என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • செவிலியர் பட்டயப் படிப்பு உதவித்தொகை 184 பழங்குடியின மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.70,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
    • பண்டைய பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமூகங்களுக்கு ரூ.315.44 கோடி செலவில் 7,255 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆதிதிராவிட-பழங்குடியின இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காக அளித்து வரும் ஊக்கங்களால் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 82 சதவீதம் என்பது 91.85 சதவீதமாகவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.55 சதவீதம் என்பது 95.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

    2024-2025-ம் கல்வியாண்டில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., என்.ஐ.எப்.டி. மற்றும் எப்.டி.டி.ஐ. போன்ற தேசியக்கல்வி நிறுவனங்க ளில் 16 பட்டியல் இன மாணவர்கள் இடம்பிடித்தனர். 2025-2026-ம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 135 மாணவர்கள் என உயர்ந்து மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

    ஆதிதிராவிடர்-பழங்குடியினர் பள்ளிகளில் ரூ.456.83 கோடி நிதி ஒதுக்கீட்டில் 868 வகுப்பறைகள் கட்டப்பட்டு கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    3-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.6,604.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் உதவி பெற்று முந்தைய ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6 மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளில் பயின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் ரூ.75.54 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு 440 மாணவர்கள் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் அருமையான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

    முனைவர் பட்ட ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டத்தின்கீழ், ஆதிதிராவிட பழங்குடியினங்களைச் சேர்ந்த 8,886 ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.88.86 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    செவிலியர் பட்டயப் படிப்பு உதவித்தொகை 184 பழங்குடியின மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.70,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    52,255 ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு ரூ.409.68 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டுத் தொழில் முகவர்களாக மேம்படுத்தப்பட்டுள்ளனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கம் காரணமாக இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் வாழும் ஆதிதிராவிட பழங்குடியினரில் 43 பேர் தொழில் முனைவர்களாக உயர்ந்து உள்ளனர். அவர்களுக்கு ரூ.60.80 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.49.35 கோடி மானியம் வழங்கப்பட்டு 1,042 மகளிர் நில உடைமையாளராக மாற்றப்பட்டனர்.

    வீடற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினமக்களுக்கு மொத்தம் 3,09,707 இலவச வீட்டுமனை இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், 8,535 உட்கட்டமைப்புப் பணிகள் ரூ.910 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ.117.27 கோடியில் 120 கிராம அறிவு மையங்களும், ரூ.40 கோடி யில் 52 அறிவுச் சுடர் மையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    பண்டைய பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமூகங்களுக்கு ரூ.315.44 கோடி செலவில் 7,255 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    பழங்குடியின மாணவர்கள் கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கும் வகையில் 117.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 120 கிராம அறிவுசார் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 125.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 126 அறிவு மையங்கள் கட்டப்படுகின்றன.

    வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட பழங்குடியினர் 22,244 பேர்களுக்கு ரூ.287.47கோடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 586 பேருக்குக் கருணை அடிப்படையில் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

    தூய்மைப் பணியாளர்களுக்கு 90 சதவீதம் அரசு மானியத்துடன் 1,000 வீடுகள் ரூ.110 கோடி செலவில் வழங்கப்பட்டன. மேலும், 30,000 வீடுகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 15.11.2025 அன்று 870 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்திலும் பணியாற்றும் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 213.92 கோடி செலவில் மூன்று வேளையும் உணவு வழங்கும் மகத்தான திட்டத்தை நிறைவேற்றி தாயுமானவர் எனப் போற்றப்படுகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து வகையிலும் ஆதிதிராவிட பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்களால் இந்திய அளவில் தமிழ்நாட்டின் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் சிறப்பான முறையில் முன்னேற்றம் கண்டு வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
    • இன்னும் பலர் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைந்திட வாழ்த்துகிறோம்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

    கல்வியால் சிறக்கும் நமது அரசுப் பள்ளி மாணவர்களைச் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற வைத்துப் பூரிப்படைகிறோம்.

    2021-22-இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாடல் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

    அதனால்தான், கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்களும், ஆதி திராவிடர் (37) மற்றும் பழங்குடியினர் (169) பள்ளிகளைச் சேர்ந்த 206 மாணவர்களும், 93 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில் மேற்படிப்பு பயிலுகின்றனர். அதில் 41 பேர் IIT-களிலும், 22 பேர் முழு உதவித்தொகையுடன் வெளிநாடுகளிலும் பயில்கின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடி-யில் நுழைவதற்கான முதற்படியை அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்களும் - ஆதி திராவிடர் (13) மற்றும் பழங்குடியினர் (55) பள்ளிகளைச் சேர்ந்த 68 மாணவர்களும் வெற்றிகரமாகக் கடந்துள்ளனர்.

    பெரும்பாலும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த இந்த மாணவர்களின் கனவுகளை அடைவதற்குத் துணை நிற்கின்ற பெருமையோடு, இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் பலர் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைந்திட வாழ்த்துகிறோம்! என்று கூறியுள்ளார். 

    • சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
    • மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தரங்க விழாவில் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.

    இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.

    கொரட்டூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தரங்க விழாவில் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.

    விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, "அரசியலை தாண்டி ஸ்டாலின் ஐயா மேல் மதிப்பும், மரியாதையும் இருக்கு. இதுவரை ஒரு இடத்தில் கூட முகம் சுளிக்கிற மாதிரியோ, யாரையாவது கடிந்தோ நான் பார்த்ததில்லை. பண்பாகவும், அன்பாகவும் நடந்து கொள்வார். மனிதநேயம் மிக்கவர்" என்று தெரிவித்தார். 

    • நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் கோகிலபாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் சிலர் கோகிலபாண்டியனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 16ந் தேதி கோகிலபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தன்மீது முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

    இதில் சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் கோகிலபாண்டி யனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் பொய் புகார் அளித்தது உறுதியானது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோகிலபாண்டியனின் தற்காலிக பணி நீக்கம் பணிக்காலமாக கருதி அவருக்கு ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

    விசாரணை முடிந்த நிலையில் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் பாசில்முகமது தீர்ப்பளித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொரு மாவட்ட கல்வி அலுவலர் கணேசுக்கு 1½ ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.

    மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி, ஹெலன் மெட்டில்டா ஆகிய 3 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட ஆசிரியர் கோகிலபாண்டியனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. ஆசிரியர் கோகிலபாண்டியன் தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராஜகோபாலன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

    • வனத்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
    • இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஊட்டி:

    ஊட்டி அருகே உள்ள சின்ன காடிமந்து பகுதியை சேர்ந்தவர் புஷ்தாள் குட்டன்(57). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது.

    அப்போது அங்கு மறைந்திருந்த புலி, புஷ்தாள் குட்டனை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வனப்பகுதிக்குள் உடலில் காயங்களுடன் கிடந்த அவரது உடலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் ஊட்டி சுற்றுவட்டார பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து, காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே புலி தாக்குதலை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சோலூர் சந்திப்பு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

    • ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

    தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.

    * 6 மாத கால முதலமைச்சராக இருந்த நான் ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன்.

    * ஜெயலலிதா இல்லாதபோது நான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை.

    * என்னை கட்டாயப்படுத்தி தான் முதலமைச்சராக அமர வைத்தனர்.

    * 3-வது முறையாக கட்டாயத்தின் அடிப்படையில்தான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.

    * முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

    * அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என வலியுறுத்தி வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
    • தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலி.

    பெண்கள் முன்னேற்றம், ஏழை எளிய மக்களின் நலன், சமூக நீதியை நிலை நாட்டிட பல முக்கிய நலத்திட்டங்களை முன்னெடுத்து, தமிழக மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்தவர்.

    துணிவு, தெளிவு, தீர்மானமான முடிவு மற்றும் பொதுச்சேவைக்கான அர்ப்பணிப்பு என தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த, அவரது சீரிய பணிகளையும் தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கை முழக்கமிட்டனர்.
    • புதிய எப்.சி. கட்டண உயர்வை 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடக்கிறது.

    சென்னை:

    சி.ஐ.டி.யு. சென்னை மாவட்டம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது. கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. தலைவர் கபாலி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தேவாரம் ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது.

    13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் மீட்டர் கட்டணத்தை உடனே நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கை முழக்கமிட்டனர். புதிய எப்.சி. கட்டண உயர்வை 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடக்கிறது.

    இதற்கிடையில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைகள் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் போலீசார் கைது செய்தாலும் போராட்டம் நீடிக்கும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்க மாதம் ரூ.2000 வழங்கப்படும்.
    • விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    தி.மு.க. ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்வு காரணமாக விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது.

    * அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.

    * ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.

    * வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்க மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

    * 12-ம் வகுப்பு வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    * தெருவோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

    * மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.8,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.

    * விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீய சக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள்.
    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம்.

    மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள்.

    * தீய சக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள்.

    * முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம்.

    * தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மா ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம்.
    • காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது.

    சென்னை:

    பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களின் பேராதரவுடன் தனியொரு பெண்ணாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடங்கி ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது வரை 360 டிகிரியிலும் மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட, 'அம்மா' என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில், அவரது பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது.

    மாணவர்களுக்கு சைக்கிள் முதல் லேப்டாப் வரை பல்வேறு பொருட்கள் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தைகள் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் என அம்மா ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம். காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது.

    அத்தகைய புகழ்மிக்க தமது ஆட்சியில் போக்குவரத்துத்துறை, ஊரகத்தொழில்கள் துறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை என்ற நான்கு முக்கியத் துறைகளின் அமைச்சராக என்னைப் பொறுப்பேற்கச் செய்து மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த புரட்சித்தலைவி அம்மா அவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து அகமகிழ்வேன்! என்று கூறியுள்ளார். 



    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.
    • சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தார்.

    கட்சி கொடியை ஏற்றி வைத்த அவர், சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற பெயரிலான அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.

    ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக் வெட்டப்பட்டது. இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

    ×