என் மலர்tooltip icon

    உலகம்

    • நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியது.
    • இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

    இந்நிலையில், நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க விரைந்தனர்.

    அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடிய நிலையில், டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

    • வீடுகள் குலுங்கியதால் பலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.
    • 190 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்தாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துருக்கியில் இன்று 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் அச்சம் நிலவிய நிலையில், சேதம் அதக அளவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.46 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.24) இந்த நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே என்ற நகரில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கும் அருகில் உள்ள தியார்பகீர், எலாஜிக், சன்லியுர்ஃபா மற்றும் துன்செலி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. சிரியாவின் வடக்குப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் வீட்டிற்கு திரும்ப மக்கள் அச்சப்பட்டு தெருக்கள் மற்றும் பூங்காக்களில் தஞ்சம் அடைந்தனர். மலாத்யா மற்றும் எலாஜிக் பகுதிகளில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது.

    நிலநடுக்கத்தால் 190 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 43 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர் என துருக்கி உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

    பயம் காரணமாக வீட்டிற்கு ஜன்னல் வழியாக குதித்ததில் பலர் காயம் அடைந்துள்ளதாக எலாஜிக் மேயர் தெரிவித்துள்ளார். மாலத்யாவில் இது போன்று 20-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    மொத்தம் நான்கு கட்டடங்கள் இந்த நிலநடுகத்தில் பாதிப்படைந்துள்ளது. எலாஜிக்கில் நான்கு பேர் சேதமைடைந்த கட்டடத்தில் இருந்து காயமின்றி மீட்கப்பட்டனர்.

    கடந்த வரும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மாகாணத்தில் ஒன்று மலாத்யா. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் மட்டும் 53 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    வடமேற்கு துருக்கியில் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்னர். 

    • கடந்த சில மாதங்களில் ரஷியாவின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும்.
    • 136 டிரோன்களில் 68 டிரோன்களை வான் பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்து அழித்துள்ளது.

    உக்ரைன் பகுதிகளை குறிவைத்து ரஷியா இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 130 டிரோன்கள் உக்ரைனின் கீவ் மற்றும் பல நகரங்களை குறிவைத்து செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஏவுகணைகள் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைனின் வான் பாதுகாப்பு சிஸ்டம் 136 டிரோன்களில் 68 டிரோன்களை தடுத்து அழித்துள்ளது. இரண்டு டிரோன்கள் மீண்டும் ரஷியா பகுதிக்கு சென்றுள்ளது. 64 டிரோன்கள் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.

    டெர்னோபில் வடக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த சில மாதங்களில் ரஷியாவின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும். ரஷியாவின் படையெடுப்பை தடுப்பதற்கான திட்டத்தை ஜெலன்ஸ்கி வெளியிடுவதற்கு முன்பாக ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    இந்த டிரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரண்டு ஏவுகணைகளை வடக்கு செர்னிஹிவ் மற்றும் கிழக்கு டொனட்ஸ்க் பிராந்தியத்தில் செலுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    • எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
    • கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்.

    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதில் ஈரானின் அணு நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.


    இதற்கிடையே அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, `சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையேயான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் ஒரு உறுதியை அளித்துள்ளது.

    ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. ஈரானின் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது' என்றார்.

    • கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
    • வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே இவ்விவகாரத்தை மீண்டும் கனடா கிளப்பியுள்ளது.

    நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இந்திய தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.


    அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தர விட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா பரிசீலிக்குமா என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலியிடம் நிரு பர்கள் கேட்டனர்.

    அதற்கு அவர், எல்லாம் மேஜையில் உள்ளது என்று பதிலளித்தார். பொருளாதார தடை தொடர்பாகவும் ஆலோசனை உள்ளது என்ற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.


    இந்தநிலையில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, நிஜ்ஜார் கொலையில் கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவு படுத்தியுள்ளோம். அதன் விசாரணையில் இந்திய அரசாங்கம் கனடாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம் என்றார்.

    இதற்கிடையே கனடாவின் சீக்கிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    • திடீரென மேடைக்கு நடுவே இருந்த குழிக்குள் எதிர்பாராமல் விழுந்து கவிழ்ந்தார்.
    • வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஒலிவியா ரோட்ரிகோ. யூடியூபில் வெளியான இவருடைய இசை ஆல்பங்கள் அனைத்தும் அதிக பார்வைகளை பெற்றவை. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் மெல்போர்ன் நகரில் இசை கச்சேரி ஒன்றை ஒருங்கிணைந்து பாடுவதாக அறிவித்தார். ஒலிவியாவின் இசை கச்சேரியை நேரில் ரசிப்பதற்காக ஏராளமானவர்கள் மேடை முன்பு திரண்டனர். அப்போது நவநாகரிக உடையில் ரசிகர்கள் முன்பு தோன்றிய அவர், தன்னுடைய பிரபலமான பாடல் ஒன்றை பாடியபடி மேடையை சுற்றி வலம் வந்தார்.

