search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐசக் ஹெர்சாக்
    X
    ஐசக் ஹெர்சாக்

    இஸ்ரேலின் புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக் தேர்வு

    இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை கிடைக்காத சூழலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.
    ஜெருசலேம்:

    இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை கிடைக்காத சூழலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.இந்த சூழலில் அங்கு திடீர் திருப்பமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை நிறுவ முடிவு செய்துள்ளன.இதனால் இஸ்ரேலில் நீண்ட காலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    பெஞ்சமின் நேட்டன்யாஹூ


    இப்படி இஸ்ரேலின் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருந்து வரும் சூழலில் அந்த நாட்டின் அதிபர் ரூவன் ரிவ்லினின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது.இதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று கூடியது.

    இதில் மூத்த அரசியல்வாதியும், ஒரு முக்கிய இஸ்ரேலிய குடும்பத்தின் வாரிசுமான ஐசக் ஹெர்சாக் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

    60 வயதான ஐசக் ஹெர்சாக் இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது தந்தை சைம் ஹெர்சாக் இஸ்ரேலின் முன்னாள் அதிபர் ஆவார். அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு சைம் ஹெர்சாக் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதராக இருந்தார். அதே போல் ஐசக் ஹெர்சாக்கின் மாமா, தாத்தா ஆகியோரும் அரசின் முக்கிய பதவிகளை வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×