என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல் கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு
    • பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது.

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

    திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?

    கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.

    குறிப்பாக, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபுதான் இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.

    இவ்வாறு அண்ணாலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • மேக் இன் இந்தியா திட்டம் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
    • மேக் இன் இந்தியா திட்டத்தில் நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியதாவது:

    மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடையவில்லை. ஆனால் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

    மேக் இன் இந்தியாவில் நம்பிக்கை வையுங்கள், அது நல்ல பலன்களைத் தருகிறது.

    இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரம் சில வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறந்தவை.

    மணிப்பூர் மற்றும் பிற மாநிலங்கள் மீது மோடி அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர் இன்று காலை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஜாகிர் உசேனின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

    நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார்.
    • நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.

    முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசுபவர்கள் "துரோகிகள்" என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    எல்லோரும் அதையே விரும்புவதாகவும் அதை சட்டப்படி செய்வோம் என்றும் மகாரஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார். இதற்கிடையே இந்த பிரச்சனை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில் நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள், வாகனங்கள்  தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.

    இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். தானே மாவட்டத்தின் டோம்பிவ்லி பகுதியில் உள்ள கர்தா சௌக்கில் நிறுவப்பட்ட சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் நேற்று கலந்துகொண்டு பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று ஷிண்டே கூறினார்.

    சத்ரபதி சிவாஜி, ஒன்றுபட்ட இந்தியாவின் பெருமையும், இந்துத்துவத்தின் கர்ஜனையுமாகும். சிவாஜி மகாராஜ் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சகாப்தத்தின் மனிதர், நீதியை ஊக்குவிப்பவர் மற்றும் சாமானிய மக்களின் மன்னர்.

    மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற வரலாற்றை தொடர்ந்து நினைவூட்டும் விதமாக இந்த சிலை செயல்படும். இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் சிவாஜி மகாராஜின் துணிச்சல் மற்றும் நிர்வாகத்தின் மதிப்புகளை அறிந்துகொள்ள ஊக்கமளிக்கும். இந்த கர்தா சௌக் இனி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சௌக் என்று அழைக்கப்படும் என்று ஷிண்டே கூறினார்.

    இதை கேட்டு பரவசம் அடைந்த கூட்டத்தினர் "ஜெய் பவானி, ஜெய் சிவாஜி" என்ற கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே அவுரங்கசீப் கல்லறை பாபர் மசூதியை போல வேரோடு பிடுங்கி எறியப்படும் என இந்து அமைப்புகள் சூளுரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
    • காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் அங்கு குவிவது வழக்கம்.

    அவ்வாறு நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

    முன்னதாக கோத்தகிரியில் மே 3 மற்றும் 4-ந் தேதிகளில் 13-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் மே 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 11-வது வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 20-வது ரோஜா கண்காட்சியும் நடைபெற உள்ளது.

    குன்னூரில் மே 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 65-வது பழக்கண்காட்சியும், காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

    இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    • அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
    • பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் நேற்று தமிழக பாஜகவினர் (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், "மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்" என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும்.
    • ஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த நபர் நுழைந்தார்.

    "அங்காடியா" என்பது, வணிகர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையாகும். பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும். பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் நபர்கள் அங்காடியாக்கள் ஆவர்.

    இவ்வாறான ஒரு அங்காடியாவை டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

    டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் அங்காடியா வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தார்.

    அந்த நபர் வர்த்தகரை பின்தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அங்கிருந்து செல்வதன்முன் பல முறை தனது துப்பாக்கியால் அந்த நபர் சுட்டார்.

    இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.
    • 50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.

    சென்னை:

    சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க) பேசினார். அவரது ஒவ்வொரு கேள்விக்கும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்தனர்.

    செல்லூர் ராஜூ-அண்ணாவின் கோட்பாடுகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் நிதி நிலை அறிக்கையில் ஒன்று கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.

    செல்லூர்ராஜூ- கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதி தான் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    அமைச்சர் ஐ. பெரியசாமி- நீங்கள் பசுமை வீடு திட்டம் அறிவித்து இருந்தீர்கள், அதை முழுமையாக செயல்படுத்தவில்லை. நீங்கள் அறிவித்ததை நாங்கள் கட்டி வருகிறோம்.

