search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் புதிய மஞ்சள் கயிறு அணிந்து கொண்டதை படத்தில் காணலாம்.
    X
    பெண்கள் புதிய மஞ்சள் கயிறு அணிந்து கொண்டதை படத்தில் காணலாம்.

    டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கை கொண்டாடிய பெண்கள்

    ஆடிப்பெருக்கை பெண்கள் வழக்கம் போல கொண்டாட தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கமலாலய குளம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    காவிரி நீர் பாயும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழாவை விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு பருவமழை குறைந்ததால் நீர் நிலைகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன.

    மேட்டூர் அணை நிரம்பி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டாததால் ஆறு, குளங்களும் தண்ணீரின்றி காணப்படுகின்றன. இருந்த போதிலும் ஆடிப்பெருக்கை பெண்கள் வழக்கம் போல கொண்டாட தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கமலாலய குளம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இப்பகுதியில் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். மஞ்சளில் விநாயகர் உருவம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபட்டனர். பெண்கள் காவிரி தாயை வழிபட்டு புதுமஞ்சள் கயிறு மாற்றி கொண்டனர். புதுமண தம்பதிகள் திருமண மாலையை ஆறு, குளங்களில் விட்டு வழிபாடு நடந்தினர். இதையொட்டி கடைவீதிகளில் காதோலை, கருகமணி, சிறுதேர் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன. இந்த வழிபாட்டில் கன்னி பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். பச்சரிசியில் வெல்லம் கலந்து படைத்து பூஜைகள் செய்தனர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். இதேபோல் தஞ்சாவூர் அழகிகுளம், கும்பகோணம் காவிரி படித்துறை, பாபநாசம் குடமுருட்டி ஆறு, திருக்காட்டுப்பள்ளி, கல்லணை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காவிரி ஆற்றின் படித்துறைகளில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி கோவில் அருகில் உள்ள கமலாலய குளத்திலும் ஏராளமான பெண்கள் படையலிட்டு வழிபட்டு புது மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.

    சீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்ம தீர்த்த குளம், பூம்புகார் காவிரி சங்கமமாகும் இடம், கொள்ளிடம் ஆறு, வேதாரண்யம் வேதா ரண்யேஸ்வரர் கோவில் மணி கர்ணிகை தீர்த்தக்குளம் உள்ளிட்ட இடங்களிலும் பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். தரங்கம் பாடியில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

    ஆறு, குளங்கள் வறண்டு இருந்ததால் டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடியவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஆண்டு சிறிதளவு தண்ணீரே தேங்கி கிடந்தது.
    Next Story
    ×