என் மலர்
வழிபாடு

உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
- இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வைத்து ஊர்வலம் நடந்தது.
கொடிப்பட்டம் கோவிலை வந்துசேர்ந்ததும் அதிகாலை 5.36 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் தீர்த்தம் எடுத்து ஓம்காளி, ஜெய்காளி கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.
இதனால் கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் இலவசமாக வழங்கிய மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு வாங்கி வலது கையில் கட்டினர்.
இதைத்தொடர்ந்து தாங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்களுக்கு பிடித்தமானவேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் பிரிக்க தொடங்குவார்கள். காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது.
இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று முதல் 1-ந் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணி, பகல் 12 மணி, பகல் 1.30 மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
இன்று முதல் 9-ம் திருவிழாவான 1-ந் தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு கோலத்தில் வீதியுலா நடக்கிறது.
6-ம் திருவிழா முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி நடத்துவார்கள்.
எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களாக காட்சியளிப்பார்கள். 10-ம் திருவிழா அன்று 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி தொடர்ந்த பலலட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 3-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதல், 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படுதல் நடைபெறுகிறது.
பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முடிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
12-ம் திருவிழாவான அக்டோபர் 4-ந் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் தசரா விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.






