என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன்.
- எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன்.
இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் அபார திறமை கொண்டவர். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வந்தார்.
2012ஆம் ஆண்டில் அறிமுகமான அவர், 2018ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை. 2022ஆம் ஆண்டுக்கப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், இந்திய அணியில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புவனேஷ்வர் குமார் கூறுகையில் "நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன். தற்போது வரை ஓய்வு குறித்து நினைத்ததில்லை. எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன். மற்றவை தேர்வாளர்கள் கையில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
35 வயதாகும் புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 87 டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- பண்டிகைக் காலங்கள், திருமணத் தேவைகளால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதும் விலை உயர்வுக்கு காரணம்.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச மார்கெட்டை பொறுத்தே இந்திய சந்தையும் இருக்கும் என்பதால் இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய தங்கத்தின் விலை வரும் மாதங்களில் தொடர்ந்து உயரும் என ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பொருளாதார ஆய்வுக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.
2025-ம் ஆண்டின் இறுதிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ₹99,500 முதல் ₹1,10,000 வரையிலும், 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் ₹1,10,000 முதல் ₹1,25,000 வரையிலும் உயரக்கூடும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
டிரம்ப் செய்யும் செயல்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவது, பெடரல் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்களும் தங்கம் விலை உச்சத்திற்குப் போகக் காரணமாக இருக்கிறது.
இந்தியாவில் பண்டிகைக் காலங்கள் மற்றும் திருமணத் தேவைகள் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை 33 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
2025-ன் மூன்றாம் காலாண்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3,500 டாலர் என்ற ரேஞ்சில் இருந்தது. அடுத்த நான்காம் காலாண்டில் 3,700 டாலராக உயரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தாலும் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கம் மேலும் விலை உயரவே வாய்ப்புகள் அதிகம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- ரசிகர்கள் பலரும் லோகா படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி 7 நாட்களான நிலையில், உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.
- 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் மாநகராட்சி சார்பில் புதிய பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் நொளம்பூர்- மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே சன்னதி முதல் குறுக்கு தெருவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பணி சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது. 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை அடுத்த வாரம் திறந்து வைக்கிறார்.
இந்த பாலம் நொளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், பாடி, முகப் பேர், அயப்பாக்கம், திரு வேற்காடு, அடையாளம் பட்டு, அத்திப்பட்டு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மிக முக்கிய போக்குவரத்து நிறைந்த பாலம் ஆகும்.
அங்கு சிறு பாலங்கள் கட்டப்பட்டு இருந்ததால் மழைக்காலத்தில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து விடும். அதனால் மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் அப்பகுதி மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும்.
நீண்ட காலமாக மக்கள் புதிய பாலம் கட்டக்கோரி போராடி வந்த நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு விடியல் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து வளரசவாக்கம் மண்டல குழு தலைவர் வி.ராஜன் கூறியதாவது:-
புதிய பாலம் என்பது 143, 144 வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்பெனி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயன் அடைவார்கள்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் கூவம் ஆற்றின் குறுக்கே ஏற்படும் வெள்ளப் பாதிப்பில் இருந்து புதிய பாலம் மக்களை பாதுகாக்கும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சீராகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., காரம்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலம் அர்ப்ப ணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த நிறுவனம்தான் உரிமையாளர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக என்.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த நிறுவனம்தான் உரிமையாளர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
2025ஆம் ஆண்டு நிதியாண்டின்படி, EWS பைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 47.08 பங்குகளை வைத்துள்ளது. என்.சீனிவாசன் 0.11 சதவீதம், சித்ரா சீனிவாசன் 0.03 சதவீதம், ரூபாய் குருநாத் 0.01 சதவீதம் பங்குகளையும் வைத்துள்ளனர்.
சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் இயக்குனர்கள் குழுவால், என். சீனிவாசன் மற்றும் அவரது மகள் ரூபா குருநாத் ஆகியோர் அந்நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர். இது கடந்த பிப்ரவரி மாதம் 10ம்தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகவும், வரவிருக்கும் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பில், அவர்களுடைய நியமனம் குறித்த முறையான அறிவிப்பு தீர்மானம் பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் என ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
,இதன் மூலம் முதன்முறையாக சிஎஸ்கே போர்டில் (இயக்குனர்கள் குழுவில்) இருவரும் இணைகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சிமெண்டில் உள்ள இவர்களுடைய பங்குகளை அல்ட்ராடெக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கே.எஸ். விஸ்வநான் நிர்வாக இயக்குனராக மூன்று வருடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 19ஆம் தேதியில் இருந்து 3 வருடம் பதவியில் நீடிப்பார்.
சிஎஸ்கே 2025 நிதியாண்டில் நிகர லாபத்தில் 20 சதவீதம் சரிவையும், வருவாயில் 4.7 சதவீதம் சரிவையும் எதிர்கொண்டுள்ளது. 644 கோடி ரூபாய் வருவாயும், 181 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸை தவிர்த்து தென்ஆப்பிரக்கா கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக்கில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட்டின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளது. மேலும் வெளிநாடுகளில் கிரிக்கெட் அகாடமியை விரிவுப்படுத்தி வருகிறது.
சென்னை அணியின் ஆலோசகராக திகழ்ந்து வந்தார். தற்போது அணியின் சேர்மனாகியுள்ளதால், அணிகளுடன் பயணிப்பார். இது அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
- முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா?
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு இண்டி கூட்டணியைச் சேர்ந்த RJD கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இண்டி கூட்டணியினர் பிஹாரில் நடத்திய கூட்டத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றியும் அவரது தாயார் குறித்தும் முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒருவரை அரசியல் ரீதியாகத் தாக்க அவரது அன்னையை இழிவுபடுத்தி ஆனந்தமடையும் குரூரப் போக்கு எவ்வளவு கொடூரமானது? பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா என்ன?
பூவலகத்திலிருந்து மறைந்தவர்களைத் தெய்வமாகப் பார்க்கும் வழக்கம் நம் தாய்த்திருநாட்டில் தொன்று தொட்டு இருக்கும் வேளையில், மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா? வயதான பெண்மணியைத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் இழிவுபடுத்தியதை எதிர்த்துக் குரல் கொடுக்காத இந்த இண்டி கூட்டணியினர் தான் நம் இந்திய மகள்களையும் பாரதத் தாயையும் காக்கப் போகிறார்களா?
தற்போது வரை இதற்கு இண்டி கூட்டணித் தலைவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்காதது, பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களை இழிவுபடுத்துவதில் தவறில்லை என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது என்பதைத் தான் இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.
மாண்புமிகு பிரதமரின் மறைந்த தாயாரை அவமதித்த இச்சம்பவத்திற்கு உடனடியாக இண்டி கூட்டணித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து பாரதத்தின் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.
- ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.
ஐரோப்பாவில் நடைபெறும் கிளப்புகள் கால்பந்து போட்டி மிகவும் பிரபலமானது. ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகள் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடியது.
இதற்கிடையே இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் கால்பந்து கிளப்புகள் வீரர்களை பரிமாற்றம் செய்வதற்கான அவகாசம் முடிவடைந்தது.
அதன்படி அனைத்து கிளப்புகளும் மொத்தமாக ரூ.35 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் மொத்தம் 20 கிளப்புகள் விளையாடி வருகின்றன. இதில் லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட், நியூகேஸ்டல் உள்ளிட்ட கிளப்புகளும் வீரர்கள் மாற்றத்துக்கு பணத்தை அதிகமாக செல வழித்துள்ளன.
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம்.
- பாஜக ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
டெல்லியில் தமிழக பாஜக உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தலுக்கு தயாராவது, கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன், எல் முருகன், பொன், ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோருக்கு அமித் ஷா அறிவுரை வழங்கினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், " தமிழக பாஜக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம்.
கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிகமிக நல்லது" என்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பலுசிஸ்தானில் ஏராளமானோர் கலந்துகொண்ட ஒரு அரசியல் கட்சி பேரணி நடந்தது.
