search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவச ‘கொரோனா’ பரிசோதனை

    அமீரகம் முழுவதும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அடுத்த வாரம் முதல் இலவச ‘கொரோனா’ பரிசோதனை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
    அபுதாபி:

    அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகம், தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ‘டிரைவ் துரு’ முறையில் இயங்கும் ‘கொரோனா’ பரிசோதனை மையங்கள், நடமாடும் பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த மையங்களில் தினந்தோறும் பலருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதல்படி அமீரகம் முழுவதும் வசிக்கும் பொதுமக்களில் குறிப்பிட்ட பேருக்கு இலவசமாக ‘கொரோனா’ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதன்படி அடுத்த வாரம் முதல் அமீரகத்தைச் சேர்ந்த குடிமக்கள், கர்ப்பிணிகள், 50 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ‘கொரோனா’ பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.

    அதேபோல் ஏற்கனவே ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ‘கொரோனா’ பாதிப்பு அறிகுறி தென்பட்டவர்கள் ஆகியோருக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.

    அவ்வாறு இலவசமாக ‘கொரோனா’ பரிசோதனை செய்து கொள்ளும் தேதி மற்றும் இடம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அமீரகத்தில் ‘கொரோனா’ வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அமீரகத்தில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 10 குடியிருப்புவாசிகளில் ஒருவர் என்ற அளவில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×