என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே செபி அமைப்பு தலைவராக நியமிக்கப்பட்டார்.
- இவர் மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.
கடந்த 1987-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேரடரான துஹின் காந்தா பாண்டே முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக இருந்து வந்தார்.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, ஜெர்மனியின் ஜேன்சன்-நுயென் ஜோடி மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-10, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
- சுமார் 45 நாட்கள் நடந்த மகா கும்பமேளாவில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று புனிதநீராடினர்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. சுமார் 45 நாட்கள் நடந்த மகா கும்பமேளாவில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
இதற்கிடையே, கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வர இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கடைசிவரை ராகுலும், பிரியங்காவும் மகா கும்பமேளாவுக்கு வரவே இல்லை.
இந்நிலையில், கும்பமேளாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வருகை தராதது ஏன் என துறவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, உ.பி.யின் அமேதியில் உள்ள பரமஹன்ஸ் மடத்தின் துறவி கூறுகையில், கங்கை தாயின் மடியில் அமர்ந்தால் காங்கிரஸ் செய்யும் மதத்துக்கு எதிரான அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அந்த அச்சத்தால் அவர்கள் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை. தங்களது அரசியலைத் தொடரவே இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு வருகை தரவில்லை. பிரயாக்ராஜ் அவர்களது சொந்த குடும்ப பூமியாக இருந்தும் அதை உதாசீனப்படுத்தி விட்டனர். இந்தத் தலைவர்கள் சனாதனத்துக்கு எதிரானவர்கள். உலக நாடுகளில் இருந்து பலரும் வந்த மகா கும்பமேளாவுக்கு காங்கிரசார் வராதது ஏன்? என்றனர்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 என மெத்வதேவ் கைப்பற்றினார். இதில் சுதாரித்த கிரீக்ஸ்புர் அடுத்த இரு செட்களை 7-6 (9-7), 7-5 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் மெத்வதேவ் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.
மெத்வதேவ் சமீபத்தில் நடந்த கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் பாதியில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிபர் டிரம்பை இன்று சந்தித்தார்.
- மன்னர் சார்லஸ் சார்பாக அதிபர் டிரம்பிற்கு அரசுமுறை பயணத்துக்கு அழைப்பு விடுத்தார்.
வாஷிங்டன்:
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அதிபர் டிரம்பைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்பை இன்று சந்தித்தார். அப்போது, மன்னர் சார்லஸ் சார்பாக அதிபர் டிரம்பிற்கு அரசுமுறை பயணத்துக்காக அழைப்பு விடுத்தார். கெய்ர் ஸ்டார்மரின் இந்த அழைப்பினை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.
ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அதிபர் டிரம்பிடம் ஸ்டார்மர் அழுத்தம் கொடுப்பார் என கூறப்படுகிறது.
- இஸ்ரேலில் மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக வந்த கார் மோதியது.
- இந்த விபத்து ஏற்படுத்தியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேலின் வடக்கே அமைந்துள்ள ஹைபா நகரின் தெற்கே கார்கர் பகுதியில் வாகனம் ஒன்று நடந்துசென்றவர்கள் மீது இன்று திடீரென மோதி விபத்து ஏற்படுத்தியது. அங்கிருந்த பலரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சிக்கி 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்துள்ளது என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மக்கள் கூட்டத்தின்மீது வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென மோதி விபத்து ஏற்படுத்தி இருக்கிறார். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.
விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
- முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய குஜராத் ஜெயண்டஸ் அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா 33 ரன்கள் எடுத்தார்.
குஜராத் டாட்டின், தனுஜா கன்வர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஆஷிக் கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். லிட்ச்பீல்ட் 30 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆனாலும், நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, பிரிட்டனின் லாயிட், ஜூலியன் ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 7-5 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-5 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- நடப்பாண்டில் கூடுதலாகத் தொடங்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
- மாவட்ட கலெக்டர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (27.2.2025) தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் அம்மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேதமடைமடையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் 2024-25 கொள்முதல் பருவத்தில் இதுவரை 16,94,796 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட இது 3.10.288 மெட்ரிக் டன் அதிகமாகும்.
விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கால தாமதமின்றி கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு 2088 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதலில் ஆறாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏறத்தாழ 200 கொள்முதல் நிலையங்கள் நடப்பாண்டில் கூடுதலாகத் தொடங்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், 28.02.2025 மற்றும் 01.03.2025 ஆகிய இரண்டு நாட்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் இந்த மாவட்டங்களின் கலெக்டர்கள் தயார் நிலையில் இருந்து மழையால் நெல் பாதிக்கப்படாமல் கொள்முதல் செய்திடவும், கொளமுதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைத்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார்கள். மாவட்ட கலெக்டர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், இ.ஆ.ப. கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு. இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் காணொலி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மேலாண்மை இயக்குநர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்தம் 27,308 கடைகள் ஒதுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
- 3 லட்சத்து 65 ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்நாடு, வெளிநாடு மதுபானங்கள் சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகை சில்லறைகள் கடைகள் திறப்பதற்கு உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உ.பி. மாநில அரசின் கலால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் எனக் கூறப்பட்ட நிலையில், நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கட்டணமாக 1987.19 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 6-ந்தேதி குலுக்கல் மூலம் விண்ணப்பிதவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும் எனத் கலால்துறை ஆணையர் ஆதர்ஷ் சிங் தெரிவித்துள்ளார். மொத்தம் 27,308 கடைகள் ஒதுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு?
- காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா?
கள்ளக்குறிச்சியில் 66 பேர் பலியாக காரணமாக இருந்த சாராய வியாபாரிகள் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் கள்ளச்சாராயம் காய்க்கிறார்கள் என்றும் ஜாமினில் வந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ற செய்கிறார்கள் என கண்காணிக்காதது காவல்துறைக்கே கரும்புள்ளி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள்.
ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது என்பது, ஒட்டு மொத்த தமிழகக் காவல்துறைக்கே கரும்புள்ளி.
தனது துறையின் அடிப்படைப் பணிகளைக் கூட கவனிக்காதவண்ணம், அந்தத் துருப்பிடித்த இரும்புக்கரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்? மீண்டும் அதே பகுதியில், அதே கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு?
66 உயிர்களைக் கொன்று ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள், மீண்டும் துணிச்சலாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால், அது காவல்துறைக்கே தெரியாமல் நடக்கிறது என்பதை எப்படி நம்ப முடியும்? காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா?
கள்ளச்சாராய விற்பனையில் கிடைக்கும் பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது? ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இனியும் இல்லாத காரணங்களின் பின்னால் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல ஒளிந்து கொள்ளாமல், தைரியமாக வந்து விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.
- மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும்.
சென்னை கொளத்தூரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிறகு அவர் உரையாற்றியதாவது:-
நமது கொளத்தூர் தொகுதியில் மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி உள்ளோம். ரூ.210 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் பெரியார் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.
பெரியார் மருத்துவமனையை பொது மக்கள் சுகாதாரத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக நினைத்து சிறப்பாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களை கேட்டுக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் வகையில் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிய பிரதிநித்துவம் தரப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் தரப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்யப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், ஊராட்கள் சட்டத்தில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்தம் செய்யப்படும்.
மாற்றுத்திறநாளிகள் என பெயர் கொடுத்து சுயமரியாதையை காத்தவர் நமது கலைஞர் கருணாநிதி. கலைஞர் வழியில் மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதையை காக்கும் வகையில் அதிகாரத்தில் பங்கு.
மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும். இதுவே உண்மையான சமூக நீதி பெரியார் அரசு. வடசென்னையை வளர்ச்சி அடைந்த சென்னையாக மாற்றுவதில் பெரியார் மருத்துவமனை ஒரு மைல்கல்.
இவ்வாறு அவர் கூறினார்.






