என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    05-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.
    • முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது.

    ரெயில்களில் சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செல்போன் செயலி வருகிற 1-ந் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரெயில்வே துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் ரெயில் நிலையத்திற்கு நேரில் சென்று டிக்கெட் எடுக்கவும், வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்யும் நிலை இருந்தது. தற்போது அனைத்தும் செல்போனில் இருந்தபடி மேற்கொள்ளும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் நவீன தொழில்நுட்பம் ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரங்கள் ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டன. பின்னர் யூ.டி.எஸ். என்ற செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி வந் தது. பயணம் செய்யும் ரெயில் எந்த ரெயில் நிலையத்தில் உள்ளது. எங்கு வந்து கொண்டுள்ளது என்பதை அறிவதற்காக என்.டி.இ.எஸ். என்று சொல்லப்படும் தேசிய ரெயில் விசாரணை சேவை இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான புகார்கள் குறித்து டிக்கெட் பரிசோதகர் அல்லது ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் புகார் அளிக்கும் நிலை இருந்தது. தற்போது ரெயில் மதாத் எனப்படும் இணைய தளம், செல்போன் செயலி மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.

    தற்போது டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அந்த சேவையையும் பெற முடியும். இவ்வாறாக பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முன்பதிவு டிக்கெட், சாதாரண டிக்கெட், குறைகளை பதிவு செய்ய, புகார் தெரிவிக்க, இருந்த இடத்திலேயே உணவு பெற, சலுகை கட்டண டிக்கெட் ஆகிய அனைத்து சேவைகளும் ரெயில் ஒன் என்ற செயலி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த செயலி கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் இந்த செயலி மூலம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது. அதாவது யூ.டி.எஸ். செயலி ஒவ்வொரு கட்டமாக செயலிழக்க செய்யப்பட உள்ளது. முதலில் புதிதாக சீசன் டிக்கெட் பெறுவது, சீசன் டிக்கெட் புதுப்பித்தல், புதிய பதிவு ஆகியன 1-ந் தேதிக்கு பின்னர் செய்ய முடியாது. தொடர்ந்து பிளாட்பாரம் டிக்கெட் பெறுவது, ஆர்-வாலட் என்று சொல்லப்படும் பதிவு செய்த பயணியின் கணக்கில் உள்ள தொகையை ரீ-சார்ஜ் செய்வது ஆகியன நிறுத்தப்படும். படிப்படியாக மேற்கொள்ளப் டும் இந்த மாற்றங்கள் முழுமையடையும் வரை பிளே ஸ்டோரில் இந்த செயலி செயல்பாட்டில் இருக்கும்.

    ஆர்-வாலட்டை பொறுத்தமட்டில், மின்சார ரெயில்கள், பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகையை பிரிபெய்ட் போல ரீ-சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலிக்கு மாறும் போது அவர்கள் கணக்கில் உள்ள ஆர்-வாலட் தொகை அப்படியே இருக்கும். அந்த தொகையை பயணிகள் ரெயில் ஒன் செயலியில் பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே அனைத்து பயணிகளும் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தற்போது வரை 22 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
    • சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

    இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக் கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட் சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

    இணையதளம் வழியாக வாக்காளர் பெயர் சேர்க்க 5.74 லட்சம், நீக்கம் கோரி 15,935, திருத்தம் கோரி 4.38 லட்சம் என 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி இன்று நிறைவு பெறுகிறது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. அதில் உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரடடை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

    நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.

    66 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று நீக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 22 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

    அதன்படி பார்த்தால் சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் இரட்டை பதிவுகளை வைத்திருக்கலாம் என்று தேர்தல் கமிஷன் நம்புகிறது.

    அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. 

    • மாஞ்சோலை தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்க தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது.
    • இந்த தேர்தலில் பரமக்குடி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

    மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாட்டுக்கு பின் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. மாஞ்சோலை தொழிலாளர்களை தி.மு.க. அரசு விரட்டி அடிக்கிறது. அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், பஸ் வசதி, ரேஷன் பொருட்களை வழங்கவில்லை. மாஞ்சோலை தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்க தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது. மாஞ்சோலையின் தற்போதைய நிலை குறித்து விசாரணை செய்ய வக்கீல் ஆணையம் அமைக்க ஐகோர்ட்டில் முறையிட இருக்கிறோம்.

    10 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள கட்சியினர்கூட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து, 36 நாட்களாக காத்து கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அந்த சமயத்தில் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். சட்டசபை தேர்தலுக்கு பின்பு தி.மு.க. ஆட்சிக்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும். 2026-ல் ஒரு கட்சி மட்டுமே ஆட்சியில் அமரக்கூடாது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்போம். அதனை கொடுக்கும் கூட்டணியில் அங்கம் வகிப்போம். வாக்குகளை அளித்து விட்டு, கோரிக்கைக்காக கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என நினைக்கிறோம்.

