என் மலர்
நீங்கள் தேடியது "new flyover"
- ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.
- 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் மாநகராட்சி சார்பில் புதிய பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் நொளம்பூர்- மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே சன்னதி முதல் குறுக்கு தெருவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பணி சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது. 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை அடுத்த வாரம் திறந்து வைக்கிறார்.
இந்த பாலம் நொளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், பாடி, முகப் பேர், அயப்பாக்கம், திரு வேற்காடு, அடையாளம் பட்டு, அத்திப்பட்டு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மிக முக்கிய போக்குவரத்து நிறைந்த பாலம் ஆகும்.
அங்கு சிறு பாலங்கள் கட்டப்பட்டு இருந்ததால் மழைக்காலத்தில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து விடும். அதனால் மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் அப்பகுதி மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும்.
நீண்ட காலமாக மக்கள் புதிய பாலம் கட்டக்கோரி போராடி வந்த நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு விடியல் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து வளரசவாக்கம் மண்டல குழு தலைவர் வி.ராஜன் கூறியதாவது:-
புதிய பாலம் என்பது 143, 144 வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்பெனி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயன் அடைவார்கள்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் கூவம் ஆற்றின் குறுக்கே ஏற்படும் வெள்ளப் பாதிப்பில் இருந்து புதிய பாலம் மக்களை பாதுகாக்கும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சீராகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., காரம்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலம் அர்ப்ப ணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.
- தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியீடு.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய மேம்பாலத்திற்கான கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார்.
அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் மோதியதால் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
- மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலத்தில் தொடர் விபத்துக்கள் நடப்பதை தவிர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கோவை:
கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.253கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலமானது ஜூன் மாதம் 11ம் தேதி திறக்கப்பட்டது.
பாலம் திறக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே அடுத்தடுத்து 2 விபத்துகள் நடந்தது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதன்படி போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், மேம்பாலத்தில் ஆய்வு கொண்டதை தொடர்ந்து கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கும் பணியும், பேரி கார்டுகள் அமைக்கும் பணியும், ஒளிரும் பட்டைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. இதன் காரணமாக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.
பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.
மேலும் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாலத்தில் 10 இடங்களில் வேக தடைகள் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததை அடுத்து மூடப்பட்டு இருந்த பாலம் கடந்த 9-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் 3-வது முறையாக இன்று காலை இந்த மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகி விட்டார்.
கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது51). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் மேம்பாலத்தின் வழியாக வேலைக்கு சென்றார்.
அவர் சுங்கம் பகுதி அருகே சென்ற போது, மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட வேகத்தடையில் ஏறியதில் வாகனம் நிலை தடுமாறியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலத்தில் தொடர் விபத்துக்கள் நடப்பதை தவிர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.






