என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்டில் உலக சாதனையை நெருங்கும் ஜோ ரூட் - முதல்முறையாக மனம் திறந்த சச்சின்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
- இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை ஜோ ரூட் ஒருநாள் நிச்சயம் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜோ ரூட்டின் டெஸ்ட் சாதனைகள் குறித்து முதல்முறையாக சச்சின் மனம் திறந்துள்ளார்.
ரெடிட்டில் நடந்த Ask Me Anything அமர்வின் போது, சச்சினிடம், "ஜோ ரூட் பற்றிய உங்கள் முதல் அபிப்ராயம் என்ன? அவர் இப்போது 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்துள்ளார், உங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் அவர் உங்களுக்கு எதிராக தான் தனது முதல் போட்டியை விளையாடினார்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சச்சின், "டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்களைக் கடந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அவர் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். 2012 ஆம் ஆண்டு நாக்பூரில் அவரது முதல் டெஸ்டின் போது தான் நான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். அப்போதே எனது அணியினரிடம் அவர் இங்கிலாந்தின் எதிர்கால கேப்டனாக மாறுவார் என்று கூறினேன். அவர் விக்கெட்டை மதிப்பிடும் விதமும், அவர் விளையாடிய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒரு பெரிய வீரராக வருவார் என்று அந்த தருணத்திலேயே எனக்குத் தெரிந்தது" என்று தெரிவித்தார்.
ஜோ ரூட்டை சச்சின்பாராட்டுவது இது முதல் முறையல்ல. 2021-ல் இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது, லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பேட்டிங் சரிவை சந்தித்தது. அப்போது வர்ணனை செய்த சச்சின், 'இந்த இங்கிலாந்து அணியை தனி ஆளாகத் தாங்கிப் பிடிக்கும் திறமை ஜோ ரூட்டிடம் மட்டுமே உள்ளது' என்று குறிப்பிட்டார். அவரது திறமை மீது சச்சின் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜோரூட் 3 சதங்களுடன் 537 ரன்கள் குவித்து தனது அசாத்தியமான பேட்டிங் நிலையை தொடர்ந்தார். அவரது அடுத்த பெரிய சவால் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடராகும். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் சதம்கூட அடிக்கவில்லை என்ற குறையை இந்த முறை அவர் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






