search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சீனா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்கா எச்சரிக்கை

    ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீனா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
    வாஷிங்டன்:

    உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் தொடங்கியது இந்த பிரச்சினை.

    அதன் பின்னர் தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன அரசின் அடக்குமுறை என ஒவ்வொன்றாக இரு நாடுகளின் உறவை பலவீனமாக்கியது.

    இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று கொரோனா வைரஸ் இரு நாடுகளுக்கு தீரா பகையை உருவாக்கியுள்ளது. இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையில் ஹாங்காங் விவகாரமும் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.

    சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது.

    இந்த சட்டம் ஹாங்காங்கின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என அமெரிக்கா முதல் நாடாக எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆர்வலர்களை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். இவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வக்கீலும் அடங்குவார்.

    இந்த கைது நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹாங்காங் மற்றும் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

    இந்தநிலையில் ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீன அரசு மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ கூறுகையில் ‘‘இந்த அடக்குமுறை சீன கம்யூனிஸ்டு கட்சி தனது சொந்த மக்கள் மற்றும் சட்டத்தை அவமதிப்பு செய்வதை நினைவூட்டுகிறது. ஹாங்காங் மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டுள்ள சீன அரசு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை அமெரிக்கா பரிசீலிக்கும்" என்றார்.

    மேலும் அவர் ‘‘அரசியல் அடக்குமுறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஒரு அமெரிக்க குடிமகன் கைது செய்யப்பட்ட செய்தியால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அமெரிக்க குடிமக்கள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதையோ அல்லது துன்புறுத்துவதையோ அமெரிக்கா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது’’ எனவும் கூறினார்.

    இதேபோல் கைது செய்யப்பட்டுள்ள ஜனநாயக ஆர்வலர்களை விடுவிக்காவிட்டால் சீனா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
    Next Story
    ×