என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பா.ம.க. நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம்.
    • திமுக அரசு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம்.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1267 நாள்களாகும் நிலையில், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள் வாழவே கூடாது; முன்னேறவே கூடாது என்று வன்மம் கொண்டு திமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

    வன்னியர்களுக்கு இன்று வரை முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கான காரணம் திமுக அரசு தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ஆம் ஆண்டு தொடங்கி 1989-ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான அறப் போராட்டங்களை மருத்துவர் அய்யா அவர்கள் முன்னெடுத்தார். அந்தப் போராட்டங்களின் ஒரு கட்டமாக 1987-ஆம் ஆண்டு இதே நாளில் ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரலாறு காணாத ஆதரவு பெருகியதை தாங்கிக் கொள்ள முடியாத அன்றைய அரசு காவல்துறையை ஏவி நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டாந்தடி தாக்குதலில் அப்பாவி வன்னியர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தங்களின் இன்னுயிரையே ஈந்த அவர்களின் தியாகம் மிகப்பெரியது. அவர்களை நான் வணங்குகிறேன்.

    அதன்பிறகும் நீடித்த போராட்டத்தின் ஓர் அங்கமாக 1989-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் புறக்கணிப்பின் காரணமாகவே 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதற்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டிய திமுக, ஆட்சிக்கு வந்த இரு வாரங்களிலேயே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது 12.12.1988ஆம் நாள் ஆளுனரால் பிறப்பிக்கப்பட்டிருந்த அரசாணையை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மருத்துவர் அய்யா அவர்களை அழைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். அது மட்டும் செயல்வடிவம் பெற்றிருந்தால், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரதிநிதித்துவம் பெற்றிருப்பார்கள். ஆனால், வேறு சிலரின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக தமது முடிவை மாற்றிக் கொண்ட அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுடன் மேலும் 107 சாதிகளைச் சேர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். அன்றைக்கு அழுக வைத்துக் கொடுக்கப்பட்ட கனி தான் இன்று வரை வன்னிய மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கு காரணமாகும்.

    இட ஒதுக்கீடு பெற்று 32 ஆண்டுகளாகியும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்களுக்கு முன்னேற்றம் கிடைக்காததால் தான் 2020-21ஆம் ஆண்டில் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்து, அதிமுக ஆட்சியில் 10.50% உள் இட ஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால், சமூகநீதி பகைவர்கள் சிலர் அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கால் வன்னியர் ஒட ஒதுக்கீடு செல்லாமல் போனது. எனினும், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு பெற எல்லா உரிமைகளும் உள்ளது என்று கூறி, உரிய தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2022 மார்ச் 31-ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

    தமிழக அரசு நினைத்திருந்தால், அதிகபட்சமாக ஒரு மாதத்தில் தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாள்களாகியும் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. இதற்கான காரணம் இயலாமை அல்ல... வன்னியர்களுக்கு எந்தக் காலத்தில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அவர்கள் கல்வியும், வேலைவாய்ப்பும் பெறாமல் சமூகத்தின் அடிமட்டத்திலேயே கிடக்க வேண்டும் என்ற வன்மம் தான் இதற்கு காரணமாகும்.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை திமுக பல தருணங்களில் வெளிப்படையாக உணர்த்தியிருக்கிறது. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் வன்னியர் இடஓதுக்கீட்டுச் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட போது, அதை திட்டமிட்டே திமுக புறக்கணித்தது. அதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வன்னியர் அல்லாத பிற சமூகங்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை செய்தது. வன்னியர் மீதான அந்த வன்மத்தின் தொடர்ச்சியாகவே மூன்றரை ஆண்டுகளாகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திராவிட மாடல் அரசு மறுத்து வருகிறது.

    உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த நாள் முதல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்து வந்த திமுக அரசு, இப்போது சாதிவாரி மக்கள்தொகை விவரம் இல்லாததால் தான் இடஒதுக்கீடு வழங்க முடியவில்லை என்று கூறுகிறது. வன்னியர்களுக்கு இடஓதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள் தொகை விவரங்களைத் திரட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறவில்லை. ஒருவேளை மக்கள்தொகை விவரங்கள் தேவை என்றாலும் கூட அதை சேகரிப்பது தான் தமிழக அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கடமை ஆகும். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க போதிய சாதிவாரி விவரங்கள் இல்லாத நிலையில், அதற்காக அமைக்கப்பட்டிருந்த நீதியரசர் நாகமோகன்தாஸ் ஆணையம் 63 நாள்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 165 நாள்களில் ஒட்டுமொத்த அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு நினைத்திருந்தால் அதை விட குறைவாக காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட வழங்கியிருக்க முடியும். ஆனால், வன்னியர் மீதான வெறுப்புணர்வு தான் அதை தடுத்து விட்டது.

