search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்புப் பணியில் வீரர்கள்
    X
    மீட்புப் பணியில் வீரர்கள்

    துருக்கி நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

    துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
    இஸ்தான்புல்:

    துருக்கி நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. அங்கு 1999-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது வரலாற்று சோகமாக அமைந்துள்ளது.

    இதற்கிடையே, அங்குள்ள இலாஜிக் மாகாணத்தில் சிவ்ரிஸ் என்ற சிறிய நகரத்தை மையமாக வைத்து நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.55 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தால் தியார் பக்கிர் உள்பட பல நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 274 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். தேவைப்பட்டால் ராணுவம் மீட்பு பணியில் இறங்க தயாராக உள்ளது என ராணுவ மந்திரி ஹலுசி அகார் தெரிவித்தார். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு பல்வேறு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
    Next Story
    ×