search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Forest Department"

    முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்கு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். #MullaperiyarDam
    கூடலூர்:

    திருச்சியில் தமிழக பொதுப்பணித்துறை மேலாண்மை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நீர்மேலாண்மை குறித்து பொதுப்பணித்துறை என்ஜினீயர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    அணை, மதகு, நீர்வரத்து, வெளியேற்றம், மின்சார உற்பத்தி உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்க அணைகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வார்கள். இதேபோல் 30 என்ஜினீயர்கள் கொண்ட குழுவினர் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இடுக்கி அணையை பார்வையிட்டனர்.

    பின்னர் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட தேக்கடி வந்தனர். இது குறித்து கேரள வனத்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி தேக்கடிக்கு வந்த தமிழக என்ஜினீயர்களை நுழைவு வாயிலிலேயே கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஷில்பாகுமார், எங்களுக்கு முறையான தகவல் வரவில்லை. எனவே என்ஜினீயர்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

    இதனால் தலைமதகு பகுதி, போர்பைடேம் ஆகியவற்றை மட்டும் பார்வையிட்டனர். எனவே குழுவினர் தேனியில் தங்கி உள்ளனர். பெரியாறு, வைகை பாசன பிரிவில் உள்ள அணைகள் மற்றும் கால்வாய்களை பார்வையிட உள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தகவல் முறையாக தெரிவிக்கப்பட்ட பிறகும் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது குறித்து மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர். இது பற்றி விவசாயிகள் தெரிவிக்கையில், கேரள வனத்துறையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அதிகாரிகளும் கண்டுகொள்ளாமலேயே உள்ளனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். #MullaperiyarDam

    ×