என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
அதன்பின் 28-ந்தேதி சவரன் ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதற்கிடையே நேற்றுமுன்தினம் சவரன் மீண்டும் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 80-க்கு விற்றது. இதனை தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ. 8 ஆயிரத்து 65-ஆக இருந்தது. இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 அதிகரித்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
04-03-2025- ஒரு கிராம் ரூ.107
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
02-03-2025- ஒரு கிராம் ரூ.105
01-03-2025- ஒரு கிராம் ரூ.105
- கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது.
- 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் புதூர் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில்கள் நலிவடைந்து வருகிறது. பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க போராட வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் உடனே நிவாரண நிதி வீடு தேடி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது. இது தான் தி.மு.க. அரசின் சாதனை. சிவகாசியில் சுற்றுச்சாலை திட்டம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்து நிதி ஒதுக்கினார். ஆனால் அந்த திட்டம் 2 நாளைக்கு முன்னர் தான் பூமிபூஜை போடப்பட்டு தொடங்கப்படுகிறது.
2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள். எம்.பி. தேர்தலில் இந்த தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெற்று இருக்க வேண்டும். தில்லுமுல்லு செய்து அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த பகுதியில் உள்ள தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் 18-ம் படி கருப்பசாமியாக வழித்துணை வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா, மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மரியதாஸ், மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை போர்த்த நிர்வாகிகள் முண்டியத்தனர். வரிசையில் வராமல் முண்டியடித்துக்கொண்டு வந்த நிர்வாகியை, ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- கரூரில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
- துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் சங்கர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள மூன்று இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சங்கர் ஆனந்த் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார் என்று தகவல்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராயனூர் பகுதியில் உள்ள கொங்குமெஸ் மணி இல்லம், கோதை நகர் பகுதியில் ஒருவர் இல்லம் என இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
- பஸ் ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்று கொண்டிருந்தது.
- காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் எலூருவில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் கூறுகையில்,
சோடிமல்லா பாலம் அருகே அதிவேகமாக வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த பஸ் ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேரின் உடல்கள் எலூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்று கூறினர்.
- இந்த கோரிக்கையை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார்.
- சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். முன்னதாக 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்க செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இவரது இந்த கோரிக்கையை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார்.
மேலும், சர்வதேச விண்வெளி மையத்தின் ஆய்வகம் நிறைய அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். "இந்த இடம் டிக் டிக்-ஆக இருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, எனவே நாம் இப்போது நமது உச்சத்தில் இருக்கிறோம் என்றே கூறுவேன். அதை விட்டு வெளியேற இப்போது சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
வில்லியம்ஸ் தனது வீட்டில் வளர்க்கும் லாப்ரடோர்களை சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். திட்டமிடப்படாமல் நீடித்து தங்குவதில் மிகவும் கடினமான அம்சம், வீடு திரும்பி குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக காத்திருப்பது தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்!
- வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!
சென்னை:
1967-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதியன்று பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளை சுட்டிக்காட்டி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்! என்று கூறியுள்ளார்.
- வருகிற 8-ந்தேதி அப்பல்லோ அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
- ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.
லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக லண்டன் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எல்லோருக்கும் வணக்கம். புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக இசை கலைஞர்களும் உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா லண்டன் அவர்கள் வாசித்து ரசிகர்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்து இந்த இசையை வெளியிட இருக்கிறோம்.
வருகிற 8-ந்தேதி அப்பல்லோ அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை. Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா. நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலகளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள்.
- ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை ஊக்குவிக்க உள்ளேன்.
டெல்லி:
தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க இயலாது என்றும், மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கை விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,
"மொழி என்பது தகவல் தொடர்புக்கு மட்டுமே... உலகளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள்...
அறிவு வேறு, மொழி வேறு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை ஊக்குவிக்க உள்ளேன். மாணவர்கள் அங்கு சென்று படிக்கலாம், வேலை செய்யலாம். அவர்களுக்கு உங்கள் சேவை தேவை. நான் 3 மொழிகள் அல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்.
தெலுங்கை ஊக்குவிக்க வேண்டும். வாழ்வாதாரத்திற்கான சர்வதேச மொழி என்பதால் ஆங்கிலத்தையும் ஊக்குவிக்க வேண்டும். இந்தி கற்றுக்கொள்வது நல்லது, அதனால் நாம் மக்களுடன் எளிதாக பழக முடியும் என்று கூறினார்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சசிகலா சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்து விட்டு சாமி மற்றும் அம்பாள் சன்னதியில் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தி.மு.க. அரசாங்கம் சரிவர செயல்படவில்லை என்பது ஒட்டுமொத்த மக்களும் அறிந்த ஒன்று. இதனை யாராலும் மறுக்க முடியாது. மீதம் உள்ள ஆட்சி காலத்தை நடத்துவதற்காக தி.மு.க. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கூட்டணி கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தி உள்ளது. மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த இதனை பிரசார யுக்தியாக தி.மு.க.செய்து வருகிறது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது தி.மு.க.வினர் மின்சாரத்தை வெளிமாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்குகின்றனர். இதில் ஏதோ தவறு உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் மட்டும் தான் உள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின் 43 மாதங்களுக்கு பின்னர் தற்போது தான் 2 ஆயிரத்து 500 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்களை மட்டும் நியமித்தால் போதாது. அங்கு செவிலியர்களையும் நியமிக்க வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பதையே தமிழக முதலமைச்சர் நோக்கமாக கொண்டுள்ளதால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்போம், கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார்.
- எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், முதல்-மந்திரி பதவி கிடைக்கும் அளவுக்கு அவருக்கு தொகுதிகள் கிடைக்காது.
பாட்னா:
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், உடல் அளவில் களைத்துப்போய் விட்டார். மனதளவில் ஓய்வு பெற்று விட்டார். அவரது மந்திரிகளின் பெயர்களைக் கூட அவரால் சொந்தமாக சொல்ல முடியாது. நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. அதனால் அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயங்குகிறது. அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சவால் விடுக்கிறேன்.
இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார். ஆனால், தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து அணி மாறிவிடுவார். ஆனால், எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், முதல்-மந்திரி பதவி கிடைக்கும் அளவுக்கு அவருக்கு தொகுதிகள் கிடைக்காது. நிதிஷ்குமாரை தவிர, யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆவார்கள் என்பதை எழுதியே தருகிறேன். நான் சொல்வது நடக்காவிட்டால், பிரசாரம் செய்வதையே விட்டு விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- வருகிற 10-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வருகிற 10-ந்தேதி விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.






