என் மலர்
உலகம்
- அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் எதிர்த்து வருகின்றன.
- 1,100 கிலோமீட்டர் (685 மைல்) தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பியாங்யாங்:
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் வட கொரியா இன்று கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணையை செலுத்தியது. இதை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள நீரில் இறங்குவதற்கு முன் 1,100 கிலோமீட்டர் (685 மைல்) தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தெரிவித்தது.
வட கொரிய தலைநகரான பியாங்யாங்கிற்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவத்தினரால் ஏவுகணை ஏற்பாடுகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டதாகவும் தெற்கின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
- வாகனங்கள் பனியில் புதைந்துள்ளன.
- கடும் பனிபொழிவால் 60 மில்லியன் பொதுமக்கள் பாதிப்பு.
நியூயார்க்:
புவி வெப்பமயமாதல் தாக்கத்தின் மறுவடிவமாக மாறிவரும் பருவநிலை வளர்ந்த நாடு, ஏழை நாடு என பார்க்காமல் எல்லா நாடுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.

கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன. கான்சாஸ், இண்டியானா, மிசோரி, கென்டக்கி, லுயிஸ்வில்லி உள்ளிட்ட 7 மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.
கான்சாஸ் மற்றும் இண்டியானா மாகாணங்களில் 7.7 அங்குலங்கள் (19.5 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
கென்டக்கியின் லெக்சிங்டன், பனிப்பொழிவில் சாதனையை படைத்துள்ளது. அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியில் புதைந்துள்ளன.

வர்ஜீனியா, இண்டியானா, கன்சாஸ் மற்றும் கென்டக்கி ஆகிய இடங்களில் பனிப் பொழிவால் நூற்றுக்கணக்கான கார்கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடகிழக்கு கன்சாஸில் உள்ள நெடுஞ்சாலைகள் நடக்க முடியாத அளவுக்கு இருப்பதால் அந்த சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் 60 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பனிப் பொழிவு மேலும் அதிகரிக்கும் என அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேகமாக வெப்பமடையும் ஆர்க்டிக் துருவச் சுழலின் அதிகரிப்பு காரணமாக பனிப்பொழிவு அதிகரிக்கலாம் என ஆய்வுகள் கூறியுள்ளது.
- எப்போது ராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தெரியாது.
- 2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார்.
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தி குளோப் மற்றும் மெயில் தங்களுக்கு கிடைத்த தகவல்களில் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், எங்களிடம் பேசிய படி ஜஸ்டின் ட்ரூடோ எப்போது ராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் புதன்கிழமை நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு முன்பு அது நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த தகவல் பற்றிய கேள்விக்கு கனடா பிரதமர் அலுவலகம் உடனடி பதில் அளிக்கவில்லை. ட்ரூடோ உடனடியாக வெளியேறுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.
2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார். அப்போது கட்சி ஆழ்ந்த சிக்கலில் இருந்தபோது முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போயகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
- சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றார்.
- யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர்.
தென் கொரியா நாட்டில் பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை அதிபர் திரும்ப பெற்றார்.
இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வந்தனனர். மேலும், கடந்த வாரம் யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியிலும் புலனாய்வு அதிகாரிகள் இறங்கினர்.
யூன் சுக் இயோல் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதாரவாளர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். யூன் சுக் இயோல் எந்நேரத்திலும், கைது செய்யப்படலாம் என்ற நிலையில், புலனாய்வு அதிகாரிகளின் கைது முயற்சி வெற்றிபெறவில்லை. இது தொடர்பாக கடந்த வாரம் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
யூன் சுக் இயோலை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் தவறியதை அடுத்து, தென் கொரிய ஊழல் தடுப்பு துறையினர் காவல் துறை நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக தென் கொரிய ஊழல் தடுப்பு துறை மற்றும் காவல் துறையினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
யூன் சுக் இயோலை கைது செய்வதற்கான வாரண்ட் காலாவதியாக உள்ளது. இதையடுத்து, யூன் சுக் இயோலை கைது செய்ய புதிய வாரண்ட் பிறப்பிக்க கோரி ஊழல் தடுப்பு துறையினர் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.
- இடைக்கால அரசில் உள்ள சிலர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசிவருகின்றனர்.
- வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
டாக்கா:
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவு சீர்குலைந்துள்ளது.
இடைக்கால அரசின் பொறுப்பில் உள்ள சிலர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி வருகின்றனர். சிறுபான்மை இந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றர்.
இதற்கிடையே, வங்கதேச நீதிபதிகள் சுமார் 50 பேர் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச அரசின் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில், வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவேண்டும் என்ற வங்கதேச அரசின் கோரிக்கை குறித்து இந்திய அரசு பதில் தெரிவிக்காத நிலையில், வங்கதேச நீதிபதிகளின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- நேற்றிரவு நடந்த தாக்குதலில் 103 ஷாகித் வகை டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.
- இந்த ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன என்றார்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டை நெருங்கி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும் உரிய பதிலடி கொடுத்து உக்ரைன் அவற்றை மீட்டது.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. அந்த நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனில் நேற்று ஒரே நாளில் 103 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது:
கடந்த வாரத்தில் 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. இவற்றுடன் வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் என உலகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு நாளும் ரஷியாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து எங்களுடைய வான்வெளியை நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.
நேற்றிரவு நடந்த தாக்குதலில் ஈடுபட்ட 103 ஷாகித் வகை ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன.
ரஷியா, அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களைத் தொடர்ந்து பெற்று வருகிறது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் இருந்து அவற்றை பெற்று, உக்ரைனில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவதற்கான ஆயுதங்களில் பயன்படுத்துகிறது.
ரஷியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கான நெருக்கடி போதிய அளவில் இல்லை என தெரிவித்துள்ளார்.
- பின்னர் 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில் கார்ல்சன் - மலோன் திருமண வரவேற்பு நடந்தது.
- 26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தார்.
நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் [34 வயது] தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார்.
நேற்று [சனிக்கிழமை] நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. Holmenkollen Chapel தேவாலயத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக நார்வே ஊடகமான NRK இன் செய்திகள் தெரிவிக்கின்றன.

