search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma Makkal Munnetra Kazhagam தினகரன்"

    தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி போராடுவார்கள் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualified

    கோபி:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார்.

    அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    நான் ஏற்கனவே கூறியது போல சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல்கள் யார் என்று தெரியும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.

    வழக்கை தாமதப்படுத்துவார்கள் என கூறி தங்க தமிழ் செல்வன் மட்டும் தான் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி போராடுவார்கள். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அழிவை நோக்கி செல்கிறது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

     


    எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் கட்சி சார்பில் தேர்தலை சந்திப்போம். அதில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். கட்சியை காப்பாற்றுவோம்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualified

    தங்க தமிழ்செல்வன் மற்றும் வெற்றிவேல் கருத்து வேறுபாடு காரணமாக தினகரன் அணியில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. #TTVDhinakaran #MLAsDisqualified

    சென்னை:

    டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்த விவகாரம் அடுத்தடுத்து புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.

    வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் இருவரும் பலமாத விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றார். ஆனால் நீதபதி சுந்தர் செல்லாது என்றார்.

    இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதி முடிவுக்கு செல்ல உள்ளது. 3-வது நீதிபதி பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அவர் தனது தீர்ப்பை வெளியிட எத்தனை மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்வார் என்பதும் தெரியாத நிலை உள்ளது.

    உறுதியான, ஒருமித்த கருத்துடைய தீர்ப்பு வெளியாகாத காரணத்தால் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உருவாகத் தொடங்கியுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களில் ஒரு சாரார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு, தங்கள் தொகுதியில் இடைத் தேர்தலை சந்திக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

    ஆனால் மற்றொரு சாரார், பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது இழக்கவோ விரும்பவில்லை. எனவே தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்து சட்ட ரீதியாக போராடுவது என்ற மனநிலையில் உள்ளனர். இந்த மாறுபட்ட நிலையால் 18 எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் புதிய குழப்பம் நிலவுகிறது.

    வழக்கை வாபஸ் பெற்று விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் என்ற மன நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சில எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த கருத்தை கொண்டிருப்பவர்கள், “இடைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடாதபட்சத்தில் தங்களால் அ.தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும்” என்று சொல்கிறார்கள்.

    இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ் செல்வன் ‘மாலைமலர்’ நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

     


    எங்கள் மீதான தகுதி நீக்க வழக்கு செல்லுமா? செல்லாதா? என்று இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறி உள்ளார்களே தவிர இந்த வழக்கை எந்த கால கட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சொல்லாமல் உள்ளனர். இதில் 3-வது நீதிபதியை உடனே நியமித் திருந்தால் நீதிமன்றத்தை பாராட்டி இருக்கலாம். அல்லது இன்னும் 10 நாளில் இறுதி தீர்ப்பை 3-வது நீதிபதி கூற வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் வரவேற்கலாம்.

    ஆனால் இந்த நீதிமன்றம் ஓட்டு போட்ட பொதுமக்களை பற்றி கவலைப்படாமல் பொத்தாம் பொதுவாக தீர்ப்பு சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

    என்னுடைய தொகுதியில் கடந்த 9 மாதங்களாக எம்.எல்.ஏ. இல்லை. இதனால் மக்கள் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க கோரி யாரிடம் சென்று முறையிடுவது என தெரியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

    தினமும் 300 பேர் என்னை சந்திக்க வருகிறார்கள். அவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மக்களை பற்றி தலைமை நீதிபதிக்கு எந்த கவலையும் இல்லை.

    இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட ஓ.பி.எஸ். இன்று துணை முதல்- அமைச்சராக உள்ளார். அ.தி.மு.க. அரசு நீடிக்க வேண்டும் என்று ஓட்டளித்த நாங்கள் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறோம்.

    இதை கோர்ட்டு கண்டு கொள்ளவில்லை. அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறுகிறது.

    புதுச்சேரி சட்டசபை வழக்கில் ஒரு தீர்ப்பும் தமிழக சட்டசபை வழக்கில் மற்றொரு தீர்ப்பையும் தலைமை நீதிபதி கூறுகிறார் என்றால் இன்றைக்கு தமிழகமே நீதிமன்றத்தை பார்த்து சிரிக்கிறது.

    எனவே தீர்ப்பை நம்பி பிரயோஜனமில்லை. இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

    அதற்கு பதில் எனது வழக்கை வாபஸ் பெறுவது தான் சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்துள்ளேன். எனவே வழக்கை வாபஸ் பெற இப்போதுள்ள நீதிபதிகள் முன்பு மனு கொடுப்பதா? அல்லது 3-வது நீதிபதி நியமனத்துக்கு பிறகு அவரிடம் கொடுப்பதா? என்பது பற்றி சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்.

    நான் வழக்கை வாபஸ் பெறும் மனுவை கூட நீதிமன்றத்தில் உடனே ஏற்காமல் காலம் தாழ்த்துவார்கள் என்பதால்தான் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க உள்ளேன்.

    ஆண்டிப்பட்டி தொகுதியில் எவ்வளவு நாள்தான் மக்கள் கஷ்டப்படுவார்கள். எனவே 6 மாதத்தில் தேர்தல் வரட்டும். தேர்தலில் நின்று யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. அதனால் தான் எனது வழக்கை வாபஸ் பெறுவதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளேன். மற்றவர்களை பற்றி கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் வெற்றிவேல் உள்பட பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், வழக்கை வாபஸ் பெறவோ, இடைத் தேர்தலை சந்திக்கவோ விரும்பவில்லை. அப்படி முடிவு செய்தால் அது தி.மு.க.வுக்கு சாககமாகி விடும் என்று நினைக்கிறார்கள்.

     


    நான் கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருப்பேன். வழக்கை வாபஸ் பெற மாட்டேன். ஏனென்றால் முக்கால் கிணறை தாண்டி விட்டோம். இன்னும் கொஞ்சம் காலம்தான்.

    இந்த விசயத்தில் வழக்கை வாபஸ் பெறுவது தீர்வாகாது. ஏனென்றால் வாபஸ் பெறுவது மனு கொடுத்தாலும் அதை உடனே நீதிமன்றம் ஏற்காது.

    இரு நீதிபதிகள் தீர்ப்பு கூறிய காரணத்தால் இரு நீதிபதிகள் இருக்கும்போது மனு கொடுங்கள் என்று சொல்லி விடுவார்கள். அல்லது 3-து நீதிபதி நியமித்த பிறகு வாருங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்கள்.

    தலைமை நீதிபதி அர்த்தமே இல்லாமல் தீர்ப்பு எழுதி உள்ளார். காரணமே சொல்லவில்லை. அவர் எதற்காக புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்துக்கு ஒரு தீர்ப்பு கூறுகிறார் என்று குழந்தைகளுக்கு கூட தெரியும்.

    3-வது நீதிபதியை நியமித்த பிறகு ரொம்ப நாளைக்கு காலம் கடத்த முடியாது. 6 மாதத்திற்குள் இறுதி தீர்ப்பு சொல்லிதான் ஆக வேண்டும்.

    எனவே இறுதி தீர்ப்புக்கு காத்திருப்பது தான் புத்திசாலித்தனம். எனவே நான் வழக்கை வாபஸ் பெற மாட்டேன்.

    தங்க தமிழ்ச்செல்வன் வழக்கை வாபஸ் பெறுவேன் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவரது வக்காலத்து மனுவை உடனே கோர்ட்டு ஏற்காமல் காலம் கடத்தி விடும்.

    2-வது பாயிண்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதால் தேர்தல் வந்தாலும் இவர் தேர்தலில் நிற்க முடியுமா? அல்லது இந்த 5 ஆண்டுக்குள் நிற்க முடியாதா? என்ற கேள்வி எழும். நிறைய சட்ட சிக்கலில் வழக்கு இழுத்துக் கொண்டே செல்லும்.

    எனவே வழக்கை எதிர் கொண்டு இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம். அதுவரை நான் காத்திருப்பேன்.

    இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.

    18 எம்.எல்.ஏ.க்களில் ஒரு சாரார திடீரென வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பது, ஆளும் அ.தி.மு.க.விலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்து விட்டால், சட்ட சபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதில் சிக்கல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

    இதனால் 18 எம்.எல்.ஏ.க் களில் சிலர் வழக்கை திரும்பப் பெற்றாலும் அது இடைத் தேர்தலுக்கு வழி வகுத்து ஆளும் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. #TTVDhinakaran #MLAsDisqualified

    3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்போம் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். #TTVDhinakaran #MLAsDisqualified

    மானாமதுரை:

    18 எம்.எல்.ஏ.க் களின் தகுதி நீக்க வழக்கில் ‘சபாநாயகரின் அதி காரத்தில் தலையிட முடியாது’ என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார்.

    அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது. இந்த விவகாரத்தில் நான் தலைமை நீதிபதி கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் என்றார். இந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாததால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது எனத் தீர்ப்பு வெளியானது.

    இந்த தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளருமான சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-

    18 எம்.எல்.ஏக்களும் தினகரன் தலைமையில் ஒற்றுமையுடன்தான் இருக்கின்றோம். சபாநாயகர் உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பு வந்தாலும் நாங்கள் தினகரன் தலைமையில் தான் தொடர்ந்து இயங்குவோம்.

     


     

    மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகதான் அமையும். தினகரன் தமிழகத்தின் முதல் வராவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பரமக்குடி தொகுதி டாக்டர் முத்தையா கூறுகையில், இந்த தீர்ப்பானது தொகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். 3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்தும் வகையில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

    மானாமதுரை மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

    நீதிமன்ற தீர்ப்பை மிகவும் எதிர்பார்த்தோம். நீதி மன்றம் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் நேர்மாறாக தீர்ப்பு உள்ளது. 9 மாதங்களாக எம்.எல்.ஏ. பணியை மேற்கொள்ள முடியவில்லை. தொகுதி மக்கள் என்னிடம் குறைகளை நேரிலும், போனிலும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. தகுதி நீக்கம் என்ற ஒரே காரணத்திற்காக எனது தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் எந்த வித பணியையும் செய்வதில்லை.

    தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்யப்பட வேண்டிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    தற்போது தீர்ப்பு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. தீர்ப்பு நியாயமாக கிடைக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்பேன் என்றார்.  #TTVDhinakaran #MLAsDisqualified

    ×