என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முந்தைய 28 சதவீத ஸ்லாப்பை 18 சதவீதமாகக் குறைக்கிறது.
    • இந்த மறுசீரமைப்பு MT/AMT உடன் 1.0L NA என்ஜினில் கிடைக்கிறது.

    நிசான் இந்தியா, மேக்னைட் AMT வெர்ஷனில் அங்கீகரிக்கப்பட்ட CNG கிட் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அதன் CNG மறுசீரமைப்பு திட்டத்தை நிசான் இந்தியா நிறுவனம் விரிவுபடுத்தி இருக்கிறது.

    புதிய CNG வேரியண்ட்டை இப்போது வாங்குபவர்கள் AMT கியர்பாக்ஸின் வசதியை அனுபவிக்க அனுமதிக்கிறது. கூடுதலாக, நிசான் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த எரிபொருள் மூடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெட்ரோல் மற்றும் CNG வால்வுகள் இரண்டையும் ஒரே எரிபொருள் மூடியின் கீழ் வைத்திருக்கிறது.

    CNG ரெட்ரோஃபிட்மென்ட் கிட் ரூ. 71,999 விலையில் கிடைக்கிறது. இது இப்போது ஜிஎஸ்டி 2.0 க்குப் பிறகு ரூ. 3,000 மலிவானது. முந்தைய 28 சதவீத ஸ்லாப்பை 18 சதவீதமாகக் குறைக்கிறது. மோட்டோசன் எரிபொருள் அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த கிட், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நிசான் ரெட்ரோஃபிட்மென்ட் மையங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டுள்ளது.

    மறுசீரமைப்பு கருவியைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள்/ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டியை பெறலாம். இந்த மறுசீரமைப்பு MT/AMT உடன் 1.0L NA என்ஜினில் கிடைக்கிறது. நிசான் CNG மறுசீரமைப்பு திட்டம் இப்போது டெல்லி-NCR, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இந்தியா முழுவதும் 13 மாநிலங்களை உள்ளடக்கியது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • எந்த ஒரு பொருள் விலை ஏறி, இறங்கினாலும் அதன் மீது வர்த்தகம் செய்ய விரும்புவார்கள்.
    • உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது படுவதாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

    தங்கம் விலை இந்த அளவுக்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படியாக செல்லும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது தொடர்பாக, பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஒரு பொருளின் விலை உயர்வுக்கு தேவை, வினியோகம் ஆகிய இந்த இரண்டும் முக்கிய காரணியாக இருக்கிறது. ஆபரணமாக தங்கம் இருந்த வரை ஒரு மதிப்பு இருந்தது. தங்கம் முதலீட்டு பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துக்கும் முக்கிய பொருளாக மாறிய பிறகு அதன் மதிப்பு அப்படியே பல மடங்கு உயர்ந்துவிட்டது.

    கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எல்லா நாட்டின் அரசாங்கங்களும் சேர்ந்து 1,000 டன் தங்கத்தை வாங்கியிருப்பதாக உலக தங்க கவுன்சில் சொல்கிறது. அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். ரிசர்வ் வங்கிகள் வாங்கும் தங்கம் நேரடியாக 'கஜானா'வுக்கு சென்றுவிடும். ஏற்கனவே தங்க வினியோகம் பாதிப்பு இருக்கும் இந்த நேரத்தில், இப்படி கஜானாவில் தங்கத்தை வாங்கிவைப்பதால் மேலும் வினியோகம் பாதிக்கிறது. குறுகியகாலத்தில் இப்படி தங்கத்தை மொத்தமாக இவர்கள் வாங்கிவைத்ததன் விளைவால் தங்கம் ஏறிவிட்டது.

    எந்த ஒரு பொருள் விலை ஏறி, இறங்கினாலும் அதன் மீது வர்த்தகம் செய்ய விரும்புவார்கள். பங்குகளை மட்டுமே வர்த்தகம் செய்தவர்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கி வைக்கும் (இ.டி.எப்.) வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது படுவதாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

    தங்கம் விலை குறையுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. விலை குறைந்தால் சாதாரண மக்களும் வாங்க தயாராக இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. குறைந்ததும் அதுசார்ந்த பொருட்களை வாங்க மக்கள் எப்படி சென்றார்களோ? அதேபோல் தங்கத்தையும் வாங்குவார்கள். அப்படியாக தங்கத்துக்கான ஆதரவு முழுவதுமாக இல்லாமல் போகும் என்ற நிலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார். 

    • மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 24 ரெயில்கள் இன்று இயக்கப்பட உள்ளது.
    • கடந்த வியாழக்கிழமை 13 ரெயில்களும், நேற்று 24 ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரையில் எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்ற தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தாம்பரம்-திருச்சி (வண்டி எண்.06191), திருச்சி-தாம்பரம் (06190), போத்தனூர்-சென்டிரல் (06050), தாம்பரம்-கன்னியாகுமரி (06133), மதுரை-தாம்பரம் (06162), எழும்பூர்-மதுரை (06045), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), சென்டிரல்-போத்தனூர் (06049), மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 24 ரெயில்கள் இன்று இயக்கப்பட உள்ளது.

