என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: பாண்ட்யா அடித்த பந்தில் காயம்.. வலியால் துடித்த ரிஷப் பண்ட்- வீடியோ
- பயிற்சியின் போது விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் காயம் அடைந்தார்.
- ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து அவரது இடது முழங்காலில் தாக்கியது.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது. பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்திய அணி மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பயிற்சியின் போது விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து அவரது இடது முழங்காலில் தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் வலியால் துடித்தார். மருத்துவ உதவிக்கு பிறகு ரிஷப்பண்ட் சிறிது நேரம் கழித்து பயிற்சிக்கு திரும்பினார். இதனால் இது பயப்படும் படியான காயம் இல்லை என்று கருதப்படுகிறது.
ரிஷப்பண்ட் 2022 டிசம்பரில் பயங்கர விபத்தில் சிக்கினார். அதில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்த விபத்தில் முழங்காலில்தான் அவருக்கு அதிகமான காயம் ஏற்பட்டது. தற்போதும் முழங்காலில்தான் காயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்டுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கே.எல்.ராகுல் தான் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதில் 3-வது ஆட்டத்தில் அவர் திறமையை வெளிப்படுத்தினர்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அணியின் முதல் நிலை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தான் என்று பயிற்சியாளர் காம்பீர் தெளிவுப்படுத்தி இருந்தார். அதே நேரம் ரிஷப்பண்ட் இடம்பெற வேண்டும் என்பதில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக அகர்கர்-காம்பீர் இடையே மோதல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காள தேசம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 20-ந் தேதி எதிர் கொள்கிறது.






