search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi photo"

    • கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் திடீரென நீக்கப்பட்டது.
    • பிரதமர் புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    உலகையே உலுக்கிய கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முக்கியமானது. இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வினியோகம் செய்தது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் போட்டுக்கொண்டனர்.

    இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் அது தொடர்பான விளைவுகளை உருவாக்கும் என இங்கிலாந்து கோர்ட்டில் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

    இந்த மருந்தை இந்தியாவில் அனுமதித்ததற்காக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் சாடி வருகின்றனர்.

    கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான கோவின் சான்றிதழை மக்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக கோவின் எனப்படும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சிலர் பதிவிறக்கம் செய்ய முயன்றனர். அப்போது அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. கோவிஷீல்டு சர்ச்சையை ஒட்டி அவரது புகைப்படம் நீக்கப்பட்டதா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி, இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டனர்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்துவருகிறது. எனவே, பிரதமர் மோடியின் புகைப்படம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    மேலும், இப்படி நடப்பது முதல் முறை அல்ல. கடந்த 2022-ம் ஆண்டு உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலின் போதும் இதேபோன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டது எனவும் தெரிவித்துது.

    ×