என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஆதிதிராவிட - பழங்குடியின மக்கள் முன்னேற்றம்: தமிழக அரசு பெருமிதம்
- செவிலியர் பட்டயப் படிப்பு உதவித்தொகை 184 பழங்குடியின மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.70,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
- பண்டைய பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமூகங்களுக்கு ரூ.315.44 கோடி செலவில் 7,255 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆதிதிராவிட-பழங்குடியின இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காக அளித்து வரும் ஊக்கங்களால் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 82 சதவீதம் என்பது 91.85 சதவீதமாகவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.55 சதவீதம் என்பது 95.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
2024-2025-ம் கல்வியாண்டில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., என்.ஐ.எப்.டி. மற்றும் எப்.டி.டி.ஐ. போன்ற தேசியக்கல்வி நிறுவனங்க ளில் 16 பட்டியல் இன மாணவர்கள் இடம்பிடித்தனர். 2025-2026-ம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 135 மாணவர்கள் என உயர்ந்து மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் பள்ளிகளில் ரூ.456.83 கோடி நிதி ஒதுக்கீட்டில் 868 வகுப்பறைகள் கட்டப்பட்டு கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
3-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.6,604.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் உதவி பெற்று முந்தைய ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6 மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளில் பயின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் ரூ.75.54 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு 440 மாணவர்கள் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் அருமையான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
முனைவர் பட்ட ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டத்தின்கீழ், ஆதிதிராவிட பழங்குடியினங்களைச் சேர்ந்த 8,886 ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.88.86 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
செவிலியர் பட்டயப் படிப்பு உதவித்தொகை 184 பழங்குடியின மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.70,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
52,255 ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு ரூ.409.68 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டுத் தொழில் முகவர்களாக மேம்படுத்தப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கம் காரணமாக இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் வாழும் ஆதிதிராவிட பழங்குடியினரில் 43 பேர் தொழில் முனைவர்களாக உயர்ந்து உள்ளனர். அவர்களுக்கு ரூ.60.80 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.49.35 கோடி மானியம் வழங்கப்பட்டு 1,042 மகளிர் நில உடைமையாளராக மாற்றப்பட்டனர்.
வீடற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினமக்களுக்கு மொத்தம் 3,09,707 இலவச வீட்டுமனை இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், 8,535 உட்கட்டமைப்புப் பணிகள் ரூ.910 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ.117.27 கோடியில் 120 கிராம அறிவு மையங்களும், ரூ.40 கோடி யில் 52 அறிவுச் சுடர் மையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
பண்டைய பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமூகங்களுக்கு ரூ.315.44 கோடி செலவில் 7,255 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பழங்குடியின மாணவர்கள் கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கும் வகையில் 117.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 120 கிராம அறிவுசார் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 125.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 126 அறிவு மையங்கள் கட்டப்படுகின்றன.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட பழங்குடியினர் 22,244 பேர்களுக்கு ரூ.287.47கோடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 586 பேருக்குக் கருணை அடிப்படையில் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.
தூய்மைப் பணியாளர்களுக்கு 90 சதவீதம் அரசு மானியத்துடன் 1,000 வீடுகள் ரூ.110 கோடி செலவில் வழங்கப்பட்டன. மேலும், 30,000 வீடுகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 15.11.2025 அன்று 870 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்திலும் பணியாற்றும் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 213.92 கோடி செலவில் மூன்று வேளையும் உணவு வழங்கும் மகத்தான திட்டத்தை நிறைவேற்றி தாயுமானவர் எனப் போற்றப்படுகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து வகையிலும் ஆதிதிராவிட பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்களால் இந்திய அளவில் தமிழ்நாட்டின் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் சிறப்பான முறையில் முன்னேற்றம் கண்டு வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






