என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையாமல், விந்து வெளியேறுவது, பாலியல் வன்கொடுமை ஆகாது
    • கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத் தண்டனை, 'பாலியல் வன்கொடுமை முயற்சி' என்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் 6 மாதங்களாகக் குறைப்பு

    இந்தியாவின் சில உயர் நீதிமன்றங்கள் அவ்வப்போது சில சர்ச்சை தீர்ப்புகளை வழங்குவது உண்டு. அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து பின்னர் அந்த தீர்ப்புகளை நிறுத்திவைப்பதும் உண்டு. அந்த வகையில் தற்போது சத்தீஸ்கர் நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. 

    அதாவது, பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையாமல், விந்து வெளியேறுவது, பாலியல் வன்கொடுமை ஆகாது; அது 'பாலியல் வன்கொடுமை முயற்சி' மட்டுமே என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு தம்தரி மாவட்டத்தில் நடந்த ஒரு வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    மருத்துவ சான்றுகள் உயிர் பிழைத்த பெண்ணின் கன்னித்திரை சேதமடையாமல் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்தும், பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததாலும், உள்நுழைவு நடந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத் தண்டனையை, 'பாலியல் வன்கொடுமை முயற்சி' என்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் 6 மாதங்களாகக் குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 375-ன் படி ஒரு செயலை பாலியல் வன்கொடுமை என்று உறுதி செய்ய உள்நுழைவு நடந்திருந்தால் மட்டுமே, மிகச் சிறிய அளவிலான உள்நுழைவு இருந்தாலும் அது வன்கொடுமையாகக் கருதப்படும், ஆனால் உள்நுழைவு இல்லாத நிலையில் அதை வன்கொடுமை எனக் கூற முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் யூன் சுக் யோல் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.
    • பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    தென் கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக்யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க் கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மணி நேரங்களிலேயே ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இந்த விவகாரத்தால் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் மீதான வழக்கில் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளித்தது. அதில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் யூன் சுக் யோல் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.

    இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. யூன் சுக் யோல் சட்டவிரோத முயற்சியில் ராணுவம் மற்றும் போலீஸ் படைகளைத் திரட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதாக நீதிபதி ஜீ குய்-யோன் தனது தீர்ப்பில் கூறினார்.

    ஏற்கனவே அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறியது போன்ற பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • படம் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
    • டீசர் நாளை காலை 9.35 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.

    இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை காலை 9.35 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  


    • இன்று தனது 66-வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • "சட்டத்திற்கு மேலானவர் எவருமில்லை" எனப் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கருத்து

    அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அவர் தற்போது வசித்து வரும் நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து 'தேம்ஸ் வேலி'  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த ஆண்ட்ரூவின் 'இளவரசர்' மற்றும் 'டியூக் ஆஃப் யார்க்' போன்ற அரசப் பட்டங்களை மன்னர் சார்லஸ் கடந்த 2025-ஆம் ஆண்டே பறித்துவிட்டார்.

    இன்று தனது 66-வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.  "சட்டத்திற்கு மேலானவர் எவருமில்லை" எனப் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தேம்ஸ் வேலி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    "விசாரணையின் ஒரு பகுதியாக, பொது அலுவலகத்தில் தவறான நடத்தை புரிந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், நார்போக் பகுதியைச் சேர்ந்த 60-களில் இருக்கும் ஒருவரை இன்று கைது செய்துள்ளோம். மேலும், பெர்க்ஷயர் மற்றும் நார்போக்கில் உள்ள முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

    தேசிய வழிகாட்டுதல்களின்படி, கைது செய்யப்பட்ட நபரின் பெயரை நாங்கள் வெளியிட மாட்டோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதால், நீதிமன்ற அவமதிப்பைத் தவிர்க்கும் வகையில் செய்திகளை வெளியிடும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    உதவி தலைமை காவல்துறை அதிகாரி ஆலிவர் ரைட் கூறியதாவது:

    "முறையான மதிப்பீட்டிற்குப் பிறகு, அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இந்தக் குற்றச்சாட்டினை விசாரிப்பதற்காக எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும்போது, எங்களது விசாரணையின் நேர்மையையும், நடுநிலைமையையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் மிகுந்த ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்; இது குறித்த புதிய தகவல்களை தகுந்த நேரத்தில் வழங்குவோம்" என தெரிவித்தார். 

    • இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது
    • அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.

    ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    • கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றால், அவருக்கு 3 மாத சிறைத்தண்டனை
    • வெளிப்படையான காயங்கள் இல்லாதவரை எவ்வளவு வேண்டுமானாலும் வன்முறையில் ஈடுபடலாம்.

    ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான் அரசு பொறுப்பேற்றதில் இருந்து பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக உரிமைகளை நிராகரித்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் தற்போது குடும்ப வன்முறையை தாலிபான் அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

    ஆளும் தாலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா புதிய சட்டத் தொகுப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

    புதிய சட்டத்தின் 9-வது பிரிவின்படி, ஆப்கான் சமூகம், மதத் தலைவர்கள், உயர்குடி, நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள் என நான்கு பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளது.

