என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து வென்றது.
    • ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.

    அகமதாபாத்:

    டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தில் தொடங்கியது.

    வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஷ்லி கார்ட்னர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. பெத் மூன் மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் அரை சதமடித்தனர். பெத் மூன் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.

    ஆர்சிபி தரப்பில் ரேணுகா தாகூர் சிங் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. எல்லீஸ் பெரி 34 பந்தில் 57 ரன்கள் எடுத்தார்.

    5-வது விக்கெட்டுக்கு இணைந்த ரிச்சா கோஷ், கனிகா அவுஜா ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிச்சா கோஷ் 27 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 64 ரன்கள் குவித்தார். கனிகா 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.

    • மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
    • ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.

    ஆனாலும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

    இந்நிலையில், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே, இதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த 2021, ஜூலை மாதத்தில் போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். 2023, ஜூலையிலும் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 243 ரன்கள் எடுத்து வென்றது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஸ்வான் 46 ரன்னிலும், சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தையப் தாஹிர் 38 ரன்னும், பாபர் அசாம் 29 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேரில் மிட்செல், டாம் லாதம் அரை சதம் கடந்தனர். டேவன் கான்வே 48 ரன்னில் அவுட்டானார். கேன் வில்லியம்சன் 38 ரன் எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து 45.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 

    • பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
    • பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    தெற்கு ரெயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, அதன் விபரம் பின்வருமாறு:-

    சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக வரும் 16, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி உட்பட 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.
    • ஆர்சிபி தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக பெத் மூன் -லாரா வால்வார்ட் ஆகியோர் களமிறங்கினர். லாரா வால்வார்ட் 6 ரன்னிலும் அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து பெத் மூன் மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். பெத் மூன் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டியாண்ட்ரா டாட்டின் 25, சிம்ரன் ஷேக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்தது. ஆர்சிபி தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் போது, அதனை தமிழக அரசே அளித்திருக்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக இருந்த போதே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தவெக தலைவர் விஜய்-க்கு சிஆர்பிஎஃப் Y பிரிவு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் போது, அதனை தமிழக அரசே அளித்திருக்க வேண்டும். இது அரசியல் கிடையாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பும்ரா தற்போது முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருந்தாலும் நம்மிடம் சிறந்த அணி உள்ளது.
    • வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல், சிறப்பாக செயல்பட்டு முன்னோக்கி செல்வதில் கவனம் செலுத்துங்கள்.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

    இந்த தொடரில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர் இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு துறையும் பலவீனமாக உள்ளதுடன், அணியின் வெற்றி வாய்ப்பையும் அது பாதித்துள்ளதாக முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல. அது ஒட்டுமொத்த அணியையும் சார்ந்தது. ஆனால் பும்ரா தற்போது முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருந்தாலும் நம்மிடம் சிறந்த அணி உள்ளது.

    அதனால் வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல், சிறப்பாக செயல்பட்டு முன்னோக்கி செல்வதில் கவனம் செலுத்துங்கள். இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    என்று தெரிவித்துள்ளார். 

    • தற்போது பாஜக தலைவர்களிடையே அமைச்சரவையில் இடம் பிடிப்பது தொடர்பாக சண்டை நடைபெற்று வருகிறது.
    • அதிலும் பொதுமக்கள் பணத்தை சுரண்டுவதற்கான துறையை பெறுவதற்கான சண்டை நடைபெற்று வருகிறது.

    டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.

    பொதுமக்களின் நிதியை சுருண்டுவதற்கு வசதியான இலாகாக்களை பெறுவதில் பாஜக தலைவர்களிடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதனால் ஆட்சி அமைக்க காலதாமதமாகிறது என டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளர்.

    இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-

    தற்போது பாஜக தலைவர்களிடையே அமைச்சரவையில் இடம் பிடிப்பது தொடர்பாக சண்டை நடைபெற்று வருகிறது. அதிலும் பொதுமக்கள் பணத்தை சுரண்டுவதற்கான துறையை பெறுவதற்கான சண்டை நடைபெற்று வருகிறது.

    டெல்லி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கான பழியை ஆம் ஆத்மி கட்சியின் மீது சுமத்துவதே அவர்களின் உத்தி.

    அவர்கள் தங்கள் சொந்த தோல்விகளை மறைக்கவும், தங்கள் வாக்குறுதிகளை மீறுவதை நியாயப்படுத்தவும் இந்த சாக்குப்போக்கைப் பயன்படுத்துவார்கள்.

    தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக மோடி உத்தரவாதம் என்ற பெயரில் ஒரு துண்டு பிரசுரத்தை விநியோகித்தது. அதில் டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதத்திற்கு ரூ.2,500 என்று உறுதியளித்தது. இது முதல் அமைச்சரவை கூட்டத்தில் செயல்படுத்தப்படும் என்றும், முதல் தவணை மார்ச் 8-ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

    இருப்பினும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று பாஜக வட்டாரங்கள் இப்போது தெரிவிக்கின்றன.

    இவ்வாறு அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

    • குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
    • பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர்.

    புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே, தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, அதே பள்ளியில் 12ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளி செல்ல மாட்டேன் என சிறுமி அழுது அடம் பிடித்த நிலையில் பெற்றோர் பொறுமையாக விசாரித்த போது உண்மை அம்பலமாகியுள்ளது.

    பிறகு, சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆசிரியர்களை காண்பித்தபோது சரியாக அடையாளம் காட்டியுள்ளார்.

    இதைதொடர்ந்து, ஆசிரியர் மணிகண்டனுக்கு தர்ம அடி கொடுத்த சிறுமியின் பெற்றோர் போலீசில் ஒப்படைத்தனர். குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதியவில்லை என்றும் அரசியல் தலையீட்டால் காவல்துறை மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டித்து மாணவியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பான சூழல் நிலவி உள்ளது.

    பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர். இதற்கிடையே, புதுச்சேரி- கடலூர் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    • விளையாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும்.
    • 2036 ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டி இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது என உறுதி அளித்தார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    விளையாட்டில் இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம். ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும்போது, நமது வீரர்கள் பதக்கங்களை வென்று, இந்திய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வார்கள்" என்றார்.

    மேலும், மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கும்போது, நம்முடைய விளையாட்டு பட்ஜெட் 800 கோடியாக இருந்தது. தற்போது அது 3,800 கோடியாக உயர உள்ளது. இது மோடி அரசு விளையாட்டு துறை வளர்ச்சிக்காக உறுதிப்பூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.

    2014-ல் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 15 பதக்கங்கள் வென்றனர். தற்போது அது 26 ஆக உயர்ந்துள்ளது, 2014 ஆசியப் போட்டியில் 57 பதக்கங்கள் வென்ற நிலையில், 2023-ல் 107 ஆக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது ஆரம்கால கட்டத்திலேயே உள்ளது. அடுத்த வருடம் வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது தொடர்பாக முடிவு எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எடப்பாடி பழனிசாமி நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
    • பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்.

    ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    அதிமுக கட்சியை ஒரு நல்ல நோக்கத்தோடு கொண்டுப் போக வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் செல்வாக்கு உள்ள அனைவருமே கட்சியில் இருக்கக்கூடாது என்று ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டார்.

    அதேபோல், கட்சியில் யார் சுயமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ, யார் சரி, தவறு என்பவதில் சரி என்கிறார்களோ அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதேபோன்ற செயல்பாட்டினால் நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். ஒரு சிலர் மாற்று கட்சிக்கு மாரிவிட்டனர். ஒரு சிலர் மாற்றுக் கட்சிக்கு செல்ல விருப்பமில்லாமல் கட்சியில் ஒதுங்கி எந்த வேலையையும் செய்யாமல் இருக்கின்றனர்.

    எடப்பாடியின் இதுபோன்ற செயல்களால் அதிமுக பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 1998-களில் அம்மாவின் நம்பிக்கைக்கூறிய நாயகனாக செயல்பட்டு, தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேல் அம்மா அவர்கள் ஒரு கடுஞ்சொல் கூட அப்பாவை பேசினது கிடையாது.

    எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் அப்பாவிடம் கலந்தாலோசித்த பிறகே முடிவுகளை எடுப்பார்கள். அவ்வாறு நம்பிக்கைக்குறியவர் அப்பா.

    ஆனால், பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார். நிர்வாகிகளிடம் தவறான கருத்துகளை புகுத்திக் கொண்டிருக்கிறார். முழுநேரமும் சொந்த கட்சிக்காரர்களையும், கட்சி தலைவர்களையும் எப்படி காலி செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

    இதனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகள் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது இந்தியாவிலேயே முதன்மையான கட்சியாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

    நம் சகோதரர்களுக்குள் பிரிவினைவாதத்தை கொண்டு வந்து தற்போது வரை அவர்கள் எந்த மாற்றமும் இன்றி செயல்புரியாத காரணத்தினால், அதிமுக மிகப்பெரிய பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
    • இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. முதலாவது ஆண்டில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மகுடம் சூடின.

    இந்த நிலையில் 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.


    இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி பெற்றுள்ளன. 

    ×