search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  இன்னும் 3 மாதங்களில் அமெரிக்காவில் கொரோனா பலி 2 லட்சத்தை தொடும்- இந்திய வம்சாவளி பேராசிரியர் கணிப்பு

  அமெரிக்காவில் இன்னும் 3 மாதங்களில் கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தொடும் என்று இந்திய வம்சாவளி பேராசிரியர் கணித்து இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  நியூயார்க்:

  உலகின் வலிமை வாய்ந்த வல்லரசு என்று மார் தட்டிக்கொண்டிருந்த அமெரிக்கா, கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத வைரசால் பெரும் கலக்கத்தை அடைந்துள்ளது.

  வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இந்த வைரஸ் வெறியாட்டம் போடுகிறது. நேற்று மதிய நிலவரப்படி அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று பாதித்துள்ளது. இந்த தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஊரடங்கால் அந்த நாட்டின் பொருளாதாரம், உருக்குலைந்து போனதால், கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் 50 மாகாணங்களும் தளர்வுகளை அறிவித்து பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விட்டுள்ளன.

  இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான ஹார்வர்டு உலகளாவிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் ஆசிஷ் ஜா, அங்கு கொரோனா நிலவரம் குறித்து கணித்து கூறி உள்ளார்.

  இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:-

  வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருங்கள் என்று கூறி யாரையும் பயமுறுத்த விரும்பவில்லை. ஆனால் அனைவரும் முக கவசம் அணியுங்கள், தனி மனித இடைவெளி விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றுங்கள், பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறேன்.

  கொரோனா பரவல் அதிரடியாக குறைய வேண்டும் என்று நிச்சயமான விருப்பம் உள்ளவர்கள் சிந்திப்பார்கள்.

  அடுத்த 3 மாதங்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தட்டையாக இருந்தால், செப்டம்பர் மாதத்தில் பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தொடும். இது மிகவும் மோசமானது. 2 லட்சம் பேர் பலியாவார்கள் என்பது வெறும் ஊகம் மட்டுமல்ல. தற்போது அமெரிக்காவில் தினமும் 800-1000 பேர் இறந்து வருகிறார்கள். இது மிகவும் மோசமானது. எல்லா தரவுகளும் நிலைமை மோசமாகும் என்றுதான் காட்டுகின்றன.

  தினசரி 800 பேர் இறக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், மாதம் ஒன்று சராசரியாக 25 ஆயிரம் பேர் இறப்பார்கள். எனவே 3½ மாதங்களில் 88 ஆயிரம் பேர் மேலும் இறக்கக்கூடும். எனவே செப்டம்பரில் நாம் பலி எண்ணிக்கை 2 லட்சத்தை அடைவோம்.

  கொரோனா தொற்று மையமாக விளங்கிய நியுயார்க்கில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதே என நீங்கள் கேட்கலாம். நியூயார்க், நியுஜெர்சி. கனெக்டிகட், மசாசூசெட்ஸ் போன்ற மாகாணங்களில் குறைகிற நேரத்தில், அரிசோனா, புளோரிடா, டெக்சாஸ், வட கரோலினா, தென் கரோலினா போன்ற மாகாணங்களில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றை அடக்குவதற்கும், பாதுகாப்பாக வெளியே வருவதற்கும் மக்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இருக்கவில்லை.

  நாம் அதைச்செய்யவில்லை. எனவே செப்டம்பர் மாதம் வரை மாதந்தோறும் 25 ஆயிரம் பேரின் இறப்புகளை நாம் சந்திக்கப்போகிறோம். பின்னரும் அது தொடரும். இது மாயமாக மறைந்து விடப்போவதில்லை. இது நாம் விரும்பும் எதிர்காலம் அல்ல. முதலில் கோடை காலத்தில் நிலைமை மேம்படும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், மாறாக வெப்பமான வானிலைக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் போகிறது.

  கோடை காலம் சிறந்த மாதங்களாக அமைய வேண்டும். ஆனால் அரிசோனா போன்ற மாகாணங்களில் கொரோனா தாக்கம் பயமாக இருக்கிறது. ஒரு வேளை கோடை காலம் நமக்கு அதிக இடைவெளியை தரலாம். நம்பிக்கையுடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×