search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobile Service"

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சிம் கார்டு இல்லாத செல்போன் சேவை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BSNL


    இந்தியா முழுக்க சிம்கார்டு இல்லாமல் செல்போன் பேசும் புதிய தொழில்நுட்பத்தை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்தது. புதிய பி.எஸ்.என்.எல். சேவை விங்ஸ் என அழைக்கப்படுகிறது.

    தகவல் தொடர்பு துறையில் தனியாருக்கு போட்டியாக மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தற்போது வை-பை அடிப்படையில் செயல்படக்கூடிய பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது.

    இந்த புதிய வசதிக்கு சிம்கார்டு தேவையில்லை. 10 இலக்க எண் மட்டும் வழங்கப்படும். ஸ்மார்ட்போனில் இதற்கான ஆப் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். இதற் கான ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.1099 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு கட்டணம் செலுத்தியவுடன் 10 இலக்க எண் வழங்கப்படும்.

    வை-பை இணைப்பு அல்லது செல்போன் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். இது இண்டர் நெட் ‘புரோட்டோகால்’ மூலம் செயல்படக் கூடியது. எந்த நெட்வொர்க்கிற்கும் பேசலாம். பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற்றவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை. வேறு நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.


    கோப்பு படம்

    மொபைல் போனில் இருந்து லேண்ட்லைனுக்கும் பேசலாம். சிக்னல் மோசமாக உள்ள பகுதியில் கூட இந்த தொழில்நுட்பம் மூலம் பேச முடியும். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு எவ்வித கட்டணமின்றி பேசலாம். இப்போது ‘வாட்ஸ்-அப் கால், ஸ்கைப் போன்றவற்றின் மூலம்தான் தொடர்பு கொள்ள முடிகிறது.

    ஆனால் சிம்கார்டு இல்லாத இந்த புதிய வசதியின் மூலம் எவ்வித கட்டணமின்றி வெளிநாட்டில் உள்ளவர்கள் நம்நாட்டில் உள்ளவர்களுடன் பேசலாம். இதுதவிர வை-பை வசதி உள்ள பேருந்து நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுவான இடங்களுக்கு செல்லும்போது தங்கு தடையின்றி இந்த வசதியை பெற முடியும்.

    இதுகுறித்து சென்னை டெலிபோன்ஸ் துணை பொது மேலாளர் ஜி.விஜயா கூறியதாவது:-

    நாட்டிலேயே இந்த புதிய தொழில்நுட்பத்தை பி.எஸ். என்.எல்.தான் முதன் முதலில் அறிமுகம் செய்கிறது. இந்த வசதியை பெற பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த நெட்வொர்க் வைத்திருந்தாலும் பதிவு செய்யலாம். சிம்கார்டு இல்லாமல் 10 இலக்க எண் மூலம் பேசலாம்.

    வெளிநாட்டில் வசிக்க கூடியவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு கட்டணமின்றி செல்போன் மற்றும் லேண்ட்லைனில் பேச முடியும். இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டது. இதுவரையில் 4000 பேர் இந்த திட்டத்தில் சேர பதிவு செய்துள்ளனர். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் பி.எஸ்.என்.எல். விங்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×