    ஒரு குற்றத்திற்கான தண்டனை, குற்றவாளி எந்தச் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

    2009-ஆம் ஆண்டு பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை இந்த புதிய சட்டம் ரத்து செய்துள்ளது.

    புதிய சட்டத்தின்படி, ஒரு ஆண் தனது வீட்டில் உள்ள பெண்ணையோ அல்லது குழந்தையையோ தாக்கும்போது, இரத்தம் வராமலோ அல்லது எலும்பு முறிவு ஏற்படாமலோ இருந்தால், அது குற்றமாகக் கருதப்படாது.

    அதாவது, வெளிப்படையான காயங்கள் இல்லாதவரை எவ்வளவு வேண்டுமானாலும் வன்முறையில் ஈடுபடலாம்.

    ஒருவேளை கணவர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதைப் பெண் நீதிமன்றத்தில் நிரூபித்தால், கணவருக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டுமானால், அவருடன் கண்டிப்பாக ஒரு ஆண் வர வேண்டும்.

    மேலும், நீதிபதியிடம் தனது காயங்களைக் காட்டும்போது கூட உடல் முழுவதையும் மூடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றால், அவருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    • அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு.
    • சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

    ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளி நாடுகளில் சொத்துகள் வாங்கியது உள்ளிட்ட நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    இதுகுறித்து அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான ரூ.12,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

    நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியதில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக அனில் அம்பானி மற்றும் அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான டினா அம்பானி ஆகியோ ரிடம் தனித்தனியாக வாக்கு மூலம் பெற அமலாக்கத்துறை முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து இரு வருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த 10 மற்றும் 17-ந்தேதி ஆகிய 2 முறையும் டினா அம்பானி ஆஜராகவில்லை. இதே போல அனில் அம்பானியும் இந்த வாரம் வாக்குமூலம் அளிக்க தவறினார்.

    இந்த நிலையில் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மனை அனுப்பியது. நிதி மோசடி தொடர்பான வழக்கில் வருகிற 26-ந்தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானி ஒரு முறை அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

    அதேநேரத்தில் டினா அம்பானி ஆஜராக புதிய தேதி அளிக்கப்பட்டள்ளதா? என்பது தெளிவாக தெரிய வில்லை. இந்த வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் புனித் கர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வழுவிழக்கக்கூடும்.

    பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.

    மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    21-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    22-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    21-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • நடிகர் தனுஷ், கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சென்னையில் வைத்து சந்தித்தார்.
    • ரசிகர்கள் தனுஷுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்திற்கு `D55' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி `D55' படத்தை பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.

    இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். 'D55' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா, சாய் பல்லவி நடிக்கிறார்கள். இந்த படத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்நிலையில், மாவட்ட வாரியாக தனது ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சென்னையில் வைத்து சந்தித்தார். அப்போது ரசிகர்கள் தனுஷுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இந்த சந்திப்பில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அசைவ உணவு விருந்து, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    • சட்டப்பேரவையில் கோடைக்கால சிறப்பு தொகையை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
    • மருத்துவசெலவுக்கு இந்த நிதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

    தேர்தல் நெருங்குவதால் திமுக அரசு கோடைக்கால சிறப்பு நிதி வழங்கியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோடைக்காலம் வர உள்ளதால் வெயில் காரணமாக ஏற்படும் மருத்துவசெலவுக்கு இந்த நிதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா, அமெரிக்காவின் அறிவிப்பை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ செய்யாமல் மௌனம் காத்துவருகிறது.
    • இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது

    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து தங்களுக்கு தகவலும் வரவில்லை என்றும், அமெரிக்காவைத் தவிர வேறுயாரும் இந்த கூற்றை தற்போது வரை முன்வைக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்து வருகிறது.

    மறுபுறம் இந்தியா, அமெரிக்காவின் அறிவிப்பை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ செய்யாமல் மௌனம் காத்துவருகிறது. இந்நிலையில் மீண்டும், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது என்பதை நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என மாஸ்கோ தெரிவித்துள்ளது.

    வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க உதவுகிறது. 

    ரஷ்ய எரிபொருட்களை வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது என்று நம்புவதற்கு எங்களிடம் எந்த காரணமும் இல்லை. சுதந்திர நாடுகளுக்கு கட்டளையிடும் உரிமையைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரின் கூற்றுகளில் புதிதாக எதுவும் இல்லை" என தெரிவித்தார். 

    இதன்மூலம் தற்போதுவரை இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்பது உறுதியாகிறது. 

    • இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

    திருமலை புரொடக்ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் எழுதி இயக்கிய படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

    கொங்கு வட்டார பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் 'பரோட்டா' முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெ.டி.விமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில், 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' படம் திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. நாளை முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம். 



    ×