என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கடந்த மாதம் மது பானங்கள் கழகம் புதிய சப்ளையர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிட்டது.
- மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திருப்பதி:
தெலுங்கானாவில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல. ஒரே நேரத்தில் 37 புதிய வகை மதுபானங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
இதற்காக, கடந்த மாதம் மது பானங்கள் கழகம் புதிய சப்ளையர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிட்டது.
அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் மொத்தம் 37 பிராண்டுகள் விண்ணப்பித்தன. இவற்றில் 15 வெளிநாட்டு மதுபான பிராண்டுகள், மேலும் 15 உள்நாட்டு பிராண்டுகள், மேலும் 7 பீர் வகைகள் புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கம் ஏற்கனவே பீர் விலையை உயர்த்தியுள்ளது.
நடப்பு பட்ஜெட்டில் கலால் துறையிலிருந்து ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ள நிலையில், அடுத்த பட்ஜெட்டில் வருவாய் இலக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்தால், மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.
- பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தனர் என்று காசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காசாவின் சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கலில் டெக்ரான் மத்திய காசாவில் உள்ள அல் அக்சா மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.
போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், தொடர்ந்து விரிவாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8210-க்கும், சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த வாரம் 13-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனையானது. அடுத்த நாளில் தங்கம் விலை குறைந்தாலும், மறுநாளே 65 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8210-க்கும், சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8250-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680
16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,400
13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-03-2025- ஒரு கிராம் ரூ.113
16-03-2025- ஒரு கிராம் ரூ.112
15-03-2025- ஒரு கிராம் ரூ.112
14-03-2025- ஒரு கிராம் ரூ.112
13-03-2025- ஒரு கிராம் ரூ.110
- மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
- மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா?
மாநிலங்களவையில் எம்.பி. வைகோ பேசியதாவது:
மணிப்பூர் நிலவரம் பற்றி இங்கே ஆழமான விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது?
நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister. ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று வைகோ பேசினார்.
இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன் என்று மாநிலங்களவை துணைத்தலைவர் கூறினார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
- சரியாக மூடப்படாததால் தேநீர் அவர் மீது சிந்தியது.
பார்சல் கட்டும் போது செய்த தவறு காரணமாக ஸ்டார்பக்ஸ் தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020-ம் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில் இருந்து தேநீர் விநியோகம் செய்யும் பணியில் மைக்கேல் கார்சியா என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார். சம்பவம் நடந்த தினம் மைக்கேல் விநியோகம் செய்ய எடுத்துச் சென்ற தேநீர் பார்சல் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. இதை துளியும் எதிர்பார்க்காத மைக்கேல் அதனை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்ய வாகனத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பார்சல் சரியாக மூடப்படாததால் தேநீர் அவர் மீது சிந்தியது. இதில் மைக்கேல் இடுப்பின் கீழ் பகுதி தொடையின் உள்பகுதி மற்றும் ஆண்குறி உள்ளிட்டவற்றில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு நேர்ந்த கதியை நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்து அதற்கான பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.
"ஸ்டார்பக்சில் வேலை செய்யும் ஊழியர் அலட்சியமாக எரியும் சூடான பானங்களில் ஒன்றை பாதுகாக்க தவறிவிட்டார். இதனால் அது மைக்கேலுக்கு ஒப்படைக்கப்பட்ட ஒரே நொடியில் அவரின் மடியில் உடனடியாக விழுந்தது," என்று மைக்கேல் தரப்பு வழக்கறிஞரான நிக்கோலஸ் ரோவ்லி எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலமுறை தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், தீக்காயங்களால் ஏற்பட்ட சிதைவு, வலி, செயலிழப்பு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுடன் மைக்கேல் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார்," என்றும் வழக்கறிஞர் கூறினார்.
இந்த தீர்ப்பு குறித்து ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜேசி ஆண்டர்சன் கூறும் போது, நீதிபதி அறிவித்துள்ள இழப்பீடு தொகை அதிகமாக இருந்தது என்றும், அதைக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
- புஷ்பா 3-ம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
- அல்லு அர்ஜுன் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த 'புஷ்பா' படம் 2021-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.
இதையடுத்து 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி ரூ.1,500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. அல்லு அர்ஜுன் சந்தன கட்டைகளை கடத்துபவராக நடித்து இருந்தார்.
