என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தனக்கு தானே மயக்க ஊசியும் செலுத்திக் கொண்டார்.
    • தவறான தையல்களால் ரத்தப்போக்கு நிற்காமல் அதிகமாகியது.

    யூடியூப் பார்த்து கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது.

    அதே வரிசையில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஆக்ராவை அடுத்த மதுராவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாபு (வயது 32). திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை.

    ஆஸ்பத்திரிக்கு சென்றும் தீர்வு கிடைக்காததால் அவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக யூடியூப் மற்றும் ஆன்லைனில் வரும் வயிற்று வலி சம்பந்தமான குறிப்புகளை தேடி கண்டுபிடித்தார்.

    அதில் ஆபரேஷன் செய்யும் வீடியோக்களையும் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் தனக்கு தானே ஆபரேஷன் செய்ய திட்டமிட்டார்.

    ஆபரேஷனுக்கு தயாரான அவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு ஆபரேஷன் செய்ய முயன்றார்.

    தனக்கு தானே மயக்க ஊசியும் செலுத்திக் கொண்டார். ஆபரேஷன் செய்யும் கத்தியால் தனது வயிற்றில் வலது புறம் 7 செ.மீ. அளவிற்கு கீறினார்.

    ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட ஆபரேஷன் கத்தி ஆழமாக சென்றது. இதனால் அவருக்கு வலி அதிகமாகி ரத்தம் வர தொடங்கியது.

    இதனை சரி செய்ய முயன்ற ராஜபாபு அந்த இடத்தை தானே தைத்தார். 10-12 தையல்களையும் போட்டுள்ளார். தவறான தையல்களால் ரத்தப்போக்கு நிற்காமல் அதிகமாகியது. இதனால் பயந்து போன அவர் கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் ராஜபாபு சரிந்து கிடப்பதையும் வயிற்றில் கீறல் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    யூடியூப் பார்த்து தனக்கு தானே வாலிபர் ஆபரேசன் செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    • கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது.
    • எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ஓவிய கலைஞர் எம்.எப்.ஹூசைன். இந்தியாவின் பிகாசோ என போற்றப்படும் உலக புகழ்பெற்ற இவர் உலகம் முழுவதும் கலை மற்றும் உரையாடல்களை ஊக்குவிக்கும் இந்தியாவின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

    இவர் கடந்த 1954-ம் ஆண்டு வரைந்த பெயரிடப்படாத ஓவியம் (கிராம யாத்திரை) என்ற ஓவியம் அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற கிறிஸ்டி ஏலத்தில் பங்கேற்றது. சுதந்திர இந்தியாவின் பன்முக தன்மை மற்றும் சுறுசுறுப்பை கொண்டாடும் எம்.எப்.ஹூசைனி படைப்பாக கருதப்படும் இந்த ஓவியம் 13.8 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.119 கோடி) ஏலம் போய் உள்ளது. இது முந்தைய சாதனையான அமிர்தா ஷெர்-கில்லின் தி ஸ்டோரி டெல்லர் படத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகும்.

     

    ரூ.119 கோடிக்கு ஏலம்போன ஓவியம்.

    கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது. இந்த சாதனையை தற்போது எம்.எப்.ஹூசைனின் படைப்பு முறியடித்துள்ளது.

    ஏலத்தை நடத்திய நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு முக்கியமான தருணம் என்றார்.

    இந்த ஓவியத்தை இந்தியாவின் முக்கிய கலை சேகரிப்பாளரான கிரன் நாடாரின் கலை அருங்காட்சியகம் (கே.என்.எம்.ஏ.) ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆர்.பி.ஜி. நிறுவன தலைவரும், கலை சேகரிப்பாளருமான ஹர்ஸ்கோயங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எம்.எப்.ஹூசைனின் கிராம் யாத்திரா ஓவியம் ரூ.100 கோடி தடையை உடைத்து கிரன் நாடாருக்கு 13.8 மில்லியன் டாலருக்கு விற்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

    • ‘சச்சின்’ படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது.
    • 20 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில் விஜய்யின் 'கில்லி' படமும் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து விஜய் நடித்த 'சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில், ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'சச்சின்' படம் அடுத்த மாதம் 18-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டுள்ளார்.


    'சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

    'சச்சின்' சிறந்த காதல் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அதிக நாட்கள் ஓடி நல்ல வசூல் பார்த்தது. அப்போது அப்படத்துடன் ரஜினியின் 'சந்திரமுகி' கமல்ஹாசனின் `மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. 20 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
    • பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

    உலகளவில் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். பல மில்லியன் ஃபாளோயர்களை கொண்டிருக்கும் மிஸ்டர் பீஸ்ட் தான் உருவாக்கும் வீடியோக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். யூடியூப் மட்டுமின்றி பல்வேறு செயல்களில் ஆர்வம் கொண்டவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற ஜிம்மி டொனால்டுசன்.

    அந்த வரிசையில், யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் தற்போது அறிவித்து இருக்கும் திட்டம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதன்படி ஆப்பிரிக்கா பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குவதாக மிஸ்டர் பீஸ்ட் அறிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கோகோ தோட்டங்களில் பணியாற்ற வைக்கப்படும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

    கோகோ தோட்டங்களில் பணியாற்றும் குழந்தைகளுக்கு காலை உணவு கிடைத்தால் அவர்கள் பள்ளுக்கு செல்வர் என்று டொனால்டுசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக இவர் ஆப்பிரிக்க சமூகங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • திருப்பூர் காளிபாளையத்தில் முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    • அரூர் செட்டிப்பட்டி ஊராட்சியில் மின்தேவை பூர்த்தி செய்ய தற்போது உள்ள துணைமின் நிலையமே போதுமானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கடந்த 14-ந்தேதி பட்ஜெட் உரையுடன் தொடங்கியது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து இன்றும் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அவை தொடங்கியதும், கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் விவரம்:-

    ரேசன் கடை புகார் பெட்டி மூலம் எத்தனை புகார்கள் வந்துள்ளன, மக்களுக்கு தெரியுமாறு புகார் பெட்டி வைக்க வேண்டும் என உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், தி.மு.க. ஆட்சியில் ரேசன் கடைகளில் புகார் பதிவேடுகள் மூலம் 97,535, புகார் பெட்டி மூலம் 875 புகார்கள் வந்துள்ளன. புகார் பதிவேடு பெட்டிகளை மக்களுக்கு தெரியும் வகையில் வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்றார். மேலும், ரேசன் கடைகளில் கைரேகை வைப்பத்தில் சிக்கல் இருந்தால், புகாரை உடனுக்குடன் சரிசெய்கிறோம். மேலும் ரேசன் கடைகளில் Brod Band சேவைகளை தடையின்றி விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவு கூறினார்.

    மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 34,902 ரேசன் கடைகளில் 6,218 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. நடப்பாண்டில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அசோக்குமார் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

    திருப்பூர் காளிபாளையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா என எம்.எல்.ஏ. விஜயகுமார் கேள்வி எழுப்பினார். திருப்பூர் காளிபாளையத்தில் முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இதனிடையே, மதுரை திருமங்கலத்தில் புதிதாக பெரிய பேருந்து நிலையம் கட்டித் தரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அரூர் செட்டிப்பட்டி ஊராட்சியில் மின்தேவை பூர்த்தி செய்ய தற்போது உள்ள துணைமின் நிலையமே போதுமானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

    • காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.
    • இக்கடிதத்தை இந்திய காமன்வெல்த் விளையாட்டு சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா சமர்ப்பித்துள்ளார்.

    புதுடெல்லி:

    24-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இப்போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்தது.

    இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.

    இக்கடிதத்தை இந்திய காமன்வெல்த் விளையாட்டு சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா சமர்ப்பித்துள்ளார். இந்த போட்டியை குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.

    போட்டியை நடத்துவதற்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி ஆகும். அதற்கு முன்பாக பி.டி. உஷாவிடமிருந்து கடிதம் பெறப்பட்டதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்புத் தலைவர் கிறிஸ் ஜென்கின்ஸ்,தலைமை நிர்வாக அதிகாரி கேட்டி சாட்லீர் ஆகியோர் குஜராத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்களிடம் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் அகமதாபாத்தின் பங்களிப்பை பி.டி.உஷா விளக்கி இருந்தார்.

    2026-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடக்க இருந்தது. ஆனால் அதிலிருந்து ஆஸ்திரேலியா விலகியது. இதையடுத்து இப்போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இதில் ஹாக்கி, பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 10 போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்தும் முயற்சி தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தி காட்ட இந்தியா விருப்பமாக உள்ளது.

    • சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

    சென்னை மாநகராட்சியின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. மேயர் பிரியா 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வருவாய் செலவினம் ரூ.5,214.09 கோடி, மூலதன செலவினம் ரூ.3,190.6 கோடி என மொத்தம் ரூ.8,404.70 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

    மாநகராட்சி கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளன. 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை.

    பட்ஜெட் மீதான விவாதத்தில் மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் சுமார் 90 பேர் மட்டுமே மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • படம் ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே இந்த படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத், சென்னை மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படமானது ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், இயக்குநர் சுப்பராஜ் புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இப்புகைப்படத்தை எடுப்பதற்கு முன்பு, தலைவர் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே தனது பாணியில் 'பேட்ட கூலி ஜெயிலர்' என்றார்.. லவ் யூ தலைவா என்று கூறியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட, நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்', தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படம் என இளைய தலைமுறை இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • கடந்த சனிக்கிழமை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).

    இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.

    இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளித்திருந்தார்.

    அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவானார்.

    இந்நிலையில் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட புவியியல் பேராசிரியரை 72 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது.

    இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,270-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.66,160-க்கும் விற்பனையானது.

    நேற்று மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480

    19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,320

    18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000

    17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680

    16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-03-2025- ஒரு கிராம் ரூ.114

    19-03-2025- ஒரு கிராம் ரூ.114

    18-03-2025- ஒரு கிராம் ரூ.113

    17-03-2025- ஒரு கிராம் ரூ.113

    16-03-2025- ஒரு கிராம் ரூ.112

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.
    • ஹுசைனி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.

    சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார். இந்த நிலையில் ஹுசைனி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    வீடியோவில், 'தனக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், தினசரி 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுகிறது. இப்படித்தான் தினமும் தனது வாழ்நாள் சென்று கொண்டிருக்கிறது', என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர்.

    இதற்கிடையில் தனது உடலை தானம் செய்வதாக ஹுசைனி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹுசைனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன்.

    இந்த கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார், எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தவர். எனது 'சினேக் பைட் வேர்ல்டு ரெக்கார்ட்' உலக சாதனை நிகழ்வுக்கும் தலைமை தாங்கியவர். என்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே வந்து, என்னுடைய அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையெழுத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஹுசைனியின் இந்த உருக்கமான பதிவு நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. உடல் தானம் செய்வதாக அறிவித்துள்ள ஹுசைனிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் கனத்த இதயத்துடன் ஆறுதலையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

    ×