பிரதமரின் தாயாரை அவமதித்த ஆர்.ஜே.டி. கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்

முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா?
பிரதமரின் தாயாரை அவமதித்த ஆர்.ஜே.டி. கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்
Published on

பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு இண்டி கூட்டணியைச் சேர்ந்த RJD கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இண்டி கூட்டணியினர் பிஹாரில் நடத்திய கூட்டத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றியும் அவரது தாயார் குறித்தும் முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஒருவரை அரசியல் ரீதியாகத் தாக்க அவரது அன்னையை இழிவுபடுத்தி ஆனந்தமடையும் குரூரப் போக்கு எவ்வளவு கொடூரமானது? பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா என்ன?

பூவலகத்திலிருந்து மறைந்தவர்களைத் தெய்வமாகப் பார்க்கும் வழக்கம் நம் தாய்த்திருநாட்டில் தொன்று தொட்டு இருக்கும் வேளையில், மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா? வயதான பெண்மணியைத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் இழிவுபடுத்தியதை எதிர்த்துக் குரல் கொடுக்காத இந்த இண்டி கூட்டணியினர் தான் நம் இந்திய மகள்களையும் பாரதத் தாயையும் காக்கப் போகிறார்களா?

தற்போது வரை இதற்கு இண்டி கூட்டணித் தலைவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்காதது, பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களை இழிவுபடுத்துவதில் தவறில்லை என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது என்பதைத் தான் இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.

மாண்புமிகு பிரதமரின் மறைந்த தாயாரை அவமதித்த இச்சம்பவத்திற்கு உடனடியாக இண்டி கூட்டணித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து பாரதத்தின் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com