என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
    • மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி நடிகை சாந்தினி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நடிகை சாந்தினி கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட கோர்ட்டு, பின்னர் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து, அவர் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி நடிகை சாந்தினி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    சென்னை ஐகோர்ட்டில் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தகவல் சொன்ன நிலையில், அதற்கு நடிகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

    இருந்தாலும் சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமினை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து 3 ஆண்டுகள் நடிகையின் வழக்கை ஏன் பட்டியலிடாமல் இருந்தீர்கள் என சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    • தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
    • பா.ஜ.க. அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது சம்பந்தமாகவும் இந்தக் கூட்டத்தில் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் பா.ம.க. தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து மாம்பழம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி உள்ளது என அன்புமணி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

    இது உண்மைக்கு மாறானது. அவர்கள் போலியான முகவரிகள் கொடுத்து உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை என டாக்டர் ராமதாஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு ஆவணங்களையும்அளித்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையத்தை சட்டரீதியாக அணுகுவது சம்பந்தமாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. அதேபோல நேற்றும் முன்னாள் நீதிபதி அருள், ஜி.கே. மணி ஆகியோர் டாக்டர் ராமதாசுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து இன்று பா.ம.க.மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அன்புமணியை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து நீக்கியது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க டாக்டர் ராமதாஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

    அதேபோல பா.ஜ.க. அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது சம்பந்தமாகவும் இந்தக் கூட்டத்தில் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீ காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாளை (புதன்கிழமை) வன்னியர் சங்க மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
    • எத்தனை நாட்கள் சட்டமன்றம் என்பது அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    சென்னை :

    சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அக்டோபர் மாதம் 14-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். அன்றைய தினம் 2025-2026-ம் ஆண்டு கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

    எத்தனை நாட்கள் சட்டமன்றம் என்பது அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். 

    • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
    • மனிதன் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார்.

    1987 ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார். இப்படத்தில் சோ, வினு சக்கரவர்த்தி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். மனிதன் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகின.

    இந்நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் மனிதன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். 

    மனிதன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆவதால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகுகிறது.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜன நாயகன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளதாகவும், இப்பாடலுக்கு விஜய் குரல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர். 

    • கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
    • இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வைத்து ஊர்வலம் நடந்தது.

    கொடிப்பட்டம் கோவிலை வந்துசேர்ந்ததும் அதிகாலை 5.36 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் தீர்த்தம் எடுத்து ஓம்காளி, ஜெய்காளி கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.

    இதனால் கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் இலவசமாக வழங்கிய மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு வாங்கி வலது கையில் கட்டினர்.

    இதைத்தொடர்ந்து தாங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்களுக்கு பிடித்தமானவேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் பிரிக்க தொடங்குவார்கள். காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது.

    இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    இன்று முதல் 1-ந் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணி, பகல் 12 மணி, பகல் 1.30 மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    இன்று முதல் 9-ம் திருவிழாவான 1-ந் தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு கோலத்தில் வீதியுலா நடக்கிறது.

    6-ம் திருவிழா முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி நடத்துவார்கள்.

    எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களாக காட்சியளிப்பார்கள். 10-ம் திருவிழா அன்று 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி தொடர்ந்த பலலட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 3-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதல், 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படுதல் நடைபெறுகிறது.

    பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முடிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

    12-ம் திருவிழாவான அக்டோபர் 4-ந் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் தசரா விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    • பல்டி படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
    • விஜய் சேதுபதி கூட்டத்தில் ஒருவனாக இருந்து படிப்படியாக உயர்ந்தார்.

    ஷேன் நிகாம், செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பல்டி. இப்படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக ப்ரீதி நடிக்கிறார்.

    இப்படத்தை அறுமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். இப்படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் 26ம் தேதி வெளியாகிறது.

    இந்த படம் குறித்து சாந்தனு நேர்காணல் அளித்தார். அந்த நேர்காணலில் பேசிய அவர், "நான் எப்போதும் சாந்தனுவாக தான் இருக்கிறேன். சாந்தனு பாக்யராஜாக அல்ல. எனது அப்பாவால் தான் எனக்கு சக்கரக்கட்டி பட வாய்ப்பு கிடைத்தது. அப்படம் சரியாக போகாததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எனக்கு வரவில்லை. இதனையடுத்து எனது அப்பாவால் சித்து படம் கிடைத்தது. அடுத்த சில வருடங்களில் எதோ தவறு நடப்பதாக உணர்ந்தேன், ஆனால் அதற்குள் என்னுடைய மார்க்கெட் போய்விட்டது.

    அப்போது தான் சினிமா துறையில் யார் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மணிகண்டன் அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். விஜய் சேதுபதி கூட்டத்தில் ஒருவனாக இருப்பார். பின்னர் படிப்படியாக அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தார்.

