search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
    X
    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே

    இலங்கையில் அரசியல் நெருக்கடி- பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா?

    மகிந்த ராஜபக்சே நாளை விசேஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அவரது குடும்ப வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இருவரும் பதவி விலக மறுத்து விட்டனர்.

    ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை ஒடுக்க நாடு முழுவதும் மீண்டும் அவசர நிலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    ஆனாலும் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக உறுதியான எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

    இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்துள்ளதாகவும் அவர் நாளை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்றும் தகவல் வெளியானது.

    அதிபர் கோத்தபய வீட்டில் நடந்த சிறப்பு கேபினட் கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பேசும்போது தான் பதவி விலகுவது மட்டும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்றால் அதை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மேலும் பிரதமர் பதவியை ஏற்க பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலலேகயா தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இருவரும் தொலைபேசியில் பேசிய போது சஜித் பிரேமதாசா சில நிபந்தனைகளை விடுத்ததாகவும், அதை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்று கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் நாளைக்குள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மகிந்த ராஜபக்சே நாளை விசேஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அவரது குடும்ப வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் அமைச்சரவை கலைக்கப்பட்டு அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதையும் படியுங்கள்.. சென்னை இரட்டை கொலை: கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு
    Next Story
    ×