என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 10-க்கும், ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 80-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்றும் குறைந்தது. முந்தைய நாளை காட்டிலும் கிராமுக்கு ரூ.50 சரிந்து ரூ.7 ஆயிரத்து 960-க்கும், சவரனுக்கு ரூ.400 சரிந்து ரூ.63 ஆயிரத்து 680-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

    இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,940-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,680

    27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080

    26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400

    25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600

    24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-02-2025- ஒரு கிராம் ரூ.105

    27-02-2025- ஒரு கிராம் ரூ.106

    26-02-2025- ஒரு கிராம் ரூ.106

    25-02-2025- ஒரு கிராம் ரூ.108

    24-02-2025- ஒரு கிராம் ரூ.108

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • தென்னகத்தின் உரிமைக்குரலாய், தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய், தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் விளங்கி வரும் திராவிட மாடல் முதல்வர்.
    • தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தென்னகத்தின் உரிமைக்குரலாய் - தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய் - தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் - தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் திராவிட மாடல் முதல்வர் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
    • திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதைதொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர், எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உடன் இருந்தனர்.

    இந்தி திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • ஜெலன்ஸ்கியால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது.
    • ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெறாது.

    உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த சந்திப்பு நடத்தப்பட்டது. 

    இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் இருதலைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் பதிலுக்கு பதில் பேசி கொண்டே இருந்தனர். இதில் ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் பல குற்றச்சாட்டுகளை கூறினார்.

    டிரம்ப் கூறும்போது, "நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். இதில் நீங்கள் வெற்றி பெற போவதில்லை. நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். 3-ம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது.

    உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. உங்களுக்காக 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். இல்லையென்றால் போர் 2 வாரத்தில் முடிந்திருக்கும். நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள். உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று எனக்கு தெரியும்.

    நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அமைதி ஒப்பந்தத்தை மிகவும் கடினமாக்கும் என்று நான் பயப்படுகிறேன். நீங்கள் தனியாக செல்ல எந்த வாய்ப்பும் உங்களிடம் இல்லை. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் வீரர்கள் குறைவாக உள்ளனர். ஆனால் நீங்கள் எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். நான் தொடர்ந்து போராட விரும்புகிறேன்' என்று எங்களிடம் கூறுகிறீர்கள்.

    உயிர்கள் இழக்கப்படாமல் இருக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. நான் புதினுடன் இணையவில்லை., நான் யாருடனும் இணைய வில்லை. நான் அமெரிக்காவுடன் இணைந்திருக்கிறேன்.

    நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது நாங்கள் வெளியேறி விடுவோம்" என்று தெரிவித்தார்.

    ஜெலன்ஸ்கி கூறும் போது, "நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இருக்கிறோம். இவ்வளவு காலமாக நாங்கள் வலுவாக இருந்தோம். நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவித்தோம். போரின் போது, அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. உங்களுக்கும் கூட பிரச்சினை உள்ளன. இப்போது அதை உணர மாட்டீர்கள், ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் உணருவீர்கள்" என்று கூறினார்.

    ஆனால் ஜெலன்ஸ்கி பேசியபோது டிரம்பும், துணை அதிபர் வான்சும் குறுக்கிட்டு பேசி கொண்டே இருந்தனர். இதில் இருவரும் சத்தமாக பேசினார். அப்போது வான்சிடம் ஜெலன்ஸ்கி, சத்தமாக பேசுவதை நிறுத்துமாறு கேட்டும் கொண்டார்.

    இதனால் வான்ஸ் - ஜெலன்ஸ்கி இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது பேச்சு வார்த்தையை பாதியில் டிரம்ப் முடித்துக் கொண்டு எழுந்தார். இதனால் இந்த சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் பாதியில் முடிந்தது. வெள்ளை மாளிகைக்கு செல்லுமாறு ஜெலன்ஸ்கி கேட்டு கொள்ளப்பட்டார். உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியும், மதிய விருந்து நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.

    இந்த சந்திப்பு தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும் போது, உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாகும். அவர் அமைதியைக் கொண்டு வருவதற்குத் தயாராக இருந்தால், நான் மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு வரத் தயாராக உள்ளேன் என்றார்.

    வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு ஜெலன்ஸ்கி கூறும்போது, "டிரம்பிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவின் நடவடிக்கை இரு தரப்பினருக்கும் நல்லதல்ல. தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை உக்ரைன் ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றார்.

    .

    • இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்பு வழங்கினார்.
    • இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருந்தது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்பு வழங்கினார்.

    மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளுக்கு தக்க பலன் கிடைத்தும் உள்ளது.

    அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கி இருந்தாலும், இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருந்தது. 

    • வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    • பேரணி மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்பிருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி என்ற பட்டியலின கல்லூரி மாணவர் புல்லட் ஒட்டியதால் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த வாலிபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அரிவாள் வெட்டில் கை துண்டிக்கப்பட்ட அந்த மாணவர் சிகிச்சைக்கு பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

    இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் புல்லட் ஓட்டியதால் பட்டியலின மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று புல்லட் பேரணி நடை பெற்றது.

    கோர்ட்டு அனுமதி பெற்று தொடங்கிய இந்த பேரணி மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்பிருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

    இந்த பேரணியில் கலந்து கொண்ட 170 பேர் மீது தல்லாகுளம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பெண்கள் உள்ளிட்ட 170 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம்.
    • திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், தமிழ்நாடு முதலமைச்சர்

    மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    `இளைஞர் அணிதான் என் தாய்வீடு' என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத்தலைவர் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம்.

    மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் அவர்கள் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்!

    தமிழ்நாடு போராடும்!

    தமிழ்நாடு வெல்லும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



    • அமீர் குஸ்ராவை நினைவுகூரும் ஜஹான்-இ-குஸ்ராவின் 25வது எடிசனின் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • இந்தியாவின் தத்துவம் மற்றும் கணித கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளன என்று மோடி தெரிவித்தார்.

    பிரபல சூஃபி கவிஞரும் அறிஞருமான அமீர் குஸ்ராவை நினைவுகூரும் ஜஹான்-இ-குஸ்ராவின் 25வது எடிசனின் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    அவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, "சூஃபி பாரம்பரியம் இந்தியாவில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் பிறந்த குஸ்ரா, இந்தியா வேறு எந்த நாட்டையும் விட உயர்ந்தது என்றும், அதன் அறிஞர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்றும், சமஸ்கிருதம் உலகின் சிறந்த மொழி என்றும் பாராட்டினார், இந்தியாவின் தத்துவம் மற்றும் கணித கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளன" என்று தெரிவித்தார்.

    மேலும், வரவிருக்கும் இஸ்லாமிய புனித மாதமான ரம்ஜானை ஒட்டி முஸ்லீம் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

    • சென்னை மாநகராட்சியில் தற்போது 15 மண்டலங்கள் உள்ளன.
    • மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன.

    இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பதென அரசு முடிவு செய்துள்ள நிலையில் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னையின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடையவும் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் மண்டலங்கள் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



    • இன்று முதல் மார்ச் மாதத்தின் 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வரும் 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்.
    • ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்.

    சென்னை:

    மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், நிதியாண்டின் இறுதி மாதம் என்பதாலும் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும்வரை செயல்படும்.

    அதன்படி இன்று முதல் மார்ச் மாதத்தின் 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வரும் 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிடும் நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்.

    ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×