- அப்போது அங்கு நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் கட்சி பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அங்கு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், பலுசிஸ்தானில் மற்றொரு இடத்தில் ராணுவ வாகனங்களைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் உள்ள துணை ராணுவப்படை தலைமையகத்தைக் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ தலைமையகத்தின் சுவரில் மோதி வெடிக்க வைத்தனர். இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- திமுகவினரின் ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பழனி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ஸ்வானிதி மற்றும் முத்ரா கடனுதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்து கொடுக்க முயன்ற திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார் பழனி திமுக நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி.
அதிலும், "எந்த கவர்மெண்ட் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதோ அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்" என்ற தொனியில் அவர் பேசியிருப்பது அதிகார மமதையின் வெளிப்பாடு. திமுகவினரின் இந்த ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
மக்களுக்கு பலனளிக்கும் மத்திய அரசின் நலத்திட்டங்களை ஆளும் அரசும் செயல்படுத்த மாட்டார்கள், அவற்றை மக்களிடையே கொண்டு சேர்ப்பவர்களையும் விட மாட்டார்கள் என்றால் இது என்ன விதமான மனநிலை? ஒருவேளை மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து விட்டால் தங்களின் மடைமாற்று நாடகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறதா? திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?
ஆனால், திமுகவின் அத்தனைத் தடைகளையும் தகர்த்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்குக் கிடைப்பதை
பாஜக உறுதி செய்யும். அடக்குமுறைகளாலும், அதிகாரத் துஷ்பிரயோகத்தாலும் எங்களின் மக்கள் பணியைத் திமுகவால் ஒடுக்கிவிட முடியாது!
மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பவர்களையும், நலிவடைந்தோரின் நலன் விரும்பிகளையும் கண்டால் திமுகவிற்கு அப்படியென்ன ஒவ்வாமை என்பது புரியவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பேட்டரி பேக்கில் மெக்னீசியம் கேசிங் செய்யப்பட்டுள்ளது.
- பேட்டரியின் தொழில்நுட்ப விவரங்கள் ரகசியமாக உள்ளது.
லடாக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது Flying Flea C6 எலெக்ட்ரிக் பைக்கை சோதனைக்கு உட்படுத்தி இருந்தது. இந்த நிலையில், புதிய எலெக்ட்ரிக் பைக் பொது சாலைகளில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையானது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ள சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் அடிப்படையில் நகர்ப்புற பயணிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே நகரத்தில் அதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
புதிய Flying Flea C6 இந்தியாவில் இதுவரை நாம் பார்த்த எந்த மின்சார மோட்டார்சைக்கிளை போலல்லாமல் தோற்றமளிக்கிறது. முன்பக்க கர்டர் ஃபோர்க்குகள், பெரிய அலாய் வீல்கள் (17-இன்ச் யூனிட்களை விட பெரியதாகத் தெரிகிறது). ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலுமினிய ஃபிரேம் மற்றும் ஃப்ளோட்டிங் ஸ்டைல் சீட் உள்ளிட்டவை இந்த பைக்கிற்கு ஒரு தனித்துவமான ஈர்ப்பை வழங்குகின்றன.
இத்துடன் வட்ட வடிவ ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் ரியர்-வியூ மிரர்கள் அதன் அழகியலுக்கு சில ரெட்ரோ தோற்றத்தை சேர்க்கின்றன. இந்த பேட்டரி பேக்கில் மெக்னீசியம் கேசிங் செய்யப்பட்டுள்ளது. இது குளிர்ச்சியை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த எடையைக் குறைக்கவும் உதவுகிறது. பேட்டரியின் தொழில்நுட்ப விவரங்கள் ரகசியமாக உள்ளது.
எனினும், இதில் வழங்கப்படும் பேட்டரியின் வரம்பு ஒரு சார்ஜுக்கு சுமார் 100 கிலோமீட்டர்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரப் பயணங்களுக்கு பெரும்பாலும் ஏற்றதாக அமைகிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, Flying Flea C6 ஸ்மார்ட்போன் இணைப்புடன் வட்ட வடிவ ப்ளூடூத்-கனெக்டிவிட்டி கொண்ட TFT டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த பைக்கில் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னெரிங் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய Flying Flea C6 பற்றிய அனைத்து விவரங்களையும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று (03-09-2025) காலை 05.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி, காலை 08.30 மணி அளவில், வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை முதல் 09-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே நேரம் இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 7-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