    பா.ம.க. நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம். ஆனால், திமுக அரசு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் இப்போது சிறை நிரப்பும் போராட்டம் என்ற ஆயுதத்தை நாம் கைகளில் எடுத்திருக்கிறோம். இனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்காமல் ஒருபோதும் பாமக ஓயாது.

    உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாள்கள் ஆகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும், இனியாவது சமூகநீதி துரோகத்தைக் கைவிட்டு வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். நான் உள்ளிட்ட பாம..க. மூத்த தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்கும் இடங்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். குறைந்தது 5 லட்சம் பேராவது இந்தப்போராட்டத்தில் பங்கேற்று சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும். எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பாட்டாளி சொந்தங்களே.... வாருங்கள் களம் காணுவோம், வன்னியர் சமூகநீதியை வென்றெடுப்போம்! என்று கூறியுள்ளார். 

    • எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது என நிதின் கட்கரி பேசினார்.
    • அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன என நிதின் கட்கரி பேசினார்.

    இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.

    இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.

    குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இதுகுறித்து விளக்கம் அளித்த நிதின் கட்கரி, "எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "துபாயின் சாலைகளை மேம்படுத்துவதற்கு நிதின் கட்கரியை 6 மாதங்கள் அனுப்புங்கள் என அந்நாட்டு இளவரசர் பிரதமர் மோடியிடம் கேட்டார். அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன" என்று தெரிவித்தார்.

    துபாய் சாலைகளை விட இந்தியாவின் சாலைகள் தரமாக உள்ளதாக நிதின் கட்கரி பேசியது இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    • கடந்த மாதம் 23-ந்தேதி அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
    • இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அக்காள்-தம்பி பாசம் குறித்து பல சினிமா படங்கள் வந்துவிட்டன. கள்ளக்காதல் வைத்திருக்கும் அக்காள் கணவரை திருத்துவதற்காக அவருடைய மைத்துனர் படம் முழுவதும் போராடுவார். முடிவில் அனைத்தும் சுபமாக முடியும்.

    இதுபோன்ற காட்சிகளை பல படங்களில் பார்த்து இருப்போம். ஆனால் உண்மையில் உத்தரபிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் செய்த செயல் அட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா! என்று கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் கமலுபீர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவ் குமார் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஒரே ஊரில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தபோது அவருக்கும், அவருடைய கொழுந்தியாள் கல்பனாவுக்கும் (19) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இவர்களது விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், கடந்த மாதம் 23-ந்தேதி அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    கேசவ் குமாரின் இந்த செயல், அவருடைய மைத்துனரான ரவீந்திரனுக்கு (22) ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அக்காள் கணவர் என்று நம்பி வீட்டுக்குள் விட்டதால், நம் தங்கையுடனே கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டாரே என்று கருதினார்.

    எனவே அக்காள் கணவரை பழிவாங்க, அவரது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என ரவீந்திரன் திட்டமிட்டார். அவர் ஏற்கனவே கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்தார். அக்காள் கணவரை பழிவாங்க, அன்று மறுநாளே அவரது தங்கையை அழைத்துக்கொண்டு ரவீந்திரனும் வீட்டைவிட்டு ஓடினார்.

    இதுகுறித்து இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு ஜோடிகளையும் தேடிவந்த நிலையில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    இதையடுத்து இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த சமரசத்தை அடுத்து இரு ஜோடிகளும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

    பிரச்சனை சுமுகமாக முடிந்தாலும், பாதிக்கப்பட்டது என்னவோ கேசவ் குமாரின் மனைவிதான். இந்த விவகாரம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!
    • யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!

    சென்னை:

    தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்படி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்!

    உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்!

    சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!

    யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!

    அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்!

    பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அ.தி.மு.க. தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்!

    வாழ்க பெரியாரின் புகழ்! என்று கூறியுள்ளார். 



    • அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதமர் மோடி!

    பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.
    • மதியம் 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    சென்னை:

    சென்னையில் இருந்து ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த ஆண்டு ஆயுதபூஜை வரும் அக்டோபர் 1-ந்தேதியும், தீபாவளி அக்டோபர் 20-ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊருக்கு செல்பவர்கள் பஸ் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்தனர்.