    திடீரென மேடைக்கு நடுவே இருந்த குழிக்குள் எதிர்பாராமல் விழுந்து கவிழ்ந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுதாரித்து கொண்ட ஒலிவியா தடுமாறியநிலையில் இருந்து மேலெழுந்து மீண்டும் தனது கச்சேரியை தொடங்கினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • தி வெஜிடேரியன் நாவல் உணவு சாப்பிட பெண்களுக்கு இருந்த விதிமுறைகளை மறுக்கும் பெண்ணை பற்றிய கதை.
    • மக்களின் வலி, வரலாறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும்.

    நோபல் பரிசு  

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் [2024] இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார்.

     

    வன்முறை - துயரம்

    53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங் 2007 ஆம் ஆண்டு வெளியான ' தி வெஜிடேரியன்' [The Vegetarian] என்ற நாவல் மூலம் உலக அரங்கிற்குத் தெரியவந்தார். இந்த நாவலுக்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டில் 'மேன் புக்கர்' சர்வதேச பரிசு வழங்கப்பட்டது. ஆணாதிக்கம், துயரம், வன்முறை உள்ளிட்டவற்றைச் சுற்றி ஹான் காங் எழுத்துக்கள் உள்ளன. தி வெஜிடேரியன் நாவல் உணவு சாப்பிட பெண்களுக்கு இருந்த விதிமுறைகளை மறுக்கும் பெண்ணை பற்றிய கதை. இதுபோல 'தி ஒயிட் புக்', 'ஹ்யூமன் ஆக்ட்ஸ்', 'கிரீக் லெசன்ஸ்' ஆகியவையும் ஹான் காங் எழுதிய மற்ற புகழ்பெற்ற படைப்புகள் ஆகும்.

     

     ஹான் காங் 

    1970 ஆம் ஆண்டு தென் கொரியாவின் குவாங்ஜூ-ல் (Gwangju) பிறந்த ஹான் காங் அரசியல் காரணங்களால் சியோலுக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது இளமைக் காலத்தை செலவிட்ட அவர் தனது தந்தை மூலம் இலக்கியத்துக்கு அறிமுகமாகிறார்.இவரது தந்தையும் நாவலாசிரியர் என்பதால் சிறுவயதிலிருந்தே இருந்த புத்தகங்கள் சூழ்ந்த சூழலில் இலக்கியத்துக்கு நெருக்கமானவராக ஹான் காங் வளர்ந்தார். வளர்ந்த பின் சியோலில் உள்ள யோன்சேய் பல்கலைக்கழகத்தில் கொரிய இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.

    1992 முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ஹான் காங் அதுமுதல் எண்ணற்ற படைப்புக்களை சமூகத்துக்கு வழங்கியுள்ளார். மக்களின் வலி, வரலாறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும். 2014 ஆம் ஆண்டில் வெளியான ஹியூமன் ஆக்ட்ஸ் என்ற இவரது நாவல் 1980களில் தென் கொரியாவில் ராணுவத்தால் கொல்லப்பட்ட குவாங்ஜு மக்களின் வாழ்க்கையைப் பற்றியது ஆகும்.

    தொந்தரவு 

    தற்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள இந்த 53 வயது எழுத்தாளரைத் தென் கோரிய அரசும் மக்களும் கொண்டாடி வருகிறனர். ஆனால் எந்த கொண்டாட்டங்களில் ஈடுபட ஹான் காங் விரும்பவில்லை. நோபல் பரிசு பெற்றது குறித்து எந்த ஊடகத்துக்கும் பேட்டியளிக்க மறுத்துள்ளார். இது அவரின் தீர்க்கமான முடிவு என்று ஹான் காங் தாயார் தெரிவிக்கிறார். உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றில் நடந்துவரும் போர் தனது மகளை மிகுந்த தொந்தரவு செய்துள்ளதாக அவரது  தந்தை கூறியுள்ளார்.

    'போர் உக்கிரமடைந்து, ஒவ்வொருநாளும் மக்கள் கொலை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும், செய்தியாளர் சந்திப்பு எப்படி நடத்த முடியும்?' என தன் மகள் தன்னிடம் கேட்டதாகத்  தந்தை கூறுகிறார். மேலும் உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியைப் பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை.

     

     நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மையாக இருந்தால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும் சிறியதாகவும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதை நாம் எழுப்பாமல் இருக்க முடியாது ' என தனது மகள் கூறி கொண்டாட்டங்களுக்கு மறுத்துவிட்டதாகத் தந்தை  கூறுகிறார்.

    • மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது.
    • பெண்கள் பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது.

    2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் நடமாடுவது, பண்டிகை கொண்டாட்டங்கள், ஆண்கள் சவரம் செய்வதுவரை அனைத்துக்கும் தனித்தனி விதிகள் உள்ளன.

    குறிப்பாக பெண்களுக்கு உடை சுதந்திரம், கல்வி, சமூக வாழ்க்கை என அனைத்தும் மறுக்கப்பட்ட அவலமான சூழலே அங்கு நிலவுகிறது. 2021 அதிகாரத்துக்கு வந்த பின்னர் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது. இதன் மேற்பார்வையிலேயே மேற்கூறிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அறநெறி அமைச்சகம் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

    அதாவது, உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபான் சட்டப்பிரிவு 17 இன் படி உயிருள்ளவற்றின் [living beings] புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்படுகிறது.

     

    இந்த புதிய விதியை ஆப்கனிஸ்தானின் பல்வேறு இடங்களில் தாலிபான் கட்டுப்பாட்டு ஊடகங்கள் செயல்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களின் புகைப்படங்களை வெளியிடாமல் செய்தி ஊடகம் எவ்வாறு செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய விதியை தீவிரமாக கடைபிடிக்க செய்தியாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி பெண்கள் தங்களின் முகத்தை வெளியே காட்டவும், பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது
    • 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர்.

    காசா:

    காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

    இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், காசாவின் தெற்கு பகுதியில் உள்ள பெனி சுஹைலா நகரில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் அமைப்பினரே காரணம் என்றும், அவர்கள் பொதுமக்களின் இருப்பிடங்களை முகாம்களாக பயன்படுத்துகின்றனர் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ராவல்பிண்டி விமான நிலையம் சென்ற மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் வரவேற்றனர்.
    • பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார்.

    இஸ்லாமாபாத்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அல்லது பாதுகாப்புத்துறை மந்திரியே கடந்த காலங்களில் பங்கேற்றனர்.

    மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். ராவல்பிண்டி விமான நிலையம் சென்றடைந்த மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

    காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வந்துள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கைகுலுக்கி வரவேற்றார். அவர் அளித்த இரவு விருந்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

    • மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.
    • ராவல்பிண்டி விமான நிலையம் சென்ற மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    இஸ்லாமாபாத்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அல்லது பாதுகாப்புத்துறை மந்திரியே கடந்த காலங்களில் பங்கேற்றனர்.

    இந்நிலையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். ராவல்பிண்டி விமான நிலையம் சென்றடைந்த மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

    காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

    கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்கும்பல் உதவியுடன் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைப்பதாகவும் கனடா புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
    • காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை இந்திய ஏஜென்சிகள்(விசாரணை அமைப்பு) பயன்படுத்துகிறது.

    ஒட்டாவா, அக். 15-

    கனடாவில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்திய கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சனை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பூதகரமாகத் தொடங்கியுள்ளது.

    நிஜ்ஜார் கொலையிலும், கனடாவில் நடக்கும் குற்றச்செயல்கள் பலவற்றிலும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக கனடா புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனால் கோபமடைந்த இந்தியா கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்ப பெறுவதாக நேற்று அறிவித்தது.

    மேலும் இந்தியாவில் உள்ள கனடா தூதர்களையும் வெளியேற்ற முடிவுசெய்துள்ளது. இக்கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவோம் என்று கனடா தெரிவித்தது. இந்த நிலையில் ரவுடி பிஷ்னோய் கும்பலுடன் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அக்கும்பல் உதவியுடன் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைப்பதாகவும் கனடா புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கனடா போலீஸ் அதிகாரிகள் மைக் டுஹேன், பிரிஜிட் கவுவின் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெற்காசிய சமூகத்தை இந்தியா குறிவைக்கிறது.குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைக்கின்றனர். குற்றப் பின்னணி கொண்ட குழுக்களுடன் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா காவல்துறை நம்புகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை இந்திய ஏஜென்சிகள்(விசாரணை அமைப்பு) பயன்படுத்துகிறது.

    இந்த குற்ற கும்பலுக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்புகிறோம் என்றனர். அப்போது, இந்திய அதிகாரிகள் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றச் சாட்டுகளை கூறுகிறீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஆம் என்று கனடா அதிகாரிகள் பதிலளித்தனர்.

    ×