search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK Shiva Kumar"

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல் மந்திரியாக நியமிக்கப்படுவதால், டி.கே சிவகுமாரை மாநில தலைவர் பதவியில் அமர்த்த ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Congress #DKShivaKumar
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் குமாரசாமி முதல் மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இந்த மந்திரி சபையில் காங்கிரசை சேர்ந்த சிலரும் இடம் பெற உள்ளனர். காங்கிரஸ் சார்பில் யார்-யாரை மந்திரியாக நியமிக்கலாம் என்பது குறித்து டெல்லியில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி, மேலிட தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, வேணுகோபால் எம்.பி. ஆகியோருடன் குமாரசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

    தற்போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வர் துணை முதல் மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் மந்திரி டி.கே சிவகுமாரை நியமிக்க ராகுல்காந்தி முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    பாரதிய ஜனதா ஆட்சி கவிழவும், ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்ததில் மிக முக்கிய பங்கு வகித்தவர் டி.கே.சிவகுமார் என்பது குறிப்பிடதக்கது.


    பாரதிய ஜனதாவால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் பாட்டீல் ஆகியோரை மீட்டு அழைத்து வருவதிலும் டி.கே.சிவகுமார் தீவிரமாக செயல்பட்டுள்ளார்.

    ரூ.100 கோடி வரை எம்.எல்.ஏ.க்களுக்கு விலை பேசியும், அவர்களை பாரதிய ஜனதா பக்கம் சாய்ந்து விடாமல் தடுத்ததிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

    குஜராத்தில் அகமது பட்டேல் மேல்சபை தேர்தலில் வெற்றி பெற அந்த மாநில எம்.எல்.ஏ.க்களை கர்நாடகாவில் பாதுகாத்த வரும் இவர்தான்.

    கடந்த 2002-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது எதிர் கட்சி மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடந்தது. அப்போதும் எம்.எல்.ஏக்களை கர்நாடகம் அழைத்து வந்து அவர்களை சிவகுமார் பாதுகாத்தார்.

    இப்படி காங்கிரசுக்கு நெருக்கடி வந்த போதெல்லாம் அந்த நெருக்கடியை தீர்ப்பதில் சிவகுமார் உறுதியாக நின்றார்.

    குஜராத் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்ததால் இவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை நடந்த போதும் இவர் காங்கிரசை விட்டு விலகவில்லை.

    இதனால் இவருக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  #Congress #DKShivaKumar #RahulGandhi
    ×