என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.
- ஹுசைனி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.
சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார். இந்த நிலையில் ஹுசைனி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வீடியோவில், 'தனக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், தினசரி 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுகிறது. இப்படித்தான் தினமும் தனது வாழ்நாள் சென்று கொண்டிருக்கிறது', என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர்.
இதற்கிடையில் தனது உடலை தானம் செய்வதாக ஹுசைனி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹுசைனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன்.
இந்த கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார், எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தவர். எனது 'சினேக் பைட் வேர்ல்டு ரெக்கார்ட்' உலக சாதனை நிகழ்வுக்கும் தலைமை தாங்கியவர். என்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே வந்து, என்னுடைய அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையெழுத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஹுசைனியின் இந்த உருக்கமான பதிவு நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. உடல் தானம் செய்வதாக அறிவித்துள்ள ஹுசைனிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் கனத்த இதயத்துடன் ஆறுதலையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
- உலகளவில் இன்ஸ்டாகிராம் சேவையை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
- அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமாக உள்ளது.
உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் என்பது ஒரு பிரபலமான சமூக வலைத்தளமாக விளங்குகிறது. இது பயனர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிரவும், பிற பயனர்களுடன் தொடர்புகொள்ளவும் பயன்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம், தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. உலகளவில் இன்ஸ்டாகிராம் சேவையை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
உலகின் மற்ற நாடுகளை விட அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 2023-ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 229 மில்லியன் பயனர்கள் இன்ஸ்டா தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இது உலகளவில் மிகப்பெரிய பயனர் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று மாலை இன்ஸ்டாகிராம் சிறுது நேரம் தடைப்பட்டதாக செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான டவுன்டிடெக்டர் (Downdetector.com) தெரிவித்துள்ளது. தடைப்பட்டது குறித்து 19,431- க்கும் மேற்பட்ட மக்கள் புகாரளித்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் டவுன் டிடெக்டர் வலைதளம் கூறியது.
- இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.
- மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு அமலுக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் எங்களுடன் இணையும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை நான் மனதார வரவேற்கிறேன்.
மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழ்நாட்டின் 58 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நியாயமான எல்லை நிர்ணயம் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்த ஒரு மைல்கல் தருணமாகும். இந்த மிகப்பெரிய ஒருமித்த கருத்து, தமிழ்நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.
இந்த வரலாற்று ஒற்றுமையை கட்டியெழுப்ப, நமது எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களின் தலைவர்களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி, நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்தினர். தமிழ்நாட்டின் முன்முயற்சியாகத் தொடங்கியது இப்போது ஒரு தேசிய இயக்கமாக வளர்ந்துள்ளது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.
இது நமது கூட்டுப் பயணத்தில் ஒரு வரையறுக்கும் தருணம். இது ஒரு சந்திப்பை விட அதிகம் - இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கத்தின் தொடக்கமாகும். இது இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!
மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு அமலுக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களில் உள்ள போக்குவரத்துக்கு கழகங்கள் என 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 25 மண்டலங்களில் 3 ஆயிரத்து 274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்களும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள விழுப்புரம் மண்டலத்தில் 88 பணியிடங்கள், வேலூர் மண்டலத்தில் 50, காஞ்சீபுரம் மண்டலத்தில் 106, கடலூர் மண்டலத்தில் 41, திருவண்ணாமலை மண்டலத்தில் 37 இடங்கள் என மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதே போன்று, கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் கும்பகோணம் மண்டலத்தில் 101 பணியிடங்கள், நாகப்பட்டினம் மண்டலத்தில் 136, திருச்சி மண்டலத்தில் 176, காரைக்குடி மண்டலத்தில் 185, புதுக்கோட்டை மண்டலத்தில் 110, கரூர் மண்டலத்தில் 48 என மொத்தம் 756 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும், சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள சேலம் மண்டலத்தில் 382 இடங்கள், தர்மபுரி மண்டலத்தில் 104 என மொத்தம் 486 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கோவை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள கோவை மண்டலத்தில் 100, ஈரோடு மண்டலத்தில் 119, ஊட்டி மண்டலத்தில் 67, திருப்பூர் மண்டலத்தில் 58 என மொத்தம் 344 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதே போன்று, மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள மதுரை மண்டலத்தில் 190 பணியிடங்கள், திண்டுக்கல் மண்டலத்தில் 60, விருதுநகர் மண்டலத்தில் 72 என மொத்தம் 322 பணியிடங்களும், நெல்லை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள நெல்லை மண்டலத்தில் 139, நாகர்கோவில் மண்டலத்தில் 129, தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
8 கோட்ட போக்குவரத்துக் கழகத்திலும் சேர்த்து நிரப்பப்பட இருக்கும் 3 ஆயிரத்து 274 டிரைவர்- கண்டக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக 21-ந்தேதி (இன்று) மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட மேலும் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மேலும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேர்வு குறித்த விவரங்கள் அவ்வப்போது விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
- ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறினார்.
அழகான பெண்களை பேச வைத்து படுக்கையில் நெருக்கமாக இருக்க வைத்து பின்னர் அதனை வீடியோ, புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பது ஹனி டிராப் என அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் தனக்கு எதிராக ஹனி டிராப் வலை வீசப்பட்டு தோல்வி அடைந்தாக அம்மாநில அமைச்சர் கே.என். ராஜண்ணா தெரிவித்துள்ளார்.
இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஹனி டிராப் மோசடிக்கு இலக்காகி இருப்பதாக அம்மாநில கூட்டுறவத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அமைச்சர் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாட மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல், கூட்டுறவுத் துறை அமைச்சரை ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து பேசிய அமைச்சர் ராஜண்ணா, "பலர் கர்நாடகா சிடி மற்றும் பென் டிரைவ் ஆலையாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். இது மிகமுக்கிய பிரச்சனை. தும்குருவை சேர்ந்த அமைச்சர் ஹனி டிராப்பில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தும்குருவை சேர்ந்தவர்கள் நானும், பரமேஷ்வராவும் தான். இது தொடர்பாக நான் குற்றச்சாட்டு சமர்பிக்க இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்," என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஹனி டிராப் விவகாரத்தில் கிட்டத்தட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 48 பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவில் நீள்கிறது. நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இதில் சிக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தான் இங்கு விளக்கம் அளிக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக தான் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யார் யார் என்பது வெளிவரட்டும். பொதுமக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது.
- 2022-ல் நேபாள பயணத்துக்கு ரூ.80 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வெளியிடுமாறு மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய வெளியுறவு இணை மந்திரி பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வழங்கினார். அதன்படி இந்த 3 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பயணங்களுக்கான மொத்த செலவு சுமார் ரூ.258 கோடி என அவர் தெரிவித்தார்.
இதில் முக்கியமாக, 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கான செலவு ரூ.22.89 கோடி என கூறப்பட்டு இருந்தது. அதேநேரம் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது.
முன்னதாக 2023-ல் ஜப்பான் பயணத்துக்கு ரூ.17.19 கோடியும், 2022-ல் நேபாள பயணத்துக்கு ரூ.80 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.
- அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.
- வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாள்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் பயணிகள் வாகனங்களில் பயணிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். வாகனங்களுக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க வேண்டும்.
அதாவது, இருசக்கர வாகனங்களில் இருவர் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மூன்று சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது குறைந்தது 4 பேர் வரை பயணிக்கலாம். அதேபோல் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் டிரைவரை தவிர்த்து 3 பேர் பயணிக்கவும் முன் இருக்கையில் அமர்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு உள்ளது.
இதேபோல் மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் தனக்கு இல்லை என்பது போல ஒரு ஆட்டோவில் 14 பள்ளி குழந்தைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி BKD சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோவில் பள்ளி சீருடையில் பல குழந்தைகள் இருப்பதை கண்ட போலீசார் உடனே அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, டிரைவரின் முன்பக்க இருக்கையில் குறைந்தது 3 பள்ளி குழந்தைகள், பின் இருக்கையில் 11 பள்ளி குழந்தைகள் அமர்ந்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- 72-வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும்.
- உலக அழகிப் போட்டியை தெலுங்கானாவில் நடத்துவது வெறும் கவுரவப் பிரச்சினை அல்ல.
ஐதராபாத்:
இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தெலுங்கானா மாநில அரசு நடத்துகிறது.
இதையொட்டி இந்த போட்டியை பிரபலப்படுத்தும் முன்னோட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:-
72-வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும். இதற்கான செலவை தெலுங்கானா சுற்றுலாத்துறையும், மிஸ் வேர்ல்ட் நிறுவனமும் சமமாக ஏற்றுக்கொள்ளும். உலக அழகிப் போட்டி நடத்துவது மாநிலத்தின் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. உண்மையில் இந்த போட்டியின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும்.
உலக அழகிப் போட்டியை தெலுங்கானாவில் நடத்துவது வெறும் கவுரவப் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் பெண்களைக் கொண்டாட இது ஒரு வாய்ப்பு. அவர்களின் மன உறுதியை அங்கீகரிக்க இது ஒரு தெளிவான அழைப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது தற்போதைய உலக அழகியான கிறிஸ்டினா பிஸ்கோவா உடன் இருந்தார். அவர் கூறுகையில், கடந்த ஆண்டு இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி என்ற எனது பயணத்தை தொடங்கினேன். அந்த பயணத்தை இந்தியாவிலேயே நிறைவு செய்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் பலம். உங்களிடம் பல மொழிகள், பல இனங்கள் உள்ளன. அது அழகாக இருக்கிறது என்றார்.
- தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பம் முந்தைய ஆண்டை விட அதிகளவில் கொளுத்துகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பொதுவாகவே கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்த ஆண்டு சென்னையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இந்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகனம் சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-7 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: சப்தமி நள்ளிரவு 1.07 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 10.44 மணி வரை. பிறகு மூலம்.
யோகம்: மரண, அமிர்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி கோவர்த்தன் கிரி பந்தலடி சென்று திரும்புதல். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப்பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், வெள்ளி அனுமன் வாகனத்திலும் தாயார் வெள்ளி கமலத்திலும் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகனம் சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-தாமதம்
சிம்மம்-மாற்றம்
கன்னி-வரவு
துலாம்-பொறுமை
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- பாசம்
மகரம்-விருப்பம்
கும்பம்-நன்மை
மீனம்-ஜெயம்
- சூதாட்ட விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது வழக்குப் பதிவு.
- நடிகர் பிரகாஷ் ராஜ் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்து பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், "ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு பற்றியும், நான் நடித்த விளம்பரம் பற்றியும் சர்ச்சை நிலவுகிறது. அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இப்போது பதில் சொல்ல வேண்டி உள்ளது. அந்த விளம்பரத்தில் நான் நடித்தது உண்மைதான். அது தவறு என்று சில மாதங்களிலேயே தெரிந்து கொண்டேன். ஆனால் அந்த விளம்பரத்திற்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் ஆகி இருந்ததால் இடையில் அவர்களை நிறுத்திவிடும்படி என்னால் கேட்க முடியவில்லை.
2017-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துவிட்டேன். ஆனால் அவர்கள் சமூக வலைதளத்தில் எனது பழைய விளம்பரத்தை பயன்படுத்தினர். இதை எதிர்த்து நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதற்கிடையே தற்போது என் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. போலீசார் எனக்கு எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. நோட்டீஸ் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்," என்று அவர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