கிளைமாக்சை மூன்றாம் பாகத்துக்கான தொடர்ச்சியோடு முடித்து இருந்தனர். இதையடுத்து புஷ்பா 3-ம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் 'புஷ்பா' படத்தின் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, ''புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை நிச்சயமாக எடுப்போம். 3-ம் பாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
அல்லு அர்ஜுன் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த படங்களை முடித்து விட்டு புஷ்பா 3-ம் பாகத்தில் நடிப்பார். 2028-ம் ஆண்டு புஷ்பா 3-ம் பாகம் திரைக்கு வரும்'' என்று படம் குறித்து புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நாட்டை காப்பாற்றுவதற்காக தூக்கமில்லாமல்தான் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர்.
- திருச்செந்தூரில் முருக பக்தர் இறந்தது இயற்கையானதுதான்.
சென்னை புளியந்தோப்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணாமலை போன்ற மாநில தலைவர் தமிழ்நாட்டிற்கான மாபெரும் சாபக்கேடு
* நாட்டை காப்பாற்றுவதற்காக தூக்கமில்லாமல்தான் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர்.
* எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. இதுபோன்ற மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் அஞ்சி யாரும் பதுங்கி வீட்டிலே அமர்ந்துவிட மாட்டார்கள். முன்பைவிட வேகமாக முன்னோக்கி எட்டுகால் பாய்ச்சலில் தி.மு.க. பயணிக்கும்.
* முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கான நாளை குறிக்கட்டும் அண்ணாமலை.
* போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான்.
* திருச்செந்தூரில் முருக பக்தர் இறந்தது இயற்கையானதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க. தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
- தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 1,078 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலை கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 1,078 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல் அனுமதியின்றி போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 1,078 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது.
- நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடியது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தன.
இதையடுத்து இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
அதன் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஜார்ஜியா பிம்மர் 46 ரன்களுடனும், இஸ்ஸி ஷார்ப் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை நீண்ட நேரமாகியும் நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
- இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.
- கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார்.
கன்னட நடிகையான ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியுமான ராமசந்திர ராவை, கர்நாடக அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு எந்த பதவியும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த கோணத்தில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்காக, அங்கு ஒரு நகைக்கடையை நடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது அந்த நகைக்கடையில் ரன்யா ராவ், தருண் ராஜு தலா 50 சதவீத பணத்தை முதலீடு செய்து நடத்தி வந்துள்ளனர். துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.
இவ்வாறு தங்கம் வாங்கிய போது, ஒரு வியாபாரி ரன்யா ராவிடம் ரூ.1.70 கோடியை பெற்று விட்டு, தங்கத்தை கொடுக்காமல் மோசடி செய்திருந்தார். இந்த ரூ.1.70 கோடியை ஹவாலா மூலமாக துபாய்க்கு ரன்யா ராவ் கொண்டு சென்றிருந்ததாக நடிகர் தருண் ராஜ் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு ஆகியோருக்கு துபாய் மட்டும் இன்றி ஜெனிவா, பாங்காக்கை சேர்ந்த நகை வியாபாரிகளுடனும் தொடர்பு இருந்துள்ளது.
அவர்கள் மூலமாகவும் தங்கத்தை வாங்கியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தான் துபாயில் நகைக்கடையை 2 பேரும் நடத்தி வந்துள்ளனர். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் போது, தான் நடத்தி வரும் நிறுவனம் பற்றியும், சுவிட்சர்லாந்து, ஜெனிவாவுக்கு செல்வதாக துபாய் அதிகாரிகளை ரன்யா ராவ் ஏமாற்றி வந்துள்ளார். இதற்காக அவரிடம் அமெரிக்க நாட்டு விசாவும் இருந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து அவர் பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார். பெரும்பாலும் ஒரே நாளில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்றுவிட்டு, திரும்பி வந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலமாக அவர் தங்கம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதும், அவருக்கு பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல கோடி ரூபாய் வங்கி கணக்குகளுக்கு வந்திருப்பதும், அது உடனடியாக மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. ரன்யா ராவ் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் சர்வதேச அளவில் பெரிய கடத்தல் கும்பல் இருக்கலாம் என்ற கோணத்திலும் சி.பி.ஐ. மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, ரன்யா ராவ், தருண் ராஜுக்கு வந்திருந்த வெளிநாட்டு செல்போன், தொலைபேசி அழைப்புகள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
இதனால் கூடிய விரைவில் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்கள் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.






