search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress. பாராளுமன்ற தேர்தல்"

    2019 பாராளுமன்ற தேர்தலையும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட போவதாக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இதேபோல், மற்ற மாநில கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாகி உள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலத்தில் பாரதியஜனதா கட்சி ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கியது.

    78 இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும் முதல்-அமைச்சர் பதவியை 37 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வைத்துள்ள குமாரசாமிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது.

    என்றாலும் முக்கிய இலாகாக்களை பெற்றுவிட வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர். இதற்காக குமாரசாமியிடம் பட்டியல் கொடுத்து வலியுறுத்தினார்கள். ஆனால் குமாரசாமி முக்கிய இலாக்காக்களை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதன் காரணமாக அமைச்சரவை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலையிட்டார். அவர் குமாரசாமி கேட்ட அனைத்து முக்கிய இலாகாக்களையும் விட்டு கொடுத்து விட கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதனால் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய இலாகாக்களை பெற முடியாமல் அதிகாரங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தற்போதைய முடிவுப்படி ராகுல் உத்தரவு காரணமாக கர்நாடகா அமைச்சரவையில் நிதி, வரி வருவாய், பொதுப் பணித்துறை, தொழில், கூட்டுறவு, சுற்றுலா, ஆரம்ப உயர் கல்வி துறைகள், போக்குவரத்து, நீர்பாசனம், மீன்வளம், சிறுதொழில், தகவல் தொடர்பு, திட்டமிடல் ஆகிய முக்கிய துறைகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு கிடைத்துள்ளன.

    காங்கிரஸ் கட்சிக்கு உள்துறை, ஊரக மேம்பாடு, வீட்டு வசதி, சுரங்கம், சுகாதாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், மகளிர் நலம், உணவு, சிறுபான்மையினர் நலம், கலாச்சாரம், துறைமுகம் போன்ற இலாகாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பெங்களூர் நகர மேம்பாடு துறையும் காங்கிரஸ் வசமாகி உள்ளது.

    இந்த நிலையில் குமாரசாமி 5 ஆண்டுகளுக்கு முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அடுத்து ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து குமாரசாமி கேட்ட அத்தனை கோரிக்கைகளையும் காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.


    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் என்பதை நேற்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இதை நேற்று உறுதிப்படுத்தினார்.

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக தொகுதிகளை பெறும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையை பெற முடியும் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள்.

    கர்நாடகாவில் கூட்டணியை உறுதி செய்திருப்பது போல மற்ற மாநிலங்களிலும் முன்கூட்டியே கூட்டணியை உறுதிப்படுத்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக தெலுங்கு தேசம், தி.மு.க., தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உறுதி செய்ய காங்கிரஸ் தீவிரமாகி உள்ளது.

    அதுபோல வடகிழக்கு மாநிலங்களிலும் மாநில கட்சிகளுடன் இப்போதே கூட்டணியை பேசி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநில கட்சிகளின் உதவி இல்லாமல் நிச்சயமாக பாரதிய ஜனதாவை வீழ்த்த முடியாது என்பது உறுதியாகி இருப்பதால் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணிக்காக மாநில கட்சிகளை இழுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக நடந்த இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர்ந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றிகளை பெற்றுள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் சேர்ந்து பா.ஜ.க.வுக்கு அதிரடியான தொடர் தோல்விகளை கொடுத்துள்ளன.


    இதன் காரணமாக எதிர்க்கட்சிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று சேர்த்து கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணிக்குள் கொண்டு வர முடியுமா? என்பதில் கேள்விக்குறியும் நீடிக்கிறது.

    டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று நேற்று பரபரப்பாக தகவல் வெளியானது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். சில மாநிலங்களில் தனித்து செயல்பட காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்திருப்பதை இது காட்டுகிறது.

    மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் அதே சமயத்தில் தனக்கு தேவையான அளவுக்கு தொகுதிகளை பெற முடியுமா? என்ற சந்தேகமும் காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    உதாரணத்திற்கு உத்தரபிரதேசத்தில் மாயாவதியும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியும், மராட்டியத்தில் சரத்பவாரும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுப்பார்களா? என்பதில் உறுதி இல்லை.

    உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 40 தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி தந்தால்தான் கூட்டணி தொடரும் என்று மாயாவதி நிபந்தனை விதித்துள்ளார். இத்தகைய நிபந்தனை காரணமாக அந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்றை இலக்க தொகுதிகளே கிடைக்கும் சூழ்நிலை உருவாகும்.

    இதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பார்களா? என்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே மாநில கட்சிகளை விரைவாக ஒன்றுதிரட்டும் காங்கிரசின் முயற்சிக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு மாநில கட்சிகளின் முடிவுகளை பொறுத்தே அமையும்.  #ParliamentElection2019 #JDS #Congress
    ×