chess.com இன் படி, திருமணத்தில் நார்வே நாட்டு செஸ் வீரர்கள் ஜோஹன்னஸ் க்விஸ்லா மற்றும் அஸ்கில்ட் பிரைன், ஜிஎம் பீட்டர் ஹெய்ன் நீல்சன் மற்றும் ஜிஎம் ஜான் லுட்விக் ஹேமர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது நெட்பிளிக்ஸ் படக்குழுவினரும் உடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில் கார்ல்சன் - மலோன் திருமண வரவேற்பு நடந்தது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் சேலஞ்சர் நிகழ்வின் போது இவர்கள் காதலை வெளிப்படுத்தினர். அதன்பின் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் ஜோடியாக காணப்பட்டனர். கார்ல்சனின் செஸ் போட்டிகளின் போது அவருக்கு மலோன் ஆதரவளிப்பதைக் காணலாம்.

26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தார். ஊடக அறிக்கைகளின்படி, அவர் ஒஸ்லோவில் வளர்ந்தார், அமெரிக்காவில் படித்தார், மேலும் சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்தார், அங்கு அவர் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.
மலோனுடனான திருமணம் கார்ல்சனின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் கார்ல்சன், ஐந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்கள் உட்பட ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.

- 5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான்.
- வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.
ஜிம்பாப்வே நாட்டின் வடக்குப் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன், சிங்கங்கள், யானைகள் மற்றும் பிற ஆபத்தான வனவிலங்குகளின் இருப்பிடமான மட்டுசடோனா தேசிய பூங்காவின் ஆபத்தான வனப்பகுதியில் ஐந்து நாட்கள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
டினோடெண்டா பூண்டு [Tinotenda Pundu] என்று அந்த சிறுவன் டிசம்பர் 27 அன்று வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே சுற்றித் திரிந்துகொண்டிருந்தபோது சிறுவன் தொலைந்து போனான்
5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான். நீரிழப்பினால் பலவீனமான நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான். வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.

சிறுவன் ஒரு ஆற்றங்கரையில் குச்சிகளைப் பயன்படுத்தி தண்ணீரைத் தோண்டி, ட்ஸ்வான்ஸ்வா என்ற காட்டுப் பழத்தை உண்டு வாழ்ந்துள்ளான்.
சிறுவனின் கதையை விவரித்த உள்ளூர் எம்.பி. முட்சா முரோம்பெட்ஸி, சிறுவன் அலைந்து திரிந்து , திசை தவறி, ஆபத்தான மட்டுசடோன்ஹா பூங்காவிற்குத் தெரியாமல் சென்றுள்ளான்.
ஹாக்வேக்கு அருகிலுள்ள காட்டில் 5 நீண்ட, கொடூரமான நாட்களுக்குப் பிறகு. உமே நதியின் துணை நதி அருகே சிறுவனை ரேஞ்சர்கள் உயிருடன் கண்டுபிடித்தனர்.
வீட்டிலிருந்து 23 கிமீ தூரம் அலைந்து திரிந்து, கர்ஜனை செய்யும் சிங்கங்கள், யானைகளைக் கடந்து செல்வது, காட்டுப் பழங்களை உண்பது மற்றும் ஆபத்தான காட்டுப் பகுதிகளுக்கு மத்தியில் உறங்குவது, 8 வயது சிறுவனுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று விவரித்தார். மட்டுசடோனா பூங்காவில் சுமார் 40 சிங்கங்கள் உள்ளன.