    கூட்டணி ஆட்சி இல்லை என்றால் அந்த ஆட்சி தமிழக மக்களின் நல்வாழ்வுக்கான ஆட்சியாக இருக்காது. எனவே, கூட்டணி ஆட்சி அமைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி அரசாக இருந்தால்தான் அது மக்களுக்கான அரசாக இருக்கும். அமெரிக்காவின் ஒப்பந்தத்தால் இந்தியாவில் வேளாண் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் பாதிப்படையும். அமெரிக்காவின் உத்தரவுக்கு ஏன் இந்தியா அடிபணிகிறது? என தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    கடந்த தேர்தலில் கூட்டணி வைத்ததால் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த தேர்தலில் பரமக்குடி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

    முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. மயானம், சாலை வசதிகள் இல்லை. இந்நிலை மாற வேண்டும். தனித்தொகுதிகளில் புதிய தமிழகம்தான் போட்டியிட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. யாரை தோற்கடிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (11.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    நங்கநல்லூர்: ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, ஏரிக்கரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், நீலமேகம் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ஏழுமலை தெரு, ஏஜிஎஸ் காலனி, பாலாஜி நகர், சிவப்பிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, சிவசுப்ரமணியன் தெரு, அம்பிகாபதி தெரு, ராமலிங்க நகர், குப்புசாமி தெரு, கங்கை தெரு, சோக்காயில்லா தெரு, யமுனை தெரு, வைகை தெரு, சொக்கநாதன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராமன் தெரு, சதாசிவம் நகர், ராம் குமார் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    ராயபுரம்: எம்.சி.ரோடு, கல்லறை சாலை, பி.வி.கோவில், ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆடம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்காரா கார்டன், மீனாட்சி அம்மன் பேட்டை, டோபி கானா தெரு, வைகுண்ட நாடார் தெரு, சோமுசெட்டி அனைத்து தெருக்கள், கல்மண்டபம் சாலை, வெங்கடேசன் 1 முதல் 4வது தெரு, அம்மன் கோவில் தெரு 1 முதல் 8-வது தெரு வரை, ராஜகோபால் தெலு, பஜனை கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, சோலையப்பன், நல்லப்ப வாத்தியார் தெரு, வள்ளுவன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    • 1967 வரை கங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, பிறகு வர முடிந்ததா?
    • எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது.

    திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அண்மைய காலமாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இதனிடையே சில நாட்களுக்கு முன்பு பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ""தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சுமூகமாகத்தான் இருக்கிறோம். எந்தவிதமான இழுபறியும் இல்லை. காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும், ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பம். நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கும் அளவிற்கு தி.மு.க. தலைவருக்கு பெரிய மனது உள்ளது. அதேபோல் ஆட்சியில் பங்கு தரும் மனசும் அவருக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டமாக பேசியுள்ளார்.

    புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு உயிரை வாங்குகிறார்கள். 100 இடங்களில் வென்று கலைஞர் முதல்வராக இருந்தாரே, ஆட்சியில் பங்கு கொடுத்தாரா? 150 இடங்களில் திமுக ஜெயிக்கும் போது எப்படி கொடுக்கும்?

    நீங்கள் வேண்டுமென்பதை கேளுங்கள்; செய்து தருகிறோம்; எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது 1967 வரை கங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, பிறகு வர முடிந்ததா? திமுகவை வெல்ல ஒருவர் பிறந்து வர வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
    • இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.

    இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

    இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, "இன்றைக்கு சேப்பாக்கத்தில விசிலுக்கு தடை பண்ணுவாங்க. நாளைக்கு கண்டக்டருக்கு விசிலுக்கு பதிலா வேற கொடுப்பாங்க... அப்பறமா போலீஸ்கிட்ட இருந்து விசில் எல்லாம் பிடுங்கிவாங்க... ஆனா எங்க பசங்க விசில் இல்லாம கையாலே விசில் அடிப்பாங்க" என்று தெரிவித்தார். 

    இன்று இவரது உடலை அடக்கம் செய்ய இவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து (74). அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து உதவி தலைமை ஆசிரியராக உயர்வு பெற்ற இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றார்.

    சிறந்த இறகு பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டு வீரர். மிதிவண்டி ஓட்டுவதில் விருப்பம் கொண்டவர்.

    வித்தியாசமான சிந்தனை கொண்ட இவர் இவரது சொந்த கிராமமான முத்தம்பட்டியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் பளிங்கு கற்களில் இவரது படத்துடன் கூடிய கல்லறையை தனக்கு தானே அமைத்துக் கொண்டார்.

    அந்த கல்லறையில் முத்தம்பட்டி ஆறுமுகம் வாரியார், மனைவி மாரியம்மாளின் மகன் காசி, குருசாமி பிச்சமுத்து, உதவி தலைமை ஆசிரியர் பிறப்பு 1.7.1952, இறப்பு .... 20.. என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இவரது விருப்பப்படி, இவர் தனக்குத்தானே கட்டிக் கொண்ட கல்லறையில், இன்று இவரது உடலை அடக்கம் செய்ய இவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

    ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்குத்தானே கல்லறை அமைத்துக் கொண்டு உயிரிழந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வாழப்பாடி பகுதியில் இவரது இறப்பு பேசு பொருளாகியுள்ளது.

    • பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையில் நடைபெற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அண்ணாமலை தரப்பின் புகாரால் இந்த முடிவு எனவும் தேர்தல் வரை அப்பதவியை கூட்டு தலைமையின் கீழ் கொண்டு வரவும் முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    கேசவ விநாயகம் 2015-ம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும்.
    • டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது.

    திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி.-2 தேர்வு நடைபெறாததற்கு நிர்வாகத்திறமை இல்லை என சொல்வதை ஏற்க முடியாது. இந்தியாவிலேயே நிர்வாகத்திற்கு பெயர்போன இயக்கம் தி.மு.க.தான். தமிழ்நாடு தலைசிறந்த நிர்வாகமும், மாநில வளர்ச்சியிலும் முதலிடம் என மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாத்துறையிலும் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று உள்ளது.

    காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிவிட்டது. தி.மு.க. பதில் சொல்லவில்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறி உள்ளார். நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். நாங்கள் கட்டுப்பாடுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும். மாணிக்கம் தாகூர் எம்.பி. தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம்.

    தமிழ்நாடு அரசு அதிகமாக கடன் வாங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஏற்கனவே இருந்த அ.தி.மு.க. அரசு ரூ.5½ லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். அதற்கு ஓராண்டிற்கு வட்டி எவ்வளவு என கணக்கீட வேண்டும். 36,000 முதல் 40,000 கோடி தோராயமாக வரும். புள்ளிவிபரம் என்னிடம் இல்லை.

    மாநில அரசு நிர்வாகத்தில் மூலதனங்களை உருவாக்குவதற்கும், விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அவசியம். முதியோர் ஓய்வூதியம் திண்டுக்கல்லில் மட்டும் கடந்த வாரம் 10 ஆயிரம் நபர்களுக்கு கொடுத்துள்ளோம்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் திண்டுக்கல் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும், தொகுதிக்கு 20 ஆயிரம் பேருக்கும் முதியோர் உதவித்தொகை கொடுத்து இருந்தோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அனைத்தையும் நிறுத்திவிட்டார். 9 லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகையை நிறுத்திய பெருமை அ.தி.மு.க.வை சேரும். தற்போது தான் அதனை சரி செய்து 1 லட்சத்து 10 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து வருகிறோம்." என தெரிவித்தார். 

    • வரும் 28ம் தேதி இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும்.
    • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    டிஎன்பிஏஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு மைய குளறுபடி காரணமாக நேற்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வரும் மார்ச் 15ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 22ல் நடைபெறவிருந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    • நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை.
    • கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும்

    தி.மு.க. கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வையும் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக நீண்ட நாட்களாகவே பேச்சு எழுந்துவருகிறது. ஆனால் பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெற மாட்டோம் என்பது எங்கள் நிலைப்பாடு. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். திருமாவளவனின் இந்த நிலைப்பாட்டால், நீண்ட நாட்களாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவருகிறது. 

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 

    "அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை. டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவரும் பரஸ்பரம் ஆதரவாக நின்றவர்கள். வன்னியர் சங்கக் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்திருக்கிறார்.

    அதேபோல் வி.சி.க கொடியை டாக்டர். ராமதாஸ் ஏற்றி வைத்திருக்கிறார். எனவே அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினால், அவர்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்துவிடும். தேவைப்பட்டால், அவர்கள் சந்தித்து பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணியின் அச்சாணியாக தி.மு.க தான் உள்ளது. தி.மு.க கூட்டணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இணைவதற்கான முடிவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் எடுப்பார். அவரது முடிவே இறுதியானது." என தெரிவித்திருந்தார். 

    தி.மு.க கூட்டணியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இணைவதை ஆதரிக்கும் வகையில் பேசிய செல்வப்பெருந்தகை, இரு தலைவர்களுக்கும் இடையே இருந்த பழைய இணக்கமான சூழலை நினைவுகூர்ந்தார். இதன் மூலம், பா.ம.க, வி.சி.க கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணிப்பதில் பெரிய சிக்கல்கள் இருக்காது என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில், 

    கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும் என்பதை தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை. எனக் குறிப்பிட்டுள்ளார். 

    இதனிடையே செல்வப்பெருந்தகையின் கருத்து குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

    இதுவரை அதுபோன்ற ஒன்று நடைபெறவில்லை. ராமதாஸ் தரப்பும் எங்களிடம் பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினும் அவர்களிடம் பேசவில்லை. இது அவரது கருத்து. சேர்வது என்பது அவரவர் கருத்து. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் எல்லா எதிர் கட்சிகளையும் சேர்த்து தேர்தலை சந்தித்து உள்ளோம். 2006-ல் அப்படி தான் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தோம். நல்லாட்சியும் கொடுத்தோம். தற்போது தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது.

    இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லா கட்சியும் நம்முடன் உள்ளது. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை." என தெரிவித்துள்ளார். 

    ×