search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதை படத்தில் காணலாம்.
    X
    பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதை படத்தில் காணலாம்.

    கிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி மக்கள் மாபெரும் போராட்டம்

    கிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர்.
    பிஷ்கெக்:

    மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 16 கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று, 98.14 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் போட்டியிட்ட 16 கட்சிகளில் வெறும் 4 கட்சிகள் மட்டுமே 7 சதவீத வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றது.

    இதனால் மற்ற 12 கட்சிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தன. எனவே தேர்தல் முடிவுகளை ஏற்க போவதில்லை என அந்த கட்சிகள் கூட்டாக முடிவு எடுத்தன. அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் பொதுமக்களும் கைகோர்த்ததால் போராட்டம் விசுவரூபம் எடுத்தது.

    தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சுமார் 600 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதனிடையே தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து ஆவணங்களை கிழித்தெறிந்தனர்.

    இந்த போராட்டத்தால் கிர்கிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழல் இருக்கிறது.
    Next Story
    ×