என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
    • 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும், நேற்று 30 பேரையும் என கடந்த 2 நாட்களில் மட்டும் 47 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

    இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-23 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை பின்னிரவு 3.02 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு கிருத்திகை

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-போட்டி

    கடகம்-சுபம்

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-அமைதி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- தனம்

    மகரம்-நிறைவு

    கும்பம்-சிறப்பு

    மீனம்-உறுதி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பிரச்சனைகள் தீரும் நாள். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    ரிஷபம்

    நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மிதுனம்

    வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் உண்டு. குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    கடகம்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    சிம்மம்

    நினைத்தது நிறைவேறும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

    கன்னி

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாது. வீண் விரயங்கள் உண்டு.

    துலாம்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    விருச்சிகம்

    திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும் நாள். பேச்சுத் திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றை சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வரலாம்.

    தனுசு

    மனக்குழப்பம் அகலும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    மகரம்

    பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நேற்று சந்தித்தவர்களால் சில நன்மைகள் உண்டு.

    கும்பம்

    புகழ்கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

    மீனம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வருமானம் திருப்தியளிக்கும்.

    • காசாவுக்கு கப்பல் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுசென்றார்.
    • அவருடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சென்றனர்.

    வாஷிங்டன்:

    சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் (22).

    உலக நாடுகளுக்கு சுற்றி வந்து சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசுபாடு, புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமான காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சென்றார். அவருடன் பல நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சென்றனர்.

    அப்போது இஸ்ரேல் ராணுவத்தால் இடைமறித்து சிறைவைக்கப்பட்டு சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டார்.

    இதுதொடர்பாக கிரெட்டா தன்பெர்க் சுவீடனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இஸ்ரேல் ராணுவம் தங்களை மிகவும் மோசமாக நடத்தியது என தெரிவித்தார். இதனை இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

    இந்நிலையில் கிரெட்டாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அவர், "கிரெட்டா தன்பெர்க் ஒரு பைத்தியம்போல செயல்படுகிறார். எப்போதும் மூர்க்கமாக உள்ளார். அவர் நல்ல ஒரு மனநல டாக்டரை பார்க்க வேண்டும்" என பரிந்துரைத்துள்ளார்.

    • தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
    • மேலும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). தினேசுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. 2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 'அய்யோ, அம்மா' என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் தூக்கத்தைக் கலைத்தது.

    பலரும் எழுந்து ஓடிவந்தனர். வலியில் கதறித் துடிப்பது தினேஷ் என தெரிந்தது. வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க, பலரும் கதவைத் தட்டினர்.

    சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

    'அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள்.

    நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ்.

    மருத்துவமனை படுக்கையில் கிடந்தபடியே தன் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார் அவர். தினேஷின், மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் இருந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலில் பேட் செய்த வங்கதேச அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    அபுதாபி:

    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 48.5 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்னும், தவ்ஹித் ஹ்ரிடோய் 56 ரன்னும் ரன்னும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ், அஹமத் ஷா ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் அஷ்மத்துல்லா ஒமர்சாய் 40 ரன்கள் எடுத்தார். ஹஷ்மதுல்லா ஷாஹிடி 33 ரன் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    ஏற்கனவே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 3-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்கம் தற்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது.
    • 15 நாளுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடிக்க முடியுமா என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    பா.ஜ.க. தலைவர் ஒருவர் (அமித் ஷா), வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பெயர்களை நீக்குவோம் என்பதைச் சொல்வதற்காக மேற்கு வங்கம் வந்தார்.

    மேற்கு வங்கம் தற்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது. 15 நாளுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடிக்க முடியுமா?

    தற்போதைய சூழ்நிலையில், புதிய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியுமா? இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா அல்லது பொதுமக்களின் உரிமைகளின் நலனுக்காக செயல்பட வேண்டுமா?

    இவை எல்லாம் அமித் ஷாவின் விளையாட்டு. அவர் இந்த நாட்டின் செயல் பிரதமரைப் போல நடந்துகொள்கிறார். பிரதமர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். எனினும், இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன்.

    அமித் ஷாவை எப்போதும் நம்ப வேண்டாம் என பிரதமரை நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நாள் அவர், உங்களுக்கு எதிராக மீர் ஜாபரைப் போல மாறுவார். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. எனது வாழ்க்கையில் பல அரசாங்கங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு திமிர்பிடித்த, சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் பார்த்ததில்லை என தெரிவித்தார்.

    மீர் ஜாபர் 18-ம் நூற்றாண்டில் வங்கத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர். பிளாசி போரில் நவாப் சிராஜ் உத் தவுலாவைக் காட்டிக் கொடுத்து பின்னர் ஆங்கிலேயர்களின் உதவியுடன் மன்னரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது.
    • அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    சிட்னி:

    இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதியும், டி20 தொடர் வரும் 29-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகினர்.

