என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
- இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.
ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.
'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரயில்வே போலீஸ் ரீனா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.
- பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.
இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு பின்னர், மகா கும்பமேளா செல்லும் வழித்தடத்தில் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

18 பேர் உயிரிழந்த ரெயில் நிலையத்தின் 16 ஆவது நடைமேடையில் ரீனா தனது குழந்தையை சுமந்தவாறு பயணிகளை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, பல பயணிகள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணக்கம் செலுத்தி செல்கின்றனர்.

- பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.
- செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா?
விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சி.வி.சண்முகம் பேசியதாவது:
* பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.
* இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு.
* சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.
* சொன்னால் என் மீது வழக்கு போடுவார்கள். போட்டுக்கொள்ளுங்கள்.
* செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா? என்று அவர் பேசினார்.
- இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
கராச்சி:
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்றும் 2 நாட்களே உள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற 7 அணிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐசிசி தொடர் மற்றும் இரு தரப்பு தொடர் என்றால் அந்த மைதானங்களில் அணிகள் பங்கேற்கும் நாட்டின் கொடி பறக்கவிடுவது வழக்கமான ஒன்று. ஆனால் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணியின் கொடி இடம் பெறாதது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
- மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.
- இந்தி மொழி பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் வரை மும்மொழி கொள்கையை எதிர்ப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வரிசையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையை மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கடைபிடித்தார்கள்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (SSA) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம்.
எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே.
- அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டிற்கு ஈரோட்டிலிருந்து போலீசார் வந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பெரியாரை பற்றி நான் பேசுகிறேன். பெரியாரை இகழ்ந்து பேசி விட்டதாக கூறுகிறார்கள். பெரியார் பேசியதை எடுத்து பேசுகிறேன்.
* பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே.
* பெரியார் இதெல்லாம் பேசி இருக்கிறார் என்று நான் சொன்னால் இதெல்லாம் பேசவில்லை என்று மறுக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் பேசினார் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவதூறாக பேசக்கூடாது. படம் பொய். பார்த்தது பொய் என்று பேசக்கூடாது.
* தன்னால் அவர்களுக்கு நெருக்கடி இருப்பதால் தான் இவ்வாறு செய்கிறார்கள்.
* அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது.
* எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்.
* தகைசால் தமிழர் விருதுக்கு மாற்றாக தகைசால் திராவிடர் விருது கொடுக்க வேண்டியதுதானே என்று அவர் கூறினார்.
- இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 27-ந் தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து, காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.
இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் மீனவர் செந்தமிழ் காலில் பயங்கர அடிபட்டு காலை அகற்றும் நிலைக்கும், மணிகண்டன் கண் பறிபோகும் நிலைக்கும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4-வது நாள் போரட்டமாக, கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று 7-வது நாள் போராட்டமாக, காரைக்கால் ரெயில் நிலையத்தில், வேளாங்கண்ணி ரெயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் காரைக்கால் மாவட்ட போலீசார் மீனவர்களிடம் சமாதானம் பேசி ஒவ்வொருவரையும் தனித்தனியாக தண்டவாளத்தை விட்டு அகற்றி ரெயில் செல்ல அனுமதித்தனர்.
இதனால் ரெயில் 30 நிமிடம் தாமதமாக சென்றது. மேலும் ரெயில் நிலையத்தை ஒட்டிய தோமாஸ் அருள் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
- பயிற்சியின் போது விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் காயம் அடைந்தார்.
- ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து அவரது இடது முழங்காலில் தாக்கியது.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது. பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்திய அணி மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பயிற்சியின் போது விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து அவரது இடது முழங்காலில் தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் வலியால் துடித்தார். மருத்துவ உதவிக்கு பிறகு ரிஷப்பண்ட் சிறிது நேரம் கழித்து பயிற்சிக்கு திரும்பினார். இதனால் இது பயப்படும் படியான காயம் இல்லை என்று கருதப்படுகிறது.
ரிஷப்பண்ட் 2022 டிசம்பரில் பயங்கர விபத்தில் சிக்கினார். அதில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்த விபத்தில் முழங்காலில்தான் அவருக்கு அதிகமான காயம் ஏற்பட்டது. தற்போதும் முழங்காலில்தான் காயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்டுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கே.எல்.ராகுல் தான் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதில் 3-வது ஆட்டத்தில் அவர் திறமையை வெளிப்படுத்தினர்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அணியின் முதல் நிலை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தான் என்று பயிற்சியாளர் காம்பீர் தெளிவுப்படுத்தி இருந்தார். அதே நேரம் ரிஷப்பண்ட் இடம்பெற வேண்டும் என்பதில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக அகர்கர்-காம்பீர் இடையே மோதல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காள தேசம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 20-ந் தேதி எதிர் கொள்கிறது.
- எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
- தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று கூறினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
* எல்லா வரியையும் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பதா?
* எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
* தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.
இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இதற்கிடையே, 2-வது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று முன்தினம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
நேற்று மூன்றாவது கட்டமாக மேலும் 112 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 44 பேர் அரியானா மாநிலத்தையும், 33 பேர் குஜராத் மாநிலத்தையும், 2 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா ஒருவர் இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
3-வது கட்டமாக நேற்று அமிர்தசரஸ் வந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
இதுதொடர்பாக, அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி கூறுகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்ததாகக் கூறப்படும் இந்தியர்களின் 3வது குழு நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர். நேற்று வந்த விமானத்தில் 112 பேர் வந்தனர்.
அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் டயப்பர்கள் என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் வழங்கினோம். எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்து இருந்தோம். அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
- இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.
- ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள்
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். ரெயில்வே துறையில் நிர்வாக தோல்வியே கூட்டநெரிசலுக்கு காரணம் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து கருத்து தெரிவித்த பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் சர்ச்சை ஒன்றை கிளப்பினார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இது ரெயில்வேயின் தவறு. ரெயில்வேயின் தவறான நிர்வாகத்தாலும் அலட்சியத்தாலும் இவ்வளவு பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மகா கும்பமேளாவில் நிலவும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த கும்பமேளாவின் அர்த்தம் என்ன, கும்பமேளாவே அர்த்தமற்றது" என்றார்.
இதை கையில் எடுத்த பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் சர்மா, ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துக்களின் மத உணர்வுகளை அவமதித்து வந்துள்ளனர்.
மகா கும்பமேளாவை 'அர்த்தமற்றது' என்று ஆர்ஜேடி தலைவர் கூறியது, இந்து மதம் குறித்த அக்கட்சியின் மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள்(ஆர்ஜேடி) ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.