துணிச்சலான பூங்கா ரேஞ்சர்களுக்கும், நியாமினியாமி சமூகத்தை சேர்ந்தவர்களும், ஒவ்வொரு நாளும் சிறுவன் கேட்கும்படி டிரம்ஸ் அடித்து தேடி கடைசியில் கண்டுபிடிக்க உதவியுள்ளார்கள் என்று நன்றி தெரிவித்த எம்.பி., டினோடெண்டாவைக் கவனித்து, அவரைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்கு ரேஞ்சர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.
- ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது.
- ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது. அன்று தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்கிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான அதிபர் சுதந்திரப் பதக்க விருதுக்கு 19 பேரை அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ், முன்னணி கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி, ஆடை வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மறைந்த ஆஷ்டன் கார்ட்டர் உள்பட 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் விருதுகளை ஜோபைடன் வழங்கினார். விருது பெற்ற ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

மேலும் அமெரிக்க அரசியல் கட்சியால் அதிபர் வேட்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரது பொது சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. பிரபல முதலீட்டாளரான 94 வயது ஜார்ஜ் சொரோஸ் விழாவில் பங்கேற்கவில்லை. விருதை அவரது மகன் அலெக்ஸ் சொரோஸ் தனது தந்தையின் சார்பாக ஏற்றுக் கொண்டார்.
இதுதொடர்பாக ஜார்ஜ் சொரோஸ் கூறும்போது, `அமெரிக்காவில் சுதந்திரத்தையும் செழிப்பையும் கண்ட ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், இந்த மரியாதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்றார்.

ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர். அவர் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. தெரிவித்தது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, இணைத் தலைவராக உள்ள தொண்டு நிறுவனத்திற்கு, ஜார்ஜ் சொரோசின் தொண்டு நிறுவனம் நிதி உதவி செய்வதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்திலும் பா.ஜ.க. குரல் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் சொரோசுக்கு விருது வழங்கப்பட்டதற்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, சொரோசுக்கு விருது வழங்கப்பட்டது கேலிக்குரியது. அவர் அடிப்படையில் மனிதகுலத்தை வெறுக்கிறார் என்று நான் நம்புகிறேன் என்றார்.
கால்பந்து வீரர் மெஸ்சி, போட்டிகள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் இந்த விருது விழாவில் கலந்து கொள்ள முடிய வில்லை.
- நியூ பஹ்மென் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது.
- படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் டர்பெட் நகரில் நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பஸ்சில் 36 பேர் பயணித்தனர். இதில், பலூசிஸ்தானை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரும் அடக்கம்.
நியூ பஹ்மென் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ்சில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த கண்ணிவெடி தாக்குதலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தினரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலகின் மிக வயதான மூதாட்டியாக அறியப்பட்டவர் டூமிகோ இடூகா.
- ஜப்பானைச் சேர்ந்த இடூகா 116-வது வயதில் காலமானார்.
டோக்கியோ:
உலகின் வயதான பெண் என கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்யாஸ் மொரேரா (117). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, உலகின் மிக வயதான நபராக டூமிகோ இடூகா அங்கீகரிக்கப்பட்டார்.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டூமிகோ இடூகா தற்போது உயிரிழந்துள்ளார் என ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா தெரிவித்தார்.
இதுதொடர்பாக ரியோசுகே வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகிலுள்ள அஷியாவில் இடூகா வசித்து வந்தார். அவருக்கு 4 வாரிசுகள் மற்றும் 5 பேரக் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2019 முதல் நர்சிங் ஹோமில் தங்கி இருந்த அவர், கடந்த மாதம் 29-ம் தேதி மரணமடைந்தார்.
ஆஷியாவிற்கு அருகிலுள்ள ஒசாகா வணிக மையத்தில், அமெரிக்காவில் போர்டு மாடல் டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் 1908, மே 23-ல் பிறந்தார்.
உலகப் போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் இடூகா வாழ்ந்தார். அதற்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். தனது வயதான காலத்தில் வாழைப்பழங்கள், பால் போன்ற குளிர்பானமான கால்பிஸை ரசித்து குடித்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
- வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
போகோடா:
கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் 8,000 பேர் பலியாகிவருகின்றனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30க்கும் அதிகமானோர் பயணித்தனர்.
அந்தப் பேருந்து வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