    ஆனால் நானோ அடிமட்டத்தில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. பின்னர் இவர்களை பார்த்து நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மக்களோடு தொடர்புபடுத்தக்கூடிய சாமானிய மனிதனின் கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்தேன். அப்படி தான் தங்கம், ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்தேன். இப்போது பல்டி என்கிற படத்திலும் நடித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • விற்பனை மேலும் அதிகரிக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஜி.எஸ்.டி. 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு குறித்த குறித்த அறிவிப்பு வெளியானது முதல் மொபைல், ஏசி, கார், டிவி உள்ளிட்டவைகளில் விலைகளும் குறையும் என்பதால் அதனை வாங்க நினைத்தவர்கள் செப்டம்பர் 22-ந்தேதிக்காக காத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. சீரமைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீரமைப்பு அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏ.சி., டி.வி.க்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    மேலும் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், விலை மற்றும் ஜி.எஸ்.டி குறித்த குழப்பம் தெளிவான பின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். 

    • தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.

    உலகளவில் "தேசிய ஆயுர்வேத தினம்" செப்டம்பர் 23-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளை உலகளவில் மேம்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது.

    2016 ஆம் ஆண்டு முதல், தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசு 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ந்தேதி ''தேசிய ஆயுர்வேத தினம்" கடைபிடிக்கப்படுகிறது என்று அறிவித்தது.

    ஆயுர்வேத நாளை கொண்டாட பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இலவச சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்து இலவசமாக மருந்துகளை வழங்குகின்றன. ஆயுர்வேத நாளன்று ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பங்களித்தவர்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருது' வழங்கி கவுரவிக்கிறது. தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகள், ஒரு பாராட்டு சான்றிதழ் (தன்வந்திரி சிலை) மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    நோக்கம்:

    ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளைப் பரப்புதல்.

    ஆயுர்வேதத்தை உலகமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.

    ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.

    காரணம்:

    ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் தன்வந்திரி முனிவரின் பிறந்த நாளான தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    முக்கியத்துவம்:

    உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றின் சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் முழுமையான ஆரோக்கியத்தை ஆயுர்வேதம் வழங்குகிறது. 

    • ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரெயில்கள் உட்பட மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் வரும் 2027 மார்ச் மாதத்தில் இயக்கப்படும்.

    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மாதவரம் - சிப்காட், பூந்தமல்லி - லைட் ஹவுஸ், மற்றும் மாதவரம் - மணப்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ல் முடித்து, மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரெயில்கள் உட்பட மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்நிலையில் பூவிருந்தவல்லி - போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது.

    மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் வரும் 2027 மார்ச் மாதத்தில் இயக்கப்படும்.

    வரும் 2026 ஜூனில் போரூர் - கோடம்பாக்கம் இடையே, கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே ரெயில் சேவை இயக்கப்படும். மெட்ரோ ரெயில் பாதையின் 2-ம் கட்டப்பணிகள் இறுதி நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    • காந்தாரா படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    நேற்று வெளியான காந்தாரா சாப்டர்1' படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனையடுத்து காந்தாரா படக்குழு வெளியிட்டதாக ஒரு போஸ்டர் இணையத்தில் வைரலானது.

    அந்த போஸ்டரில், "காந்தாரா படத்தை பார்க்க விரும்புவோர் அப்படத்தை பார்க்கும் வரை கீழ்கண்ட 3 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

    1. மது அருந்த கூடாது

    2. புகை பிடிக்கக்கூடாது

    3. அசைவ உணவுகள் சாப்பிட கூடாது

    என்று கூறப்பட்டுள்ளது'

    இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக இந்த மாதிரி ரூல்ஸ் போட்டா தமிழ்நாட்டுல ஒருத்தன் கூட காந்தாரா படத்தை பார்க்க மாட்டான் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.

    இதனிடையே இந்த போஸ்டர் குறித்து காந்தாரா படத்தின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த ரிஷப் ஷெட்டி, "உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர். எங்கள் கவனத்திற்கு அது வந்தபோது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. படத்தின் பிரபல்யத்துக்கு இடையே தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சிலரின் வேலைதான் இது. இதற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    • ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • நேற்று நள்ளிரவே செங்கோட்டையன் சென்னை சென்று சென்று விட்டார்.

    கோபி:

    அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று மாலை நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணி அளவில் சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி காரில் கிளம்பினார்.

    ஈரோடு மாவட்டம் பவானி வழியாக இன்று காலை 7 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே வந்தார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் வகையில் கவுந்தப்பாடியில் இருந்து கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறம் அ.தி.மு.க கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமையில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ, ஜெயக்குமார் எம்.எல்.ஏ, கோபி நகரச் செயலாளர் பிரிணியோ கணேஷ் முன்னிலையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கூட்டத்தை பார்த்து உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி காரை விட்டு கீழே இறங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. காரில் இருந்தவாறு தொண்டர்களின் நோக்கி கையை அசைத்தார். அப்போது கூடி இருந்தவர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என கோஷம் எழுப்பினர்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக காணப்பட்டார்.

    சுமார் 30 நிமிடமாக கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் வரவேற்பை ஏற்று அதன் பிறகு அங்கிருந்து காரில் சத்தியமங்கலம் கிளம்பி சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க ஒருங்கிணைப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து உடனடியாக செங்கோட்டையன் வசித்து வந்த கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    அப்போது அ.தி.மு.க ஒருங்கிணைக்காமல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கோபி செட்டிபாளையம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் நேற்று நள்ளிரவே செங்கோட்டையன் சென்னை சென்று சென்று விட்டார்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி முதல் முதலாக கோவை மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தை தொடங்கும் போது கோபிசெட்டிபாளையம் வழியாக சென்றார். அப்போதும் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×