    எடுத்த உடனே எந்த திட்டத்துக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. படிப்படியாக தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    செல்லூர் ராஜூ- பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளது.

    50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி- அ.தி.மு.க ஆட்சியில் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. நிறைய பள்ளிகள் கட்டப்பட்டு உள்ளது.

    செல்லூர் ராஜூ- நாங்கள் 2016-ல் தனித்து நின்று வென்றோம்.

    அமைச்சர் எ.வ.வேலு- இனி தமிழ்நாட்டில் தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது.

    செல்லூர் ராஜூ- தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எத்தனை பஸ்கள் வாங்கப்பட்டது என விளக்கப்படவில்லை.

    அமைச்சர் சிவசங்கர்- சனிக்கிழமை காலை வந்தால் எத்தனை பஸ்கள் வாங்க உள்ளோம் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மினி பஸ்களுக்கான அனுமதி தொடர்பாக வழித்தடங்கள் வழங்கப்பட்டு விட்டது. மே மாதம் முதல் வாரத்தில் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

    செல்லூர் ராஜூ- 4 ஆண்டுகள் ஆகி விட்டது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. சரண்டர் விடுப்பு அறிவிப்பை இந்த ஆண்டு அறிவித்து இருக்கிறீர்கள். இது அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வர வேண்டியது

    அமைச்சர் தங்கம் தென்னரசு- கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சலுகைகளை நீங்கள் தான் நிறுத்துனீர்கள். இப்போது ஏன் நிறுத்தினீர்கள் என கேட்கிறீர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சிறையில் அடைத்தது யார்? ஆட்சியில் என்பது மனசாட்சி இருந்தால் தெரியும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • விரிவடையும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

    காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர வான்வழி தாக்குதல்களில் இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 326 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், போர் நிறுத்தத்தை மீறும் வகையில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்ததை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், விரிவடையும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிழக்கு காசா, வடக்கில் உள்ள பெய்ட் ஹனவுன் நகரம் மற்றும் தெற்கில் உள்ள இதர சமூகங்கள் என அனைவரையும் அந்தந்த பகுதிகளில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கும் என்று தெரிகிறது.

    "இஸ்ரேல் இனிமேல், அதிகரித்த இராணுவ வலிமையுடன் ஹமாஸுக்கு எதிராக செயல்படும்" என்று பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • 24-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    23-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    24-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே, இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார்.
    • பாராளுமன்றம் கூடியதும் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடந்து வருகிறது. பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகாகும்பமேளா குறித்து பேசினார்.

    இதனையடுத்து, மக்களவையில் பிரதமர் மோடி, முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார். ஆனால் இன்று பாராளுமன்றம் கூடியதும் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை.

    மேல் சபையிலும் தொகுதி மறுவரையரை குறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்பட வில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் பாாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி. திருச்சி சிவா, "தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு கட்டாயம் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
    • ரூ. 92 கோடி வரி செலுத்திய ஷாரூக் கான் முதலிடத்தில் இருந்தார்.

    இந்தியா திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன். அசாத்திய நடிப்பு திறமையால் நாடு முழுக்க ரசிகர்களை கொண்ட அமிதாப் பச்சன் அதிக வரி செலுத்தும் இந்திய பிரபலம் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

    அமிதாப் பச்சன் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 120 கோடி வரி செலுத்தியுள்ளார். இந்திய திரைத்துறையின் பெரும் நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன், 2024-25 நிதியாண்டில் ரூ. 350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இதற்காக இவர் ரூ. 120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்தும் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

    முன்னதாக அமிதாப் பச்சன் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மூத்த சட்டத்துறை அலுவலர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய தலைவராக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கடந்த நிதியாண்டில் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ள ரூ. 120 கோடி வரி, அவர் ஏற்கனவே செலுத்திய வரியை விட 69 சதவீதம் அதிகம் ஆகும். அமிதாப் பச்சன் வரிசையில், நடிகர் ஷாரூக் கான், சல்மான் மற்றும்

    விஜய் ஆகியோர் அதிக வரி செலுத்தும் பிரபலங்களாக உள்ளனர். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் ரூ. 92 கோடி வரி செலுத்திய ஷாரூக் கான் முதலிடத்தில் இருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×