என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விநாயகர் சதுர்த்தி- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
- மக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
- அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'விநாயகர் சதுர்த்தி' வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'விநாயகர் சதுர்த்தி' நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வினைகளைக் களைந்தெறியும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலையை வைத்து அறுகம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், பழங்கள் போன்றவற்றை விநாயகருக்குப் படைத்து, தொடங்கும் எந்தஒரு செயலும் வெற்றிபெற வேண்டும் என்று பக்திப் பரவசத்துடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
பிரணவப் பொருளாகத் திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை பிரார்த்தித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், எனது உளமார்ந்த 'விநாயகர் சதுர்த்தி' வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






