search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஒரே மாதத்தில் 6-வது முறை அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா
    X
    ஒரே மாதத்தில் 6-வது முறை அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா

    ஒரே மாதத்தில் 6-வது முறை அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா

    ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அடங்கவில்லை.
    சியோல் :

    வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    நாங்கள் அணுசக்தி திறன்களை ஓரளவு நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, எங்கள் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் வடகொரியா கூறியது. அதை அமெரிக்கா ஏற்கவில்லை.

    இந்த நிலையில், தற்போது புத்தாண்டு பிறந்தது முதல் வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அடங்கவில்லை.

    இந்தநிலையில் நேற்று அந்த நாடு 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி, கடலில் செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது. இந்த மாதத்தில் வடகொரியா நடத்திய 6-வது ஏவுகணை சோதனை இதுவாகும்.

    இதுபற்றி தென்கொரியாவின் கூட்டுப்படை தலைவர்கள் கூறுகையில், “வடகொரியா குறுகிய தொலைவு ஏவுகணைகள் இரண்டை 5 நிமிட இடைவெளியில் கடற்கரை நகரமான ஹாம்ஹங்கில் இருந்து ஏவியது. அவை 190 கி.மீ. தொலைவுக்கு பறந்தன. பின்னர் அவை கடலில் விழுந்தன” என தெரிவித்தனர்.

    தன் மீதான அணு ஆயுதமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக முடக்கப்பட்ட அமெரிக்கா தலைமையிலான பொருளாதார தடைகளை விடுவிப்பதை நோக்கமாக கொண்டு, நிறுத்தப்பட்ட நீண்டகால பேச்சுவார்த்தைகள் மீது ஜோ பைடன் நிர்வாகத்துக்கு அழுத்தம் தருவதுதான் வடகொரியாவின் நோக்கம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளை கூறுகையில், ‘‘வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள், அதன் ஆயுத திட்டத்தின் சீர்குலைக்கும் தாக்கத்தை எடுத்துக்காட்டும் அதே வேளையில், அமெரிக்கர்களுக்கோ அல்லது பிராந்தியத்துக்கோ அல்லது நமது நட்பு நாடுகளுக்கோ உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை’’ என தெரிவித்தது.

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ‘‘வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளால், ஜப்பானிய கடற்கரையை சுற்றி கப்பல் மற்றும் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை’’ என்பதை உறுதிபடுத்தினார். அதே நேரத்தில் வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனை, மிகவும் வருந்தத்தக்கவை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுபவை எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

    2018-ம் ஆண்டு நிறுத்தி வைத்த அணு ஆயுத சோதனையையும், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குகிற ஏவுகணை சோதனைகளையும் மீண்டும் தொடங்குவதை பரிசீலிக்க வடகொரிய ஆளும் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் சமீபத்தில் முடிவு எடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    வடகொரியாவின் முக்கிய கூட்டாளியும், பொருளாதார உயிர்நாடியுமான சீனாவில் 4-ந்தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடந்து முடிந்த பின்னர், வடகொரியா ஆயுத சோதனைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    Next Story
    ×