    19, 20 ஆகிய தேதிகளில்

    * திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நெல்லை-மேட்டுப்பாளையம் (06030), நாகர்கோவில்-தாம்பரம் (06012), போத்தனூர்-சென்டிரல் (06044), நெல்லை-செங்கல்பட்டு (06154), செங்கல்பட்டு-நெல்லை (06153) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 19 ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    * தாம்பரம்-நாகர்கோவில் (06011), தூத்துக்குடி-எழும்பூர் (06018), சென்டிரல்-கன்னியாகுமரி (06151), மேட்டுப்பாளையம்-நெல்லை (06029), செங்கோட்டை-தாம்பரம் (06014), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 23 ரெயில்கள் வருகிற 20-ந்தேதி இயக்கப்பட உள்ளது.

    20, 21 ஆகிய தேதிகளில்

    * எழும்பூர்-தூத்துக்குடி (06017), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நாகர்கோவில்-சென்டிரல் (06054), கன்னியாகுமரி- சென்டிரல் (06152), தூத்துக்குடி-எழும்பூர் (06018), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), போத்தனூர்-சென்டிரல் (06100), மதுரை-தாம்பரம் (06046), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 25 ரெயில்கள் வரும் 21-ந்தேதி இயக்கப்பட உள்ளன.

    * திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), சென்டிரல்-நாகர்கோவில் (06053), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), சென்டிரல்-போத்தனூர் (06043) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 19 ரெயில்கள் வரும் 22-ந்தேதி இயக்கப்பட உள்ளன.

    தெற்கு ரெயில்வே முழுவதும் சிறப்பு ரெயில்களை பொறுத்த வரையில் கடந்த வியாழக்கிழமை 13 ரெயில்களும், நேற்று 24 ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளது. இதேபோல, இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரையில் மொத்தம் 110 ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 16-ந்தேதி முதல் வருகிற 22-ந்தேதி வரையில் மொத்தம் 147 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சொகுசு பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.
    • கார்கள் மூலம் நேற்று 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வாரவிடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் சிலர் மேலும் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும் செய்கின்றனர்.

    சென்னையை பொறுத்தவரையில், வெளிமாவட்டங்களிலிருந்து பணிக்காகவும், படிப்புக்காகவும் அதிகளவில் மக்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுபோன்ற பண்டிகைகாலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முதல் மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

    அதன்படி, நேற்று முன்தினம் ரெயில் மூலம் பலர் பயணித்த நிலையில், நேற்றும் ஏராளமானோர் ரெயில்களில் பயணித்ததை பார்க்க முடிந்தது. சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் வழக்கமான கூட்டத்தைவிட அதிக அளவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. அங்கும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.

    முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சொகுசு பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. முன்பதிவில்லாத பெட்டியில் மூச்சுவிடக்கூட இடம் இல்லாத சூழல் இருந்தது. நெரிசலில் நின்றுக்கொண்டே தொலைதூரப்பயணத்தை பலர் மேற்கொண்டனர். அதுவும் கடைசிநேர பயணத்தை திட்டமிட்டு வந்தவர்கள், ரெயில்பெட்டியில் தொங்கியபடியும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தன.

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மூட்டை முடிச்சுடுகளுடன் வடமாநிலத்தவர்கள் ரெயிலில் ஏறி பயணித்தனர். அதிலும் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் அதிகம் பயணித்துள்ளனர்.

    சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் இதுவரை சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, சென்னை எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று வரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரை பயணித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு முந்தையநாளை கணக்கிட்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி, நேற்றுமுன்தினம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதில் சென்னையில் இருந்து மட்டும் 14,268 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மட்டும் சென்னையிலிருந்து புறப்பட்ட 2,853 பஸ்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 275 பேர் பயணித்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று 4,257 பஸ்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் பஸ்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

    பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் அந்த குறிப்பிட்ட பஸ்களில் ஏறிச்சென்றனர். முன்பதிவில்லாத சிறப்பு பஸ்களில் ஓடிப்போய் இடம்பிடித்தும், முண்டியடித்து ஏறியும் மக்கள் பயணித்தனர்.

    இதுதவிர ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து மக்கள் பயணம் மேற்கொண்டனர். கடந்த 2 நாட்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 210 பேர் பயணித்ததாகவும், இன்றும், நாளையும் சேர்த்து சுமார் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்க உள்ளதாகவும் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அ.அன்பழகன் தெரிவித்தார்.

    சிலர் சொந்த கார்களிலும் பயணித்தனர். அதன்படி, அனைவரும் நேற்று காலையிலிருந்து தங்களுடைய காரில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் ஜி.எஸ்.டி. சாலை, போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போனது.

