என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
    • மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.

    குணால் கம்ரா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குணால் கம்ராவுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், குணால் கம்ராவுக்கு தொலைபேசி மூலம் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குணால் கம்ராவை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கும் அழைப்புகள் என்று கூறப்படுகிறது. குணால் கம்ராவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் இதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குணால் கம்ரா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போது மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை முன்பொரு காலத்தில் துரோகி என்று கூறி வந்ததாக குணால் கம்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

    • மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
    • பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமைலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    மேலும், இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் கண்ணீர் மல்க மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



    மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    • 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார்.
    • பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    சென்னை:

    பழைய பாம்பன் பாலம் 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. கடலுக்கு நடுவில் இருந்த பழைய பாலத்தில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டது.

    இதற்கிடையே, பாம்பன் ரெயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் 'தூக்கு பாலத்தில்' அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியுடன் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    பின்னர், பழைய பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு (2.1 கிலோ மீட்டர் தூரம்) கட்டப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி புதிய ரெயில்வே பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, ஒருசில குறைகளை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டிய குறைகள் சரிசெய்யப்பட்டது.

    இதையடுத்து, புதிய ரெயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை.

    ரெயில்வே பாலப் பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறந்துவைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக, பாம்பன் புதிய ரெயில்வே பாலம் மத்திய அரசின் கனவு திட்டம் என்பதால் அதை பிரதமர் மோடி மட்டுமே திறந்து வைப்பார் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். கடந்த 23-ந்தேதி தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், ரெயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.

    இதேபோல, பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • இந்தியாவில் 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
    • இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ராஜீவ் ரஞ்சன்சிங் பேசினார். அவர் பேசியதாவது:-

    மோடி அரசு கடந்த 2014-ம் ஆண்டு ராஷ்டிரீய கோகுல் மிஷன் என்ற திட்டத்தை தொடங்கியது. அப்போது இருந்து நாட்டில் பால் உற்பத்தி 63.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில், பால் உற்பத்தி மேலும் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

    தற்போது, உலகிலேயே பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு இந்தியாதான். 23 கோடியே 90 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில், பால் உற்பத்தியை 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இந்தியாவில், 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 75 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம் ஆகும்.

    ராஷ்டிரீய கோகுல் மிஷனின் நோக்கம், உள்நாட்டு கால்நடை இனங்களை பராமரித்து, மேம்படுத்துவதுடன், பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரித்து, பால் உற்பத்தியை உயர்த்துவது ஆகும். இதன்மூலம், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் சேவை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரன்யா ராவிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3-ந்தேதி இரவு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடிகை ரன்யா ராவ், தருண்ராஜு ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமின் கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடிகை ரன்யா ராவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல், நடிகை ரன்யா ராவ் தங்கம் வாங்குவதற்காக ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீது நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
    • 2015ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

    அதிமுகவில் இருந்து 1977, 1980 தேர்தல்களில் சட்டப்பேரவைக்கு தேர்வான இவர், 2000ம் ஆண்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் தி.மு.க.வில் இணைந்தார். 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.-வாக தேர்வான இவர், 2015ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    2016ல் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பிய அவருக்கு, சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017ல் கட்சியில் இருந்து விலகி 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.-வில் இணைந்தார்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • சிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-12 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி இரவு 11.05 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: அவிட்டம் நள்ளிரவு 12.02 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்ட பதி தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-இன்பம்

    துலாம்- தனம்

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- நற்செயல்

    மகரம்-பக்தி

    கும்பம்-மேன்மை

    மீனம்-பண்பு

    • பல விஷயங்களை மாற்றும் வகையில் உள்ளது.
    • ஃபெடரல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வலியுறுத்தி உள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவண சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நாளுக்குள் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு பாஸ்போர்ட் போன்ற குடியுரிமை சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். தேர்தல் நாளுக்கு பிறகு பெறப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ள தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வாக்காளர் பட்டியல்கள் உள்ளிட்ட விவரங்களை கூட்டாட்சி நிறுவனங்களுடன் மாகாணங்கள் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரிகள் இணங்க மறுத்தால் மாகாண நிதி நிறுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, "நவீன, வளர்ந்த, வளரும் நாடுகளால் பயன்படுத்தப்படும் அடிப்படை மற்றும் தேவையான தேர்தல் பாதுகாப்புகளை செயல்படுத்த அமெரிக்கா தவறிவிட்டது.

    இந்தியாவும், பிரேசிலும் வாக்காளர் அடையாளத்தை ஒரு பயோமெட்ரிக் தரவுத்தளத்துடன் இணைக்கின்றன. அதே நேரத்தில் அமெரிக்கா பெரும்பாலும் குடியுரிமைக்கான சுய சான்றளிப்பை நம்பியுள்ளது. இந்த உத்தரவு மூலம் தேர்தல் மோசடி முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்," என்றார்.

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனோஜுக்கு திரைத்துறை சார்ந்தவர்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
    • பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார்.

    இவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜுக்கு திரைத்துறை சார்ந்தவர்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.

    இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், ``மனோஜின் திடீர் மரணச் செய்தி அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
    • தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளராக இருப்பவர் ராம்பிரித் பஸ்வான். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக காண்டிராக்டை முடித்து கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    அவர்கள் லஞ்சப் பணம் கைமாற்றுவது தொடர்பாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, லஞ்சப் பணம் கைமாறிய போதே, ராம்பிரித் பஸ்வான் மற்றும் தனியார் நிறுவன மேலாளரை கையும் களவுமாக பிடித்தனர்.

    இந்த லஞ்ச வழக்கில் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த மேலும் 6 உயர் அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இதையடுத்து ராம்பிரித் பஸ்வான், தனியார் நிறுவன அதிகாரி உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்களது காண்டிராக்ட் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.

    • ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

    திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாரானபோது அவர்கள் 2 பேரையும் சுற்று வளைத்த போலீசார் கைது செய்தனர்.

    கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஜாபரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு மாநிலங்களில் ஜாபர் மீது செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது ஜாபர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து ஜாபர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.

    • முதலை நடமாட்டம் இருந்த பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    • ஏரியில் உள்ள முதலைகள் ஒரு சில நேரங்களில் ஏரியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    மும்பை பவாய் பகுதியில் புகழ்பெற்ற மும்பை ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் பெரிய முதலை ஒன்று புகுந்தது. அதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் முதலை யாரையும் பொருட்படுத்தாமல் அங்கு இருந்து அருகில் உள்ள பவாய் ஏரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து வனவிலங்கு நலச்சங்க நிறுவனர் பவான் சர்மா கூறுகையில், "ஏரியில் இருந்து வெளியே வந்தது பெண் முதலையாக இருக்கலாம். அது முட்டைபோட இடம் தேடி இருக்கும். அந்த பகுதியில் இருந்தவர்கள் முதலையை யாரும் துன்புறுத்தாத வகையில் பாதுகாத்து உள்ளனர். சிறிது நேரத்தில் முதலை தானாக ஏரிக்குள் சென்றுவிட்டது" என்றார்.

    ஐ.ஐ.டி. வளாகத்தில் முதலை ஊர்ந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே முதலை நடமாட்டம் இருந்த பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம், முதலை நடமாட்டத்துக்கு வாய்ப்பு உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டு கொண்டு உள்ளனர்.

    பவாய் பகுதியில் பத்மாவது ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள முதலைகள் ஒரு சில நேரங்களில் ஏரியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

    ×