search icon
என் மலர்tooltip icon

    நைஜீரியா

    • வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு வங்கிகள் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
    • வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அபுஜா:

    நைஜீரியாவில் ஊழலை ஒழிக்கும் விதமாக அந்த நாட்டு அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி புழக்கத்தில் உள்ள 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்த நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது.

    அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கடைசி நாளாக 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதியை அறிவித்திருந்தது. பின்னர் அது பிப்ரவரி 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    எனினும், போதுமான அளவில் புதிய நைரா நோட்டுகளை வங்கிகளால் புழக்கத்துக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு வங்கிகள் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதனால் பணப்புழக்கம் இல்லாமல் கடும் கொந்தளிப்புக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    முக்கிய சாலைகளை மறித்தும், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த போராட்டங்களில் வன்முறைகள் வெடித்து வருகின்றன.

    கோபமடைந்த மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களை அடித்து நொறுக்கி சூறையாடி வருகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வங்கிகளுக்கு தீவைத்த சம்பவங்களும் அரங்கேறின.

    நைஜீரியாவில் வரும் 25-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

    • வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
    • குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தது. இதில் கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் பலியானார்கள்.

    இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை. வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக நசராலா மாகாண கவர்னர் அப்துல்லாஹி கூறும் போது, "இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதட்டத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம்" என்றார்.

    • அனுமதியின்றி கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    • சமீப காலமாக பாதுகாப்புப் படைகள் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.

    அபுஜா:.

    நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு தொடர்பாக வெளிநாட்டு கப்பல் மற்றும் அதில் இருந்த ஊழியர்களை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். நைஜீரியக் கடற்பரப்பில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு, அனுமதியின்றி கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முயன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்டா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 27 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடற்படையிடம் சிக்கிய கப்பல் ஊழியர்களில் 16 பேர் இந்தியர்கள்.

    திருட்டு மற்றும் பைப்லைன் சேதங்களால் நாள் ஒன்றுக்கு 470,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை நைஜீரியா இழக்கிறது. சமீப காலமாக பாதுகாப்புப் படைகள் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.

    கடலில் கப்பல்களின் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மேலும் இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொணர ஒரு துணை பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டாண்மை எங்களிடம் உள்ளது என்றும் கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

    • படகில் மொத்தம் 85 பேர் பயணம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
    • மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 300க்கும் மேற்பட்டோர் பலி

    லாகோஸ்:

    நைஜீரியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் அனம்ப்ரா மாநிலத்தில் நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற அந்த படகு, திடீரென வெள்ளம் அதிகரித்ததால் நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர். படகில் மொத்தம் 85 பேர் பயணம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நைஜீரியாவில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பெரும்பாலான விளைநிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகிவிட்டதால் இந்த ஆண்டு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. 

    • நைஜீரியாவில் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் தென்கிழக்கே உள்ள ஒயோ மாகாணத்தின் இபரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

    அப்போது சாலையின் மறுபுறம் வேகமாக வந்த கார் மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் காரும், பஸ்சும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கார் மற்றும் பஸ்சுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு மீட்பு பணியில் ஈடுபட்டது.

    இந்த விபத்தில் சுமார் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்ற போது துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்
    • தேவாலயத்தின் பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்துள்ளனர்

    லாகோஸ்:

    நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி ஏந்தியவர்கள் தேவாலய கட்டிடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி சுட்டதாக ஓண்டோ மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை என்று, ஒண்டோ மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்களையும் அவர் பார்வையிட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களது நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    எனினும் இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர். தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரி கண்டனம் தெரிவித்தார். இது கொடூரமானது என அவர் குறிப்பிட்டார்.

    ×