    இப்படியாக கார்கள் மூலம் நேற்று 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இன்றும், நாளையும் சேர்த்து எப்படியும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

    மொத்தத்தில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து நேற்றுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையெடுத்துள்ளனர். இன்றும், நாளையும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

    ஒரே நேரத்தில் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னை ஜி.எஸ்.டி. சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • சனிப் பிரதோஷம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-1 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி பிற்பகல் 2.24 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : பூரம் இரவு 6.16 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

    இன்று சனிப் பிரதோஷம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம். தேவக்கோட்டை மணிமுத்தாநதிக்கு அவ்வூர் சகல ஆலயமூர்த்திகளும் எழுந்தருளி விஷூ உற்சவ தீர்த்தவாரி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கராஜர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-உண்மை

    மிதுனம்-நலம்

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-முயற்சி

    கன்னி-நலம்

    துலாம்- தனம்

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- நிறைவு

    மகரம்-போட்டி

    கும்பம்-கடமை

    மீனம்-வாழ்வு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டால் ஆர்வம் காட்டும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர்.

    மிதுனம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கடகம்

    மனக்குழப்பம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    சிம்மம்

    கோவில் வழிபாட்டால் குறைகள் தீரும் நாள். வழிபாடுகளில் சிந்தனையைச் செலுத்துவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    துலாம்

    வீடு மாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

    விருச்சிகம்

    நந்தி வழிபாட்டால் நலம் கிடைக்கும் நாள். இடம் வாங்கும் யோகம் உண்டு. வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். சொன்ன சொல்லை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

    மகரம்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். கூட இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கும்பம்

    நன்மைகள் நடைபெறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

    மீனம்

    விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. உற்ற நண்பர் ஒருவரின் ஒத்துழைப்பு உண்டு.

    • குஜராத் மாநிலத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • இதில் ஜடேஜாவின் மனைவி உள்பட 19 புதுமுகங்கள் மந்திரியாக பதவியேற்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும், 2027-ம் ஆண்டு சட்டசபை தேர்தலும் நடக்கின்றன.

    அதற்குமுன் மந்திரி சபையை மாற்றி அமைக்க முதல் மந்திரி முடிவு செய்தார். அவரது அறிவுறுத்தலின்படி, அவரைத் தவிர மீதி உள்ள 16 மந்திரிகளும் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை முதல் மந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்நிலையில், நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத்தை முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்தித்தார். புதிய மந்திரிகள் பதவியேற்புக்கு அனுமதி கோரினார். கவர்னரும் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தில் மந்திரி சபை விரிவாக்க நிகழ்ச்சி நடந்தது.

    19 புதுமுகங்களுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    அவர்களில், ஆச்சரியப்படத்தக்க புதுமுகமாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா புதிய மந்திரியாக பதவியேற்றார். ஜடேஜாவும், அவருடைய மகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா இறுதிச்சடங்கு நடந்தது.
    • அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர்.

    நைரோபி:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது உறுதியானது.

    அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஒடிங்காவின் மறைவு 7 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நைரோபி விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நைரோபி விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.

    எனவே சில மணி நேரம் கழித்தே விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் மோய் கால்பந்து மைதானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் தடுப்புச் சுவரை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    எனவே பொதுமக்களை விரட்டியடிப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் மக்கள் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் கென்யாவில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ரஷிய அதிபர் புதினை ஹங்கேரியில் சந்தித்துப் பேச உள்ளேன் என்றார் அதிபர் டிரம்ப்.
    • வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் வரவேற்றார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் - ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதற்கிடையே, அதிபர் டிரம்ப் சமூக ஊடக பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷிய அதிபர் புதினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளேன். சந்திப்புக்கான தேதி இன்னும் இறுதி செய்யப் படவில்லை. இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு நடக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்குச் சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் வாசலில் வந்து வரவேற்றார் அதிபர் டிரம்ப்.

    இந்தச் சந்திப்பின்போது அதிபர் புதினுடன் நடந்த உரையாடல் விபரங்கள் மற்றும் உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    • இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் நுழைந்துள்ளது.
    • டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் யுபிஐ ஆதிக்கம் செலுத்துகிறது என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போதுஅவர் பேசியதாவது:

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்தியாவை யாரும் தடுக்கமுடியாது. பல சவால்களில் இருந்து இந்தியா மீண்டுள்ளது.

    140 கோடி இந்தியர்களும் முன்னேறிச் செல்கின்றனர். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் நுழைந்துள்ளது.

    டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் யுபிஐ ஆதிக்கம் செலுத்துகிறது.

    இன்று உலகின் 50 சதவீத டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கிறது.

    2014-ம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேருக்கு வங்கிக்கணக்கு இல்லை.

    நாங்கள் வங்கி அமைப்பை சீரமைத்ததுடன் 50 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளோம் என தெரிவித்தார்.

    ×