மசோதாவில் 16 வயதுக்குட்பட்ட இளம் பெண்களை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு வழங்கப் படும் தண்டனை காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இளம்பெண்களை கற்பழிப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. அதை 20 ஆண்டுகளாக அதிகரிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சிறுமியரை கூட்டாக கற்பழிக்கும் கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கவும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் படி 16 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள், சிறுமிகளை கற்பழித்ததாக கைது செய்பவர்களுக்கு இனி முன் ஜாமீன் வழங்கப்பட மாட்டாது.

    கற்பழிப்பு குற்றவாளிகள் மீதான வழக்கு விசாரணையை 2 மாதத்துக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவும் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து குற்றவாளி அப்பீல் செய்தால் அந்த மேல்முறையீடு மனு மீது 6 மாதத்துக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசு கொண்டு வரும் இந்த கிரிமினல் சட்ட திருத்தம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது.#indianparliament
    ×