என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
    • அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'விநாயகர் சதுர்த்தி' வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஞான முதல்வனாம் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'விநாயகர் சதுர்த்தி' நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வினைகளைக் களைந்தெறியும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலையை வைத்து அறுகம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், பழங்கள் போன்றவற்றை விநாயகருக்குப் படைத்து, தொடங்கும் எந்தஒரு செயலும் வெற்றிபெற வேண்டும் என்று பக்திப் பரவசத்துடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

    பிரணவப் பொருளாகத் திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை பிரார்த்தித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், எனது உளமார்ந்த 'விநாயகர் சதுர்த்தி' வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன்.
    • இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார்.

    குறிப்பாக அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக கருதப்படும் சீனா இந்த வரி உயர்வுகளுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது.

    இந்நிலையில் சீனாவுக்கு சீட்டாட்டத்தின் பாணியில் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகளையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் "அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன. ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன.

    நான் அவற்றை கொண்டு விளையாட விரும்பவில்லை. நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோதும். அதனால்தான் நான் இப்போது அதைச் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

    அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

    அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன் என்று அவர் கூறினார்.

    அதேநேரம், "இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருக்கும்" என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.   

    • ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

    வெளியான 1 நாளில் இவ்வளவு அதிகமான பார்வைகள் ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பார்ப்பை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இது அமரன் படத்தின் டிரெய்லர் வியூக்களை 1 நாளில் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
    • இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை ஜோ ரூட் ஒருநாள் நிச்சயம் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜோ ரூட்டின் டெஸ்ட் சாதனைகள் குறித்து முதல்முறையாக சச்சின் மனம் திறந்துள்ளார்.

    ரெடிட்டில் நடந்த Ask Me Anything அமர்வின் போது, சச்சினிடம், "ஜோ ரூட் பற்றிய உங்கள் முதல் அபிப்ராயம் என்ன? அவர் இப்போது 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்துள்ளார், உங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் அவர் உங்களுக்கு எதிராக தான் தனது முதல் போட்டியை விளையாடினார்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த சச்சின், "டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்களைக் கடந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அவர் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். 2012 ஆம் ஆண்டு நாக்பூரில் அவரது முதல் டெஸ்டின் போது தான் நான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். அப்போதே எனது அணியினரிடம் அவர் இங்கிலாந்தின் எதிர்கால கேப்டனாக மாறுவார் என்று கூறினேன். அவர் விக்கெட்டை மதிப்பிடும் விதமும், அவர் விளையாடிய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒரு பெரிய வீரராக வருவார் என்று அந்த தருணத்திலேயே எனக்குத் தெரிந்தது" என்று தெரிவித்தார்.

    ஜோ ரூட்டை சச்சின்பாராட்டுவது இது முதல் முறையல்ல. 2021-ல் இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது, லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பேட்டிங் சரிவை சந்தித்தது. அப்போது வர்ணனை செய்த சச்சின், 'இந்த இங்கிலாந்து அணியை தனி ஆளாகத் தாங்கிப் பிடிக்கும் திறமை ஜோ ரூட்டிடம் மட்டுமே உள்ளது' என்று குறிப்பிட்டார். அவரது திறமை மீது சச்சின் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜோரூட் 3 சதங்களுடன் 537 ரன்கள் குவித்து தனது அசாத்தியமான பேட்டிங் நிலையை தொடர்ந்தார். அவரது அடுத்த பெரிய சவால் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடராகும். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் சதம்கூட அடிக்கவில்லை என்ற குறையை இந்த முறை அவர் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரூ.5,590 கோடி ஊழல் நடந்ததாக பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா புகார் அளித்திருந்தார்.
    • முன்னாள் சுகாதார அமைச்சர்களான சௌரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    டெல்லியில் ஆம ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் சுகாதார அமைச்சருமான சௌரப் பரத்வாஜின் இல்லம் உட்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.

    ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவமனை கட்டுமானத் திட்டங்களில் முறைகேடுகள் மற்றும் பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    2018-19 காலகட்டத்தில், 11 புதிய மருத்துவமனைகள் மற்றும் 13 ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளின் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ரூ.5,590 கோடி ஊழல் நடந்ததாக 2024 இல் அப்போதைய பாஜக எதிர்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர்களான சௌரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

    • நேற்று தங்கம் விலை குறைந்தது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 23-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9 ஆயிரத்து 305-க்கும், சவரன் ரூ.80 குறைந்து ரூ.74 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9.355-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 74,840-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440

    24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    23-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    22-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,720

    21-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-08-2025- ஒரு கிராம் ரூ.131

    24-08-2025- ஒரு கிராம் ரூ.130

    23-08-2025- ஒரு கிராம் ரூ.130

    21-08-2025- ஒரு கிராம் ரூ.128

    21-08-2025- ஒரு கிராம் ரூ.126

    • 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது
    • அண்ணாமலை, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

    இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.

    அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், டி.ஆர்.பி. ராஜா மகனின் இந்த செயலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்தார்.

    இதனிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, "யார் கயல் பதக்கம் வாங்க வேண்டும் என்றும் வாங்க வேண்டாம் என்றும் நினைப்பது அவரவர் விருப்பம். என் கையில் பதக்கம் வாங்கவில்லை, வாங்க மறுத்துவிட்டார் என்பது முக்கியமில்லை. டி.ஆர்.பி. ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த துறையில் சாதனை செய்யவேண்டும். பெரிய மனிதராக வளர வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.

    • 30 வயதுடைய அந்தப் பெண்ணும், அவரது 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
    • குழந்தைகள் முன்னிலையில் குட்கா சாப்பிடுவதை நிறுத்துமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவர் பணம் தராததால் தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் 30 வயதுடைய அந்தப் பெண்ணும், அவரது 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 5 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    கணவன் குட்கா பழக்கத்தை விட்டுவிடுமாறு கூறியதால் கோபம் கொண்ட அந்தப் பெண் இந்த கொடூரமான முடிவை எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    குழந்தைகள் முன்னிலையில் குட்கா சாப்பிடுவதை நிறுத்துமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளது.

    அந்தப் பெண் என்ன வகையான விஷத்தைப் பயன்படுத்தினார். அது அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
    • நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு 5-ம் கட்டமாக காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் விரிவாக்கம் செய்து வைத்தார்.

    சென்னை:

    இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதன்மூலம் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் காலை உணவை உண்டு கல்வி பயின்று வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.

    நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர்.

    நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு 5-ம் கட்டமாக காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் விரிவாக்கம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உணவருந்தினர்.

    • ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
    • ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும்

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி ஆகஸ்ட் 6 அன்று இந்திய பொருட்கள் மீது அபராதமாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதனால், ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.

    அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த புதிய வரிவிதிப்பு, நாளை(ஆகஸ்ட் 27) அதிகாலை 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

    • மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றவர்களுக்கு அண்ணாமலை பதக்கம் வழங்கினார்.
    • டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து அறிவுரை கூற வேண்டும் என்று தமிழிசை தெரிவித்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

    இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.

    அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் TRB ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், TRB ராஜா மகனின் இந்த செயலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "ஆளுநர், அண்ணாமலை என்று சிறப்பு விருத்தினராக தகுதிக்கு ஏற்ப தான் கல்வி நிறுவனங்கள் அழைக்கின்றன. அங்கு விருத்தினராக வருபவர்களுக்கு மரியாதை தர வேண்டும். விருது வாங்க வருபவர் மரியாதை செய்ய வேண்டிய கடமை. அப்போது தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரியானது கிடையாது. திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டும். டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து பராபட்சமாக நடந்து கொள்ள கூடாது என அறிவுரை கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    ×