என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும் விற்பனையானது.
    • கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,195-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,560-க்கும் விற்பனையானது.

    கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480

    24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720

    23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    21-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-03-2025- ஒரு கிராம் ரூ.110

    24-03-2025- ஒரு கிராம் ரூ.110

    23-03-2025- ஒரு கிராம் ரூ.110

    22-03-2025- ஒரு கிராம் ரூ.110

    21-03-2025- ஒரு கிராம் ரூ.112

    • பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன.
    • பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி நாளை நிறைவடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி நாளை நிறைவடைகிறது.

    இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாைள மறுநாள் (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.

    4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், தனித் தேர்வர்கள் 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் எழுதுகிறார்கள்.

    12,480 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 4113 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுத தயா ராக உள்ளனர். தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 4,858 பறக்கும் படைகள் அமைக்கப்பட் டுள்ளன. 48 ஆயிரத்து 426 பேர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத் தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வு துறை எச்சரித்துள்ளது.

    மேலும் தேர்வு பணிகளில் ஈடுபடக் கூடிய ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்து தல், மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கு உதவுதல் போன்ற தவறான செயல்களுக்கு துணை போகக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 2,3 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    10, 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு பொதுத் தேர்வை சந்திக்கிறார்கள்.

    • டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. - அ.தி.மு.க. பேச்சுவார்த்தை ஒரு தொடக்கமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
    • பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

    பா.ஜ.க. சார்பில் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ரவி பச்சமுத்து, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், டிடிவி தினகரன், ஓபிஎஸ், ரவிந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்தார் விருந்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம், டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. - அ.தி.மு.க. பேச்சுவார்த்தை ஒரு தொடக்கமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இங்கு இப்தார் நடந்தது ஒரு தொடக்கம். இதேமாதிரி எல்லோரும் உட்கார்ந்து அடுத்த ஆட்சியை அமைக்கப்போகிறோம் என்று அவர் கூறினார்.

    முன்னதாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் பற்றி புகார் தெரிவிக்க அ.தி.மு.க. தரப்பில் அமித்ஷாவிடம் நேரம் கேட்கப்பட்டது. அதன்பேரில் இந்த சந்திப்பு நடந்தது.

    பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு, தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமாக 2 கட்சிகளும் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    • மறைந்த மனோஜ் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • இயக்குனர் பாரதிராஜாவுக்கு விஜய் ஆறுதல் கூறினார்.

    தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சேத்துப்பட்டில் வைக்கப்பட்டு இருந்த மனோஜ் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

    இதையடுத்து, சேத்துப்பட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள மனோஜ் இல்லத்திற்கு அவரது உடலானது கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 3 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனிடையே, நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், உயிரிழந்த மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின், இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார். 

    • ஆய்வை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • RRTS போக்குவரத்து டெல்லி - மீரட் இடையே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மிக அதிவேக ரெயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை - திண்டிவனம் - விழுப்புரம், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், பிராந்திய விரைவு ரெயில் போக்குவரத்து (RRTS) சேவையை உருவாக்கிட, விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

    சென்னை - செங்கல்பட்டு, திண்டிவனம் - விழுப்புரம் மற்றும் சென்னை - காஞ்சிபுரம், வேலூர் மற்றும் கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் ஆகிய மூன்று வழித்தடங்களில் பிராந்திய விரைவு ரெயில் போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ வேகத்தில் ரெயில் செல்லும் வகையிலான, RRTS போக்குவரத்து டெல்லி - மீரட் இடையே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • 19 பேர் காயமுற்றதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    தென் கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 19 பேர் காயமுற்றுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காட்டுத்தீ காரணமாக அண்டாங் மற்றும் இதர தென்கிழக்கு நகரங்கள் மற்றும் டவுன்களில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். காட்டுத்தீ காரணமாக சுமார் 43 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.

    அண்டாங் பகுதியில் வசிக்கும் 5500-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். எனினும், வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டம் காரணமாக மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளது.

    காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    • நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.
    • நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். அவர் நடிகர் மம்முட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியதாக, சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், நடிகர் மம்முட்டிக்கு தான் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவையின்றி திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர் பரப்பி விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. வழிபாடு ரசீதை பெற்று சென்ற நடிகரின் உதவியாளர் வெளியிட்ட தகவல் வைரலானது. இதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போல் தோல்வியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், தனது முதல் லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சிடம் போராடி பணிந்தது.

    கொல்கத்தா அணியின் முதல் ஆட்டத்தில் ரஹானே, சுனில் நரின் தவிர மற்றவர்களின் பேட்டிங் சிறப்பாக இல்லை. குயின்டான் டி காக், வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஒற்றை படையை தாண்டவில்லை. பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை. எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததுடன், 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    ராஜஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், ஐதராபாத்துக்கு எதிராக 286 ரன்களை வாரி வழங்கி விட்டனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை சிதறவிட்டு வள்ளலாக மாறினார். இமாலய இலக்கு என்றாலும் ராஜஸ்தான் அணியினர் 246 ரன்கள் வரை நெருங்கினர். சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் அரைசதம் அடித்தனர். விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கேப்டன் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் 'இம்பேக்ட்' வீரராகவே பயன்படுத்தப்பட்டார். இன்றைய ஆட்டத்திலும் அதே நிலை தொடருவதால் ரியான் பராக் கேப்டன் பணியை கவனிப்பார்.

    மொத்தத்தில் இரு அணிகளும் தங்களது பந்துவீச்சில் உள்ள குறைபாட்டை சரி செய்து முதல் வெற்றிக்கு தீவிரம் காட்டும். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன. மற்றொரு போட்டியில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா அல்லது ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, பசல்ஹக் பரூக்கி, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் மத்வால்.

    கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன் அல்லது அன்ரிச் நோர்டியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பங்குனி உத்திரம் ஆராட்டு 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    2-ந் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த திருவிழா 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 11-ந் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.

    சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

    சபரிமலையில் கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் 18-ம் படி ஏறி வந்தவுடன் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இனி வரும் பூஜை நாட்களிலும் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.

    • கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
    • பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

    இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் கடந்த 20-ந்தேதி மாலை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனை ஓட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தடங்கல்களை தாண்டி நள்ளிரவில் வெற்றிக்கரமாக நடைபெற்று முடிந்தது. இதனால் பூந்தமல்லி- போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் அடுத்த மாதம் 20-ந்தேதிக்கு மேல் நடைபெறும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
    • மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.

    குணால் கம்ரா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குணால் கம்ராவுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், குணால் கம்ராவுக்கு தொலைபேசி மூலம் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குணால் கம்ராவை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கும் அழைப்புகள் என்று கூறப்படுகிறது. குணால் கம்ராவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் இதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குணால் கம்ரா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போது மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை முன்பொரு காலத்தில் துரோகி என்று கூறி வந்ததாக குணால் கம்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

    ×