என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.

    அவர் வங்கி பெட்டகத்தில் இருந்த பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.

    இதில் அருணாச்சலம் உலகநாதன், ஹிதேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கிய பணத்தில் ரூ.15 கோடியை ஜார்கண்டை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் பாண்டே என்ற பவன் குப்தாவிடம்(வயது45) கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • போலி மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், போலி லேபிள்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மும்பை:

    மும்பை தாராவி பகுதியில் வெளிநாட்டு பிராண்டுகளின் பெயரில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலால்துறை அதிகாரிகள் தாராவி சந்த் கக்கையா மார்க், சிவசக்தி நகர் தெருவில் உள்ள குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வாலிபர் ஒருவர் வெளிநாட்டு காலி பாட்டில்களில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை நிரப்புவதை கண்டனர். இதனையடுத்து அதிகாரிகள் வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைதான வாலிபர் அதேபகுதியை சேர்ந்த அனிகேத் திலிப் காசித்(வயது23) என தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த போலி மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், போலி லேபிள்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபரிடம் நடத்திய விசாரணையில், கும்பர்வாடா சாலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மகேந்திர வகேலா என்பவரிடம் தான் காலி பாட்டில்கள், லேபிள்களை பெற்றதாக தெரிவித்தார்.

    இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் கும்பர்வாடா பகுதிக்கு சென்று அங்குள்ள குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பல்வேறு கம்பெனி பெயரில் போலியாக சீல் வைக்கப்பட்ட 33 மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், லேபிள்கள், பேக்கேஜிங் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் ஆகும். இதையடுத்து தலைமறைவான மகேந்திர வகேலாவை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த போலி மதுபானங்கள் மதுபிரியர்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சால் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது. மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ ஆட்டத்தின் பாதியில் அணியில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. தொடர்ச்சியாக ரன்கள் எடுத்த பிறகு லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சால் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

     இறுதியில் லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 210 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் மெக்கர்க் 1 ரன்களும், சமீர் ரிஸ்வி 4 ரன்களும், அக்சர் படேல் 22 ரன்களும், டு பிளெசிஸ் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களில் வெறியேறினார். அசுதோஷ் ராம்பாபு சர்மா 66 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.

    இறுதியில் 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 211 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    • தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர்.
    • பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர்.

    பின்னர், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    • டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர்.
    • கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மைய விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

    டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டனர். ஆனால் இதுகுறித்த புகாரை காவல்துறை எடுத்துக்கொள்ள மறுப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகான் காரணம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும்.

    பாகுபாடு, ராகிங் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். கல்வி நிறுவன வளாகத்துக்குள் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வது கட்டாயக் கடமையாகும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து, முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உயர்கல்வி, சமூக நீதி மற்றும் சட்ட விவகாரங்கள் துறையின் செயலாளர்கள் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களைக் கண்டறிந்து, தற்போதுள்ள விதிமுறைகளை பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை செயற்குழு தயாரிக்கும் என்று தெரிவித்தனர்.

    மேலும், தனது அறிக்கையைத் தயாரிக்கும் பணியில், எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் திடீர் ஆய்வு நடத்த செயற்குழுவுக்கு அதிகாரம் உண்டு. இந்தப் செயற்குழு நான்கு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதே நேரத்தில் இறுதி அறிக்கை எட்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

    டிரெய்லர் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது மேலும் படத்தின் கால அவகாசம் 2.30 மணி நேரமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    படத்தின் ப்ரோமோ பாடலான அய்லா அலேலா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் விக்ரம் மற்றும் துஷாரா இணைந்து நடனமாடியுள்ளனர். மிகவும் வைபாக அமைந்துள்ளது பாடல்.இப்பாடலை விவேக் வரிகளில் வேல்முருகன் பாடியுள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பல மாவட்டங்களில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தை குறித்து ரசிகர்களுக்கு நாளுக்கு நால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    • மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன்கள் விளாசினார்.
    • நிகோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் விளாசினார்.

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது. மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லக்னோவின் ஸ்கோர் 4.4 ஓவரில் 46 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார்.

    அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 64 ரன்கள் குவித்தது.

    மிட்செல் மார்ஷ் 21 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.4 ஒவரில் 133 ரன்கள் குவித்திருந்தது. அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் 24 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியால் லக்னோ 12.4 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    ரிஷப் பண்ட் 6 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது லக்னோவின் ஸ்கோர் 13.4 ஓவரில் 161 ரன்னாக இருந்தது. பண்ட் ஆட்மிழந்த சிறிது நேரத்தில் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 14.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் லக்னோவின் ஸ்கோர் அதிரடியாக உயரவில்லை. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. குல்தீப் யாதவ் வீசிய 17-வது ஓவரில் லக்னோவின் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இந்த ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் லக்னோ 10 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட் இழந்து 6 ரன்கள் எடுத்தது. லக்னோ 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    20வது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் மில்லர் சிக்சருக்கு தூக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் 209 ரன்கள் குவித்தது. மில்லர் 27 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.

    டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

    • அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
    • திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது

    சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.

    எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு

    இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இக்கோழி சீனாவின் பாரம்பரிய இசை கேட்டு வளர்ந்தது என்றும் நீருக்கு பதிலாக பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
    • அந்த கோழி சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

    சீனாவின் ஷாங்காய் உணவகம் ஒன்றில் சமைக்கப்பட்ட பாதி கோழிக்கறியை ரூ.5,500 க்கு விற்பனை செய்து வருகிறது. அதற்கு அந்த உணவகம் அதிவிநோதமான காரணம் ஒன்றை வைத்துள்ளது.

    ஷாங்காய் நகரிலுள்ள அந்த உணவகத்தில் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் சமைத்த அரை கோழிக் கறியை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதற்கான ரசீதில் அதன் விலை 480 யுவான் (இந்திய ரூபாய் மதிப்பில் 5,500) என இருந்துள்ளது. ஏன் அவ்வளவு விலை என்றும் அந்தக் கோழி இசை கேட்டு வளர்ந்ததா? தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்து வளர்த்தீர்களா? என்றும் தொழிலதிபர் உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு ஆமாம் என்று பதிலளித்த ஊழியர், இக்கோழி சீனாவின் பாரம்பரிய இசை கேட்டு வளர்ந்தது என்றும் நீருக்கு பதிலாக பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த கோழி சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

    உணவகத்தின் இந்த பதிலை தொழிலதிபர் தனது சமூக ஊடகத்தில் பதிவிடவே அது வைரலாகி வருகிறது.


    உண்மையில் சன்ஃபிளவர் சிக்கன் வகை கோழிகள் அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு பதிலாக சூரியகாந்தி தண்டின் சாறு மற்றும் இதழ்களை உணவாக கொடுத்து வளர்க்கப்டுகின்றன. இந்த வகை கோழிகள் பாரம்பரிய இசைக்கு மத்தியில் வளர்க்கப்படுவதாக பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் நீருக்கு பதில் பால் கொடுத்து வளர்க்கப்படுவது என்பது உண்மை அல்ல. எம்பரர் சிக்கன் என்றும் அழைக்கப்படும் இவ்வகை கோழிகள் அதன் தனித்துவமான சுவை காரணமாக ஓட்டல்கள், உணவகங்களில் பரவலாக சமைக்கப்டுகின்றன. சன்ஃபிளவர் சிக்கன் கோழிகள் ஒரு கிலோ 200 யுவான் (ரூ. 2,300), முழு கோழி 1000 யுவான் (ரூ. 11,500) வரை விற்கப்படுகிறது.

    • இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'.
    • இந்த நிலையில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்துள்ளனர்.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

    இந்த நிலையில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்துள்ளனர். அஷ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்சனா, லியோன் ஜேம்ஸ், பிரதீப் ரங்கநாதன் விஜயை சந்தித்தனர். இதை மிகவும் நெகிழ்ச்சியுடன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     

    அதில் அவர் " என்னுடைய நண்பர்களுக்கு தெரியும் நான் எவ்வளவு கடுமையாக வேலை பார்க்கிறேன் நடிகர் விஜயை சந்திப்பதற்கு என்று. அவருக்கு எதிரில் இன்று அமர்ந்தேன். நான் எப்பொழுதும் அதிகமாக பேசுவேன். என்னுடைய டீம் அனைவரும் நான் என்ன பேசப் போகிறேன் என ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் என்னால் பேச முடியச்வில்லை. அவரை பார்க்கும் பொழுது என் கண்ணில் ஆனந்த கண்ணீர் மட்டுமே வழிந்தது. நான் அவர் மீது வைத்துள்ள அன்பு உங்களுக்கு சொன்னால் புரியாது. அவர் என்னை பார்த்து "குட் ரைட்டிங் ப்ரோ" என கூறினார் இது போதும். ஜெகதீஷ் அண்ணா மற்றும் அர்ச்சனா மேடமிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்." என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

    • கடினமான கழித்தல், கூட்டல், வகுத்தல், சராசரி போன்றவற்றில் மாணவர்கள் சிரமத்தை குறைக்க முடிவு.
    • வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க குழு அமைக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு.

    அக்கவுண்ட் தேர்வுகளின்போது கடினமான கழித்தல், கூட்டல், வகுத்தல், சராசரி போன்றவற்றை மாணவர்கள் எளிதாக கையாளும் வகையில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைகள் பெறப்பட்டன. இதனால் அக்கவுண்ட் தேர்வுகளின்போது கால்குலேட்டர் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    மேலும், இதற்கென வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்காக நேரம் செலவழிக்காமல் செயல்திறனை அதிகரிக்க முடியும்.

    ஏற்கனவே இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் கடந்த 2021-ல் இருந்து 12ஆம் வகுப்பு மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
    • மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.

    இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் 500 ருபாய் நோட்டுகள் ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. எரிந்து நாசமாவதற்கு முன் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

    இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியில் இருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.

    தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா ஏற்கெனெவே 2021 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார்.

    தற்போதும் அவர் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று பார் குழு தலைவர் அனில் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

    ×