    இதற்கிடையே, தங்கள் அணிக்காக வெவ்வேறு டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஐ.பி.எல். அணி ஒன்று அணுகியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தங்களுக்காக மட்டும் விளையாடினால் தலா 58 கோடி ரூபாய் தருவதாக ஐ.பி.எல். அணி ஒன்று தந்த சலுகையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    கோபன்ஹேகன்:

    குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமூக ஊடகங்களும், செல்போன்களும் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைத் திருடுகின்றன. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார்.
    • உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களுள் ஒன்றாக தமிழகத்தை நிலை நிறுத்தவும், உலகளாவிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதத்திலும் நாட்டில் முதல் முறையாக கோவையில் கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடக்கிறது.

    இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு வருகிறார். அங்கு உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    இந்த உலக புத்தொழில் மாநாட்டில், 39 நாடுகளை சேர்ந்த 264 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இடம் பெறுகிறார்கள். மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 15 அரசுத்துறைகளும் பங்கேற்கின்றன.

    50-க்கும் மேற்பட்ட தமிழக பிராண்டுகள், 150-க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய உரையாளர்கள், 75-க்கும் மேற்பட்ட தொழில் வளர் மையங்கள், 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். வளாகத்தில் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு 315 நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2 நாட்களில் மொத்தம் 11 அமர்வுகளில் உரையும், விவாதமும் நடக்கிறது.

    ஸ்பாட் லைட் என்ற பெயரில் 117 அமர்வுகள் நடக்கிறது. தலா 7 நிமிடங்களில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் இந்த அமர்வுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் சார்பில் உரை நிகழ்த்தப்படுகிறது.

    புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கோல்டு வின்ஸ் பகுதிக்கு செல்கிறார். அங்கு உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்கு ரூ.1791.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவின் மிகப் பெரிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் காரில் மேம்பாலத்தில் பயணித்தபடி உப்பிலிபாளையம் வர உள்ளார். அங்கிருந்து அரசு கலைக்கல்லூரிக்கு செல்கிறார்.

    அரசு கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் உயிர் அமைப்பு சார்பில் சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் விதமாக நான் உயிர் காவலன் என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக விபத்தில்லா கோவை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    அதன்பின்னர் அங்கிருந்து கார் மூலமாக சிட்கோ தொழிற்பேட்டை குறிச்சி வளாகத்திற்கு முதல்-அமைச்சர் செல்கிறார். அங்கு ரூ.126 கோடியில் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைய உள்ள தங்க நகை பூங்காவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மதியம் 2.30 மணிக்கு விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.

    முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்-அமைச்சர் விமான நிலைய பகுதியில் இருந்து கொடிசியா வளாகம் செல்லும் வரை பகுதி மற்றும் கோல்டுவின்ஸ், உப்பிலிபாளையம் அரசு கலைக்கல்லூரி, குறிச்சி பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு நாளை கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    • “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
    • உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (09.10.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை சென்னையில் நடைபெறும் இடங்கள் குறித்து பார்க்கலாம்..

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (09.10.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள விளையாட்டு மைதானம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் ரெட்டேரி, ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள உமாயா மஹால், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-37ல் வியாசர்பாடி, எம்.கே.பி நகர் 3வது பிரதான சாலையில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-86ல் அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனியில் உள்ள ஶ்ரீ வாரு பார்த்தசாரதி பேலஸ், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-101ல் கீழ்பாக்கம், விளையாட்டு திடல் தெருவில் உள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-123ல் கே.பி.தாசன் தெருவில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி. திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-131ல் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள சமுதாய கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152ல் ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-167ல் நங்கநல்லூர், 100 அடி சாலையில் உள்ள ஸ்கேட்டிங் மையம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-179ல் பெசன்ட் நகர், மீன் சந்தை அருகில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-188ல் மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

    இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    • சராசரியாக நாளொன்றுக்கு 34.70 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    • மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டுகள் மூலம் 1,38,54,947 பேர் பயணித்துள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 10.40 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இதில், சராசரியாக நாளொன்றுக்கு 34.70 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    பண பரிவர்த்தனை மூலம் 3,57,52,241 பேர் பயணம் செய்துள்ளனர்,

    மகளிர் விடியல் பயணம் மூலம் 3,97,16,550 பேர் பயணம், டெபிட்கிரெடிட் வாயிலாக 3,996 பேர், UPI வாயிலாக 21,31,351 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சிங்கார சென்னை பயண அட்டை மூலம் 6,71,431 பேர், சென்னை ஒன் மொபைல் செயலி மூலம் 37,993 பேர்,

    மாணவர்கள் கட்டாமில்லா பேருந்து பயண அட்டை மூலம் 1,19,28,220 , மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டுகள் மூலம் 1,38,54,947 பேர் பயணித்துள்ளனர்.

    ×