search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector shilpa"

    சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்க்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஷில்பா வீட்டிற்கே சென்று வழங்கினார். #TirunelveliCollector
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வி.கே.புரம்‌ டானா காளிபார்விளையை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 35). எம்.காம். பட்டதாரியான இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இதனால் பழனிக்குமார் தனது தாயார் சாரதாவுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி, மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பழனிக்குமாரை நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து பழனிக்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தாயார் சாரதா சம்மதம் தெரிவித்தார்.

    இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கு இதயத்தையும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு மற்றொரு சிறுநீரகமும், திருச்சி தனியார் ஆஸ்பத்திரி நோயாளிக்கு கல்லீரலும் தானமாக வழங்கப்பட்டது.

    சாரதாவின் கணவர் கணபதி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் பழனிக்குமார் மட்டுமே உழைத்து தாயை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் பழனிக்குமாரும் இறந்ததால் தனக்கு தமிழக அரசு முதியோர் பென்சன் வழங்கவேண்டும் என்று சாரதா நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசிடம் மனு கொடுத்தார்.

    அவரது மனுவை பரிசீலித்த கலெக்டர் உடனடியாக சாரதாவுக்கு முதியோர் பென்சனை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து இன்று காலை சாரதாவின் வீட்டுக்கு நேரில் சென்ற கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சாரதாவை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அரசின் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை சாரதாவிடம் கலெக்டர் நேரடியாக வழங்கினார்.  #TirunelveliCollector 
    நெல்லை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒரு தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும், உழவர் பாதுகாப்பு அட்டை குறித்தும், நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மனு கொடுக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை மாவட்டத்தில் நாளை (10-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. அதன்படி, நெல்லை தாலுகா பழவூர், பாளையங்கோட்டை தாலுகா முத்தூர், சங்கரன்கோவில் தாலுகா வாழவந்தாபுரம், தென்காசி தாலுகா பாட்டாக்குறிச்சி, செங்கோட்டை தாலுகா குன்னக்குடி, சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர், வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல், ஆலங்குளம் தாலுகா கடங்கநேரி, அம்பை தாலுகா ஆலடியூர் பகுதி1, நாங்குநேரி தாலுகா கீழகருவேலங்குளம், ராதாபுரம் தாலுகா ராதாபுரம், கடையநல்லூர் தாலுகா சிந்தாமணி, திருவேங்கடம் தாலுகா சத்திரங்கொண்டான், மானூர் தாலுகா தென்கலம், சேரன்மாதேவி தாலுகா வடக்கு கபாலிபாறை ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×