search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோமாவில் இருந்த எழுந்து கண் விழித்த தாய் மற்றும் மகள்
    X
    கோமாவில் இருந்த எழுந்து கண் விழித்த தாய் மற்றும் மகள்

    அர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்

    அர்ஜென்டினாவில் கோமாவில் இருந்த தாய் மகளின் பசி குரல் கேட்டு சட்டென்று எழுந்து கண் விழித்து தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பியூனோஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினா நாட்டின் வடக்கு மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் மரியா லாரா பெர்ரேயரா (வயது 42). 3 குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.

    பல நாட்கள் தீவிர சிகிச்சை பிறகும் பெர்ரேயராவுக்கு சுயநினைவு திரும்பாததால், அவர் மூளை இறப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் எனவே அவரது உறுப்புகளை தானம் செய்யும்படியும் குடும்பத்தினருக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதனை கேட்டு அவரது கணவர் மார்ட்டின் டெல்கடோ அதிர்ச்சியடைந்தாலும், நம்பிக்கையுடன் தனது மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க கோரினார். அதன்படி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த வாரம் மருத்துவமனைக்கு வந்த பெர்ரேயராவின் 2 வயது இளைய மகள் பாசத்துடன் அவர் அருகில் சென்று படுத்தார். பின்னர் தனது தாயின் அவல நிலையை அறியாத அந்த குழந்தை வழக்கமாக கேட்பது போல அவரை கட்டி அணைத்து கொண்டு தனக்கு பசிக்கிறது என கூறி தாய்ப்பால் கேட்டது. அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. 30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த பெர்ரேயரா தன் குழந்தையின் பசி குரல் கேட்டு சட்டென்று கண் விழித்து தாய்ப்பால் கொடுத்தார்.

    இதைப்பார்த்த பெர்ரேயராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். பெர்ரேயராவின் தாய்மை உணர்வை கண்டு அவர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் இந்த ஆச்சரியம் சில நிமிடங்கள்தான் நீடித்தது. தனது குழந்தையின் பசியை தீர்த்துவிட்டு பெர்ரேயரா மீண்டும் கோமாவுக்கு சென்று விட்டார். எனினும் மகளின் குரலை கேட்டதும் பெர்ரேயரா கோமாவிற்கு முன் இருந்ததை போல இயல்பாக எழுந்து தாய்ப்பால் கொடுத்ததால் அவர் விரைவில் குணமடைவார் என நம்புவதாக அவரது கணவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×