    பஸ்களை விட ரெயில்களில் ஏராளமானோர் பயணிப்பதால், ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன. இதனால் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரெயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும் எனவும், விரைவில் அதற்கான அறிவிப்பை தெற்கு ரெயில்வே வழங்க வேண்டும் எனவும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

    இந்த நிலையில், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, நாகர்கோவில்-தாம்பரம், சென்னை சென்டிரல்- போத்தனூர், சென்டிரல்- செங்கோட்டை, எழும்பூர்-நெல்லை, எழும்பூர்-தூத்துக்குடி, நாகர்கோவில்-சென்டிரல் ஆகிய 6 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * நாகா்கோவிலில் இருந்து வரும் 28, அக்டோபர் 5,12,19,26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை தோறும்) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29, அக்டோபர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை தோறும்) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    * நெல்லையில் இருந்து வரும் 25, அக்டோபர் 2,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06070), மறுநாள் காலை 10 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வரும் 26, அக்டோபர் 3,10,17,24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06069), மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * தூத்துக்குடியில் இருந்து வரும் 29, அக்டோபர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06018), மறுநாள் காலை 10.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வரும் 30, அக்டோபர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06017), அதேநாள் இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    * நாகர்கோவிலில் இருந்து வரும் 30, அக்டோபர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06054), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வரும் அக்டோபர் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06053), அதேநாள் இரவு 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 25, அக்டோபர் 2,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06123), மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வரும் 26, அக்டோபர் 3,10,17,24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06124), மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24, அக்டோபர் 1,8,15,22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06121), மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 25, அக்டோபர் 3,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06122), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான காலையில் இருந்து பயணிகள் காத்திருந்தனர். 

    • நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர்.
    • தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர்.

    சென்னை:

    தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்' ஆக தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டு அறிவித்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

    காலத்தை வென்ற கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்!

    நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர். தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர். மொழியும், நிலமும், மானமும், அறிவும் நமது பிறப்புரிமை என்று முரசறைந்தவர் எங்கள் பெரியார், எல்லோருக்கும் பெரியார், என்றென்றைக்கும் பெரியார்! என்று கூறியுள்ளார். 



    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். வீடு மாற்றம், ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். வெளிநாட்டுப் பயண வாயப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு.

    மிதுனம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் உருவாகலாம். நண்பர்கள் உதவுவதாகச் சொல்லி விட்டுக் கடைசி நேரம் கையை விரிக்கலாம்.

    கடகம்

    வளர்ச்சி கூடும் நாள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். பயணம் பலன் தரும்.

    சிம்மம்

    வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்களைச் சந்திக்க வரலாம். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

    கன்னி

    பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

    துலாம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். ஆதாயம் தரும் விதத்தில் மற்றவர்களின் ஆலோசனை அமையும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி எடுப்பீர்கள்.

    விருச்சிகம்

    பெருமைகள் வந்து சேரும் நாள். சேமிப்பு உயரும். பிற இனத்தாரின் ஒத்துழைப்புடன் தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.

    தனுசு

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்லியதால் பிரச்சனை ஏற்படலாம்.

    மகரம்

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவலொன்று வந்துசேரும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    கும்பம்

    சோதனைகளை வென்று சாதனை படைக்கும் நாள். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வரன்கள் முடிவாகும்.

    மீனம்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். உத்தியோக்தில் இழந்த பதவியை மீண்டும் பெறும் வாய்ப்பு உண்டு.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • குறிஞ்சி நகர், ஆனந்தம் நகர், அம்பாள் நகர், கம்பர் சாலை, தமிழ் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    கொரட்டூர்: அன்னை நகர், டிவிஎஸ் நகர், டிஎன்எச்பி, பாடி, எம்டிஎச் சாலை, பூங்கா சாலை, தாதன்குப்பம், செந்தில் நகர், டீச்சர்ஸ் காலனி, லட்சுமிபுரம், புத்தகரம், விவேகானந்த நகர்.

    ராமாபுரம்: கிரி நகர், குறிஞ்சி நகர், ஆனந்தம் நகர், அம்பாள் நகர், கம்பர் சாலை, தமிழ் நகர்.

    பூந்தமல்லி: பூந்தமல்லி பை-பாஸ் பகுதி, கோல்டன் ஹோம்ஸ் குடியிருப்புகள், எம்டிசி டிப்போ

    பெரம்பூர்: பத்மாவதி நகர், திருமால் நகர், சூரப்பேட்டை மெயின் ரோடு, விஜயலட்சுமி நகர், புருஷோத்தமன் நகர், வெங்கடசாய் நகர், கே.வி.ஆர்.நகர், பாலாஜி நகர், மூர்த்தி நகர், கதைத் தொழுவலி நகர், காஞ்சி நகர், பரிமளம் நகர், டி.எச்.ரோடு, முத்துமாரியம்மன் கோவில் தெரு. 

    • முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
    • இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

    சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

    நச்சுக்களை அகற்றுபவை:

    நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.

    எலும்புகளை வலுவாக்குபவை:

    இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

    கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:

    அசைவ உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டில் இருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும். சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

    ஆரோக்கியமான மேனி:

    பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

    • இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னையிலும் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    தென்னிந்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை , நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    ×