என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பெண்ணின் மீது வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து தரை இறங்கியது. இந்த விமானத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவரின் உடைமைகளில் அதிகாரிகள் சோதனை போட்டனர். சோதனையில் அவரது உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்
அப்போது அவர் போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கேப்சூல்களை எடுக்க அப்பெண் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அங்கு டாக்டர்கள் இனிமா கொடுத்து அப்பெண்ணின் வயிற்றில் இருந்த 100 கேப்சூல்களை வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களில் 1,096 கிராம் எடையுள்ள கொகைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 கோடியே 96 லட்சம் ஆகும். இதையடுத்து அப்பெண்ணின் மீது வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க கடத்தி வந்தார் என்பது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நிதித்துறை மந்திரியின் தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
டெஹ்ரான்:
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இந்தநிலையில் டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பணமதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு நிதித்துறை மந்திரி அப்தோல்நாசர் ஹெம்மாட்டியின் (வயது 68) தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து ஆளுங்கட்சியிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மொத்தமுள்ள 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து நிதித்துறை மந்திரி ஹெம்மாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
- படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றதும், இயக்குநர் என்னை மேலே கூப்பிடுகிறார் எனக் கூறினார்கள்.
- அஸ்வினி தற்பொழுது அமேசான் பிரைமில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் நடித்துள்ளார்.
கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்த நடிகையான அஸ்வினி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அதாவது, " நான் எப்போதும் எனது அம்மாவுடன் தான் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வேன். அன்றைய தினம் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு தளத்திற்கு வரமுடியவில்லை.
இதனால் படப்பிடிப்புக்கு போகலாமா வேண்டாமா என நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் மேக்கப் போடுவதற்கு பெண் கலைஞர் இருந்ததால், எனது அம்மா என்னை படப்பிடிப்புக்கு போகச் சொன்னார்.
படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றதும், இயக்குநர் என்னை மேலே கூப்பிடுகிறார் எனக் கூறினார்கள். அப்போது கூட உள்ள பெண்ணை நீங்களும் வங்க மேலே செல்லலாம் என்று அழைத்தேன். அவர் நான் வர வில்லை நீ சென்றுவா என்றார்கள்.
எனக்கு அப்போது ரொம்பவும் சின்ன வயது என்பதால், என்னால் எதையும் வேறு ஒரு கோணத்தில் யோசிக்கும் தன்மை இல்லாமல் இருந்தேன்.
அதனால் மேலே சென்றேன். மேலே போனால் யாருமே இல்லை. ஒரு அறையில் இருந்து இயக்குநரின் குரல் கேட்டது. அவர் என்னை உள்ளே கூப்பிட்டார். நானும் எதுவும் யோசிக்காமல் சென்றுவிட்டேன். உள்ளே சென்ற பின்னர் அவர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். நான் இப்படி நடக்கும் என கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. அங்கிருந்து கீழே வந்த நான், உடனே வீட்டுக்கு வந்துவிட்டேன்.
நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அம்மா மனமுடைந்து அழுதார். இது மட்டும் இல்லாமல், எனக்கு அம்மாவிடம் இதை கூறி அவரைக் காயப்படுத்தி விட்டோமே என்ற எண்ணம் என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தியது எனக் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சம்பவம் எந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்றது, யார் இவ்வாறு செய்தார் என பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும் அஸ்வினியிடம் தவறாக நடந்து கொண்டவர் யார் என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.
அஸ்வினி தற்பொழுது அமேசான் பிரைமில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் அணியில் மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
- உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
லக்னோ:
5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.
இதையடுத்து, இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக பெத் மூனி- தயாளன் ஹேமலதா களமிறங்கினர். தயாளன் ஹேமலதா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உபி வாரியர்ஸ் களமிறங்கியது.
இதில் கிரண் நவ்கிரே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார், அடுத்து களமிறங்கிய ஜார்ஜியா வோல்வும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 17.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 105 ரன்களில் ஆல் அவுட்டானது. குஜராத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காஷ்வி மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டியான்டிரா டோட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் குஜராத் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து.
- பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது.
- பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கனிமவள கொள்ளையை கண்டித்து வரும் 6-ம் தேதி தென்காசியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும்; தமிழ் நாட்டில் இருப்பதைப் போல பலமடங்கு கனிம வளங்களை வைத்திருக்கும் கேரள மாநிலம் அவற்றை அழியவிடாமல் பாதுகாப்பதோடு, தமிழ் நாட்டில் உள்ள கனி வளங்களை சுரண்டி எடுத்துச் செல்லும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு உறுதுணையாக இருந்து, தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவதாகவும், அப்பகுதி வாழ் மக்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கனிம வளங்களுடன் தினமும் கேரளாவை நோக்கி படையெடுக்கும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களால், அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றது.
கனிம வளங்களை கொண்டுசெல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிறிதும் மதிக்காமல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்களை அள்ளிச் செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருந்து வரும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி கனிம வளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அதிமுக தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 6-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையிலும்; தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி.கிருஷ்ணமுரளி, எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
- இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன .
வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், திருமணம் முடிந்த இரண்டு வருடத்தில் கணவர் வீட்டில் பெண் இறந்து போனார். மாமனார், மாமியார் மற்றும் இரண்டு மைத்துனிகள் வரதட்சணை கேட்டு கொடுமையை படுத்தியதாலும், கொடூரமாக தாக்கியதாலும் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜாமின் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனு விசாரணையின் போது நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் மைத்துனிகள் இருவருக்கும் ஜாமின் வழங்கியது செல்லும், ஆனால் மாமனார் மற்றும் மாமியாருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ததுடன், வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சினையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன என தீர்ப்பு வழங்கினர்.
மேலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டும் நிலையில் இத்தகைய கொடூரமான செயல்களைச் செய்ததாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளிகள் பிணையில் இருக்க அனுமதிப்பது, அவர்கள் விசாரணையின் நியாயத்தை மட்டுமல்ல, குற்றவியல் நீதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.
- தமிழக காவல்துறை விசாரிக்கக்கோரி ராமஜெயமின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
- அரசு தரப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை சிபிஐயிடம் இருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரிக்கக்கோரி ராமஜெயமின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, வழக்கு விசாரணை தொடர்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கோரிக்கை வைத்தது.
அதன்படி, அரசு தரப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதன்படி, ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் திருச்சி டிஐஜி, தஞ்சை எஸ்பி ஆகியோரை கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
- யாத்திரையில் பங்கேற்ற அமைச்சரின் மகள் மற்றும் தோழிகளிடம் சிலர் அத்துமீறி உள்ளனர்.
- எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார்.
மகா சிவராத்திரியின்போது நடந்த சாந்த் முக்தாய் யாத்திரையில் பங்கேற்ற அமைச்சரின் மகள் மற்றும் தோழிகளிடம் சிலர் அத்துமீறி, அவர்களை தரத்தி வீடியோ எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர்,"எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்
இந்நிலையில், மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
- கடந்த மாதம் 15-ந்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
4 மாத குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு அபுதாபியில் உள்ள அல் வத்பா சிறையில் அடைக்கப்பட்டிருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் (வயது 39) என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜாதி கான். 39 வயதான இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பூர்வமாக விசா பெற்று அபுதாபி (ஐக்கிய அரபு அமீரகம்) சென்றுள்ளார்.
2022-ம் ஆண்டு அவரை வேலைக்கு அழைத்த உரிமையாளருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பராபரிக்கும் பணியை செய்து வந்தள்ளார். இந்த குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசிகள் போட்டு வந்துள்ள நிலையில் டிசம்பர் 7-ந்தேதி திடீரென உயிரிழந்துள்ளது.
ஷாஜாஹிதான் கொலை செய்யதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையில் குழந்தையை கொன்றதாக ஷாஜாஹின் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனு கடந்த 2023-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஆணடும் பிப்ரவரி மாதம் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி ஷாஜாதியிடம் இருந்து அவரது தந்தைக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது தனக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சகத்திடம் தனது மகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து கேட்டு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் தந்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணையின்போது, மத்திய வெளியுறவுத்துறையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் "கடந்த 15-ந்தேதி ஷாஜாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 28-ந்தேதி இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. மார்ச் 5-ந்தேதி அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
- பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.
- திர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள் என்று திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களைக் கூறி, ஆட்சிக்கு வந்த பின், சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக.
தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.
2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகள், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 2014 – 2024 வரை, பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என, தமிழக முதலமைச்சரும், திமுக அமைச்சர்களும், தினந்தோறும் பயன்படுத்தும் போக்குவரத்து தொடங்கி, தமிழகத்தில் உங்கள் கண்முன்னே மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு எத்தனை? மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது.
நீங்கள் வாங்கிய கடன் எதற்காக?
உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
- இந்தியா அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவதாக முன்னாள் வீரர்கள் மற்றும் இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் என பலர் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இது துபாய் எனவும் இது எங்கள் ஹோம் பிட்ச் இல்லை எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு முறையும், ஆடுகளம் உங்களுக்கு வெவ்வேறு சவால்களைத் தருகிறது. நாங்கள் இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும், ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. இது எங்கள் ஹோம் பிட்ச் கிடையாது. இது துபாய். அரையிறுதியில் எந்த பிட்சில் விளையாடப் போகிறோம் என எங்களுக்கே தெரியாது. இந்த மைதானம் எங்களுக்கும் புதிதுதான். நாங்கள் இங்கு நிறைய போட்டிகள் விளையாடியதில்லை.
நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது, அது கொஞ்சம் ஸ்விங் ஆவதை நாங்கள் கண்டோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் அதை பார்க்கவில்லை. கடந்த ஆட்டத்தில், அவ்வளவு சுழற்சியை நாங்கள் பார்க்க முடியவில்லை. இன்று அது கொஞ்சம் இருந்தது. எனவே, ஒவ்வொரு மேற்பரப்பிலும் வெவ்வேறு விஷயங்கள் நடக்கின்றன. எனவே, இந்த மைதானத்தில் என்ன நடக்கப் போகிறது, என்ன நடக்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியாது.
என கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.
- கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டதால் பெங்களூருவில் நடைபெற்ற ஷூட்டிங் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- காலில் வீக்கம் ஏற்பட்டதால் நடிகர் கார்த்தி நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2-இன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், படப்பிடிப்பின் ஒரு பகுதியாக இன்று சண்டைக் காட்சி நடைபெற்று வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கார்த்தியின் காலில் காயம் ஏற்பட்டது.
கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டதால் பெங்களூருவில் நடைபெற்ற ஷூட்டிங் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
காலில் வீக்கம் ஏற்பட்டதால் நடிகர் கார்த்தி நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
பிறகு கார்த்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில், அவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால், படப்பிடிப்பை தொடர முடியாமல் நடிகர் கார்த்தி சென்னை